மா. அரங்கநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா. அரங்கநாதன்
பிறப்புமா. அரங்கநாதன்
(1932-11-03)3 நவம்பர் 1932
திருவெண்பரிசாரம், கன்னியாகுமரி மாவட்டம்
இறப்பு16 ஏப்ரல் 2017(2017-04-16) (அகவை 84)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
விருதுகள்கலைஞர் விருது, தமிழக அரசு விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

மா. அரங்கநாதன் (நவம்பர் 03, 1931-ஏப்ரல் 16,2017) தமிழக எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம்) கிராமத்தில், மகாதேவன், பார்வதியம்மாள் என்ற பெற்றோருக்கு பிறந்தவராவார், பின்னர் வேலையின் காரணமாக சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டில், பிரசண்ட விகடன் இதழில் எழுதத் தொடங்கியுள்ளார். மேலும் முன்றில் என்ற இலக்கியச் சிற்றிதழையும் நடத்திவந்துள்ளார், 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்த இந்த இதழ் தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தை பெற்றதாகும். இவரது படைப்புகளில் பல, தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்து. இவரது 86 சிறுகதைளை சாந்தி சிவராமன் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். மேலும் இவரது மொத்த படைப்புகளையும் நற்றிணை பதிப்பகம் 2016 ஆம் ஆண்டில் 'மா.அரங்கநாதன் படைப்புகள்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வந்த இவர், சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, பின்னர் புதுச்சேரியில் வசித்துவந்தார். அவரது இறப்பிற்கு பின்னர் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.[1][2]

இலக்கிய படைப்புகள்[தொகு]

  • பொருளின் பொருள் கவிதை ( கட்டுரைத் தொகுப்பு)
  • வீடு பேறு (சிறுகதைத் தொகுப்பு)
  • காடன் மலை (சிறுகதைத் தொகுப்பு)
  • சிராப் பள்ளி (சிறுகதைத் தொகுப்பு)
  • ஞானக் கூத்து (சிறுகதைத் தொகுப்பு)
  • மா.அரங்கநாதன் கதைகள்
  • மா.அரங்கநாதன் கட்டுரைகள்
  • பறளியாற்று மாந்தர் (புதினம்)
  • காளியூட்டு (புதினம்)
  • முன்றில் இலக்கிய சிற்றிதழ்

என மொத்தம் 90 சிறுகதைகள், இரண்டு புதினங்கள் மற்றும் 47 கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருக்கும் தமிழக அரசின் எழுத்தாளருக்கான விருது, பப்பாசி நிறுவனத்தின் கலைஞர் விருது, லில்லிதேவசகாயமணி இலக்கிய விருது மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது.


மா.அரங்கநாதன் இலக்கிய விருது[தொகு]

இவரின் மகன், அரங்க.மகாதேவன் அவர்கள் சென்னை, உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தையின் வழியே இவரும் தமிழ் இலக்கியத்துறையில் பெரும் ஆர்வம் கொண்டவர். மேலும் தந்தையின் நினைவாக 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16-ந்தேதி அன்று தமிழ் அறிஞர்களுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கி வருகிறார். [3]

இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாக பங்களித்து வரும் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுக்கு அவர்களது ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு, செயற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவை ஒரு பிரிவிலும் நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம், இளம் எழுத்தாளார்கள் என மற்றொரு பிரிவுமாக என இருபிரிவுகளாக இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் கொண்ட ரொக்கப் பரிசுடன் எழுத்தாளர் மா. அரங்கநாதனின் உருவச் சிற்பம் ஒன்றும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

2013 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதினை பேராசிரியர் க.பஞ்சாங்கம் மற்றும் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோர் பெற்றுள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எழுத்தாளர் மா.அரங்கநாதன் காலமானார்". செய்தி. ஆனந்த விகடன். பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மூத்த எழுத்தாளர் மா.அரங்கநாதன் உடல் நல்லடக்கம்". செய்தி. தி இந்து. 17 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "மா. அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள்". வலைப்பதிவு. maaranganathan.com.
  4. "மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2023: முன்றில் இலக்கிய அமைப்பு நடத்திய திருவிழா". செய்தி. ஆனந்த விகடன். பார்க்கப்பட்ட நாள் 18 Apr 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._அரங்கநாதன்&oldid=3933519" இலிருந்து மீள்விக்கப்பட்டது