மாவட்டக் காவல்துறை அமைப்பு
மாவட்டக் காவல்துறை அமைப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்குகளைக் காக்கவும் காவல்துறைக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு கீழ்காணும் அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த அமைப்பில் கீழ்காணும் காவல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
- மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்
- துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
- காவல்துறை வட்ட ஆய்வாளர்
- சார்பு ஆய்வாளர்கள்
மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
[தொகு]இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக தமிழ்நாடு அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையில் இருப்பவர்கள அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார்.
மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்
[தொகு]இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி அல்லது காவல்துறைப் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளை மாவட்டத்தின் தேவைகளுக்கேற்ப சட்டம் -ஒழுங்கு, குற்றம், மதுவிலக்கு அமல், ஆயுதப்படை போன்ற பிரிவுகளின் கீழ் மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அறிவுறைகளின்படி அந்தப் பிரிவின் கீழான குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.
துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
[தொகு]காவல்துறைப் பணியில் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாவட்டத்தின் தேவைகளுக்கேற்ப சட்டம் -ஒழுங்கு, குற்றம், மதுவிலக்கு அமல், ஆயுதப்படை, பொருளாதாரக் குற்றப்பிரிவு போன்ற பிரிவுகளின் கீழ் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை தமிழ்நாடு அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அறிவுறையின்படி அந்தப் பிரிவின் கீழான குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன் தங்களுக்குக் கீழான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றனர்.
காவல்துறை வட்ட ஆய்வாளர்
[தொகு]- மாவட்டத்தில் இருக்கும் ஊர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தக் காவல் நிலையங்களில் காவல்துறை வட்ட ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தப் பகுதியில் குற்றச்செயல்கள் ஏதும் நடக்காதவாறு கண்காணிப்பதுடன், குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மூலமாக முன்னிலைப்படுத்தும் பணிகளை தனக்குக் கீழான அதிகாரி மற்றும் காவலர்களைக் கொண்டு செயல்படுத்துகின்றார்.
- போக்குவரத்து அதிகமுள்ள நகரங்களில் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு போக்குவரத்துக் குற்றங்கள் ஏற்படாமல் கண்காணிக்கிறார். மேலும் இக்குற்றவாளிகளை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மூலமாக முன்னிலைப்படுத்தும் பணிகளை தனக்குக் கீழான அதிகாரி மற்றும் காவலர்களைக் கொண்டு செயல்படுத்துகின்றார்.
- தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிட வகுப்பினர் என்று அட்டவணைப்படுத்தப்பட்ட இனத்தவர்கள் மீது மற்ற சமுதாயத்தினர் இனவேறுபாட்டுடன் நடந்து கொள்ளும் குற்றங்கள் வராது தடுப்பதற்காக குடிமையியல் காவல்துறை ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
- இதுதவிர மதுவிலக்கு அமல் பிரிவு, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு, உளவுப்பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு என்று மாவட்டத்தின் தேவைக்குத் தகுந்தவாறு பல பிரிவுகளும் அதற்கான காவல்துறை ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சார்பு ஆய்வாளர்கள்
[தொகு]- காவல் நிலையங்களில் காவல்துறை ஆய்வாளர்களின் கீழ் சட்டம்- ஒழுங்கு, குற்றம் போன்ற பிரிவுகளின் கீழ் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தலைமைக் காவலர்கள், காவலர்கள் போன்றவர்களின் துணையுடன் குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் துணை புரிகின்றனர்.
- ஒவ்வொரு தனிப்பிரிவின் கீழும் உள்ள காவல்துறை ஆய்வாளர்களின் கீழும் சார்பு ஆய்வாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்குக் கீழுள்ள தலைமைக் காவலர்கள், காவலர்கள் போன்றவர்களின் துணையுடன் சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் தடுத்தும், அந்தப் பிரிவிக் கீழான குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் துணை புரிகின்றனர்.