உள்ளடக்கத்துக்குச் செல்

மால்கம் ஆதிசேசையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்கம் ஆதிசேசையா
பிறப்புமால்கம் சத்தியநாதன் ஆதிசேசையா
(1910-04-18)18 ஏப்ரல் 1910
வேலூர், தமிழ்நாடு
இறப்பு21 நவம்பர் 1994(1994-11-21) (அகவை 84)
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிபொருளியலாளர், கல்வியாளர்
பெற்றோர்பவுல் வாரணாசி ஆதிசேசையா, கிரேசு நேசம்மா
வாழ்க்கைத்
துணை
எலன் பரஞ்சோதி, எலிசபெத் போத்தென்

மால்கம் ஆதிசேசையா (Malcolm Sathiyanathan Adiseshiah, ஏப்ரல் 18, 1910 – நவம்பர் 21, 1994)[1] என்பவர் இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர், யுனெஸ்கோ இயக்குநர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். 1971-இல் தமிழ்நாட்டில், தன் சொந்தச் செலவில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி நடத்தியவர்.

பிறப்பும் கல்வியும்

[தொகு]

மால்கம் ஆதிசேசையா தமிழ் நாட்டின் வேலுரில் பிறந்தார். தந்தையார் மெய்யியல் பேராசிரியர்.[2] தாயார் வேலூர் நகராட்சி உறுப்பினராகவும் மகளிர் மன்ற உறுப்பினராகவும் இருந்தவர்..[2] ஆதிசேசையா வேலூர் ஊரிசுப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றார் பின்னர் சென்னை இலயோலா கல்லூரியில் பொருளியல் கல்வியில் இளங்கலை(ஆனர்சு) பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிச்சு கிங்க்ஸ் கல்லூரியில் எம்.ஏ . பட்டம் பெற்றார். 1937-1940 ஆண்டுகளில் இலண்டன் பொருளியல் பள்ளியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

பேராசிரியர் பணி

[தொகு]

இலண்டனுக்குப் போவதற்கு முன் கல்கத்தா கல்லூரியில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்தார். முனைவர் பட்டம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பியதும் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியர் பணியில் அமர்ந்தார். அங்கு 1945 ஆம் ஆண்டு வரை பணிசெய்தார். பின்னர் செனிவாவில் உள்ள 'உலகப் பல்கலைக் கழக சேவை' யில் சேர்ந்து பணியாற்றினார்.

யுனஸ்கோ இயக்குநர்

[தொகு]

1948இல் யுனஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு அமைப்பில் சேர்ந்தார். யுனஸ்கோ பொது உதவி இயக்குநராக இருந்து 1970 இல் ஒய்வு பெற்றார். அக்காலத்தில் பதவியில் இருந்தபோது மூன்றாம் உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குத் தொழில் நுட்ப உதவிகள் புரிந்தார். யுனஸ்கோ பதவியில் இருந்தபோது பழந் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்ப்புக்கும், இராசாசியின் கம்பராமாயண அயோத்தியா காண்டம் மொழி பெயர்ப்புக்கும், ஏ கே இராமனுஜம் என்பவரின் சங்க இலக்கிய மொழி பெயர்ப்புக்கும் உதவி செய்தார். யுனஸ்கோ அமைப்பிலிருந்து வெளிவந்த கூரியர் என்னும் இதழ் தமிழ் மொழியிலும் இந்தியிலும் வெளிவருவதற்கு இவருடைய முயற்சிகளே காரணம். 1966 இல் பாரீசு நகரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடு சிறப்புற நடைபெற யுனஸ்கோ மற்றும் பிரஞ்சு அரசு உதவிகளைப் பெற்றார்.[3]

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம்

[தொகு]

யுனஸ்கோவிலிருந்து திரும்பியதும் தமிழ் நாட்டில் நிலையாகத் தங்கி தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளியல் சார்ந்த வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என முடிவு செய்தார். 1971 இல் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (MIDS) என்னும் ஓர் அமைப்பை தம் துணைவியின் ஒத்துழைப்புடன் தொடங்கினார். இவ்வமைப்பு பிற்காலத்தில் 1977 இல் ஓர் தேசிய அமைப்பாக மாற்றப்பட்டது. தம் பெயரில் அமைந்த சொத்துகளை இவ்வமைப்பின் வளர்ச்சிக்கு எழுதி வைத்தார். தமிழ் நாடு கிராம விவசாயப் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்துவதே சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முகாமையான நோக்கமாகும். மிட்ஸ் என்னும் பெயரில் ஓர் இதழை ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். கல்வி, பொருளியல் தொடர்பான நூல்கள் பலவற்றை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.

திட்டக் குழு உறுப்பினர்

[தொகு]

தமிழ் நாடு அரசின் திட்டக்குழுவில் இடம்பெற்று 1971-76 ஆண்டுகளில் துணைத் தலைவராகப் பணியாற்றினார். கல்வி பொருளியல் முதலான திட்டங்களில் அவருடைய பங்களிப்பு இருந்தது. வறுமை நீங்கவும் செல்வம் பெருகவும் மக்கள் கல்வி அறிவு பெறுதல் மிக இன்றியமையாதது என வலியுறுத்தினார்

துணைவேந்தர்

[தொகு]

1975 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக அமர்த்தப்பட்டார். அவர் காலத்தில் மாலிக்குலர் பயிரியல், பாலிமர் அறிவியல், பாதுகாப்பு கல்வி, வயது வந்தோர் கல்வி எனப் புதிய படிப்புகள் தொடங்கப்பட்டன.

பெற்ற சிறப்புகள்

[தொகு]
  • 1978 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
  • இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மால்கம் ஆதிசேசையாவுக்கு முனைவர் பட்டம் அளித்து கௌரவித்தன.
  • 1976 இல் இந்திய நடுவணரசு இவருக்கு பத்மபூசன் விருது வழங்கி கௌரவித்தது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. "Adiseshiah, Malcolm Sathianathan". Who Was Who in America, 1993-1996, vol. 11. New Providence, N.J.: Marquis Who's Who. 1996. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0837902258.
  2. 2.0 2.1 "Malcolm Adiseshiah" (PDF). UNCESCO. 1995.
  3. Third International Conference on Tamil Studies, யுனெசுக்கோ
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_ஆதிசேசையா&oldid=3266352" இலிருந்து மீள்விக்கப்பட்டது