மாலத்தீவுகளில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலத்தீவுகளில் ஓர் உல்லாசத் தீவுப் புகலிடம்
சுற்றுலா பகுதி

மாலத்தீவுகளில் சுற்றுலா (Tourism in the Maldives Tourism) மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டித்த்ரும் தொழிற்சாலையாக இருக்கிறது. நாட்டின் மூன்றாவது துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கி அந்நியச்செலவாணியை ஈட்டித்தருவதில் இத்துறை பெரும்பங்கு வகிக்கிறது. மாலத்தீவுகளின் தீவுக்கூட்டமே உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை மாலத்தீவுகளின் பக்கம் இழுக்கிறது

வரலாறு[தொகு]

1972 ஆம் ஆண்டில் மாலத்தீவுகளில் சுற்றுலா தொடங்கியது. ஐ.நா.வின் ஒரு பிரிவான வளர்ச்சிக்கானத் தூதுக்குழு 1960 ஆம் ஆண்டில் மாலத்தீவுகளைப் பார்வையிட்டு. இத்தீவு சுற்றுலா செல்வதற்குப் பொருத்தமான தீவு அல்ல என்று கருதி இத்தீவை சுற்றுலாவுக்கு பரிந்துரைக்கவில்லை. 1972 ஆம் ஆண்டு மாலத்தீவுகளில் முதலாவது உல்லாசப் புகலிடம் தொடங்கப்பட்ட பின்னர்தான் இங்கு சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி பெற்றது. இதே ஆண்டில்தான் முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழு மாலத்தீவுகளுக்கு வருகை தந்ததாக மதிப்பிடப்படுகிறது. 280 படுக்கைகளும் இரண்டு உல்லாசப் புகலிடங்களுமாய் மாலத்தீவுகளின் சுற்றுலாத்துறை தொடங்கப்பட்டது. குரும்பா தீவு உல்லாசப் புகலிடந்தான் மாலத்தீவுகளில் முதலாவதாகத் தொடங்கப்பட்ட உல்லாசத்தீவு புகலிடமாகும். இதன்பின்னர் பேண்டோசு தீவு உல்லாசப் புகலிடம் இரண்டாவதாகத் தொடங்கப்பட்டது. தற்பொழுது மாலத்தீவுக் குடியரசில் மொத்தமாக 105 உல்லாச புகலிடங்கள் காணப்படுகின்றன. கடந்தசில பத்தாண்டுகளாக மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு மாலத்தீவுகளில் உள்ளூர் விருந்தினர் இல்லங்கள் பல துவங்கப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்களுடன் கலந்து தங்குகின்ற வாய்ப்புகள் உருவாகின. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் 8,00,000 சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தருகின்றனர்.

மாலத்தீவுகளின் இயற்கை அழகு[தொகு]

மாலத்தீவின் ஒரு சுற்றுலா உல்லாசப் புகலிடம்

நீலக்கடல் மற்றும் வெள்ளைக் கடற்கரையுடன் வீசும் தூய்மையான காற்று என்னும் இயற்கை அழகுதான் மாலத்தீவுகளை உலகமெங்கும் அறிய வைக்கிறது. நீச்சல், மீன்பிடித்தல் இசுகூபா மூழ்கல் நீரடி விளையாட்டு நீர்மேல் நடை, காற்றலை சறுக்கு மற்றும் படகுச் சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பய்னிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் முன்வருகிறார்கள்.

மாலத்தீவுகளின் இயற்கை அழகு ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இதனால் சுற்றுலாத்துறை மாலத்தீவுகளுக்கு மிகப்பெரிய வருவாயைப் பெற்றுத்தரும் துறையாக வளர்ந்திருக்கிறது.[1] நீருக்கடியில் காணப்படும் அசாதாரணமான அற்புத இயற்கைக்காட்சிகள் மற்றும் சுத்தமான நீர் காரணமாக, மாலத்தீவு உலகின் தலைசிறந்த பொழுதுபோக்கு மூழ்குமிடங்களுக்கு மத்தியில் முக்கியமான இடத்தில் உள்ளது. அகோடா.காம் எடுத்த உலகாய கணிப்புக் கணக்கீட்டு அளவை முறையில், உலகில் தேன்நிலவுக்கு அதிகமாக விரும்பப்படும் இடமாகும் என மாலத்தீவுகளின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

வெப்பமண்டலப் புகலிடம் மீள்பார்வை[தொகு]

ஓரு பிரத்தியேக உள்ளூர் உணவு விடுதி அதனுடன் இணைந்திருக்கும் மக்கள்தொகை, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், அவர்களுக்காகப் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோரைக் கொண்ட சுற்றுலா உல்லாச புகலிடங்களால் மாலத்தீவுகள் உருவாகியிருக்கின்றன. இத்தகைய புகலிடங்களில் உள்ளூர் மக்களோ அவர்களின் வீடுகளோ கிடையாது.

சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இத்தீவுகள் தோராயமாக 800X200 பரப்பளவுள்ள அளவுகளில் கடல் மட்டத்திற்கு 2 மீட்டர்களுக்கு மேல் மணலும் பவழமும் பரப்பி உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு தீவைச் சுற்றியும் வளையமாக சூழ்ந்திருக்கும் கடற்கரையுடன் கூடுதலாக அவற்றிற்குச் சொந்தமான கடலடிப் பாறைகள், பாறைத் தோட்டங்களாகவும் இயற்கையான மீன் தொட்டிகளாகவும் விளங்குகின்றன. இசுகூபா மூழ்கல் வீரர்களுக்கும் நீரடி விளையாட்டு வீரர்களுக்கும் உகந்த இடங்களாக இவை அமைகின்றன. இவைதவிர கடலடிப் பாறைகளின் மேலுள்ள ஆழமற்ற நீர் இயற்கையாக அமைந்த நீச்சல் குளம் போல அழகு சேர்க்கிறது. கடலின் ஆழம் குறித்த பயமும், பெரிய அலைகளின் வருகை குறித்த அச்சமும், அபாயமான நீரோட்டங்கள் குறித்த தயக்கமும் இல்லாமல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் இடமாக மாலத்தீவுகள் உள்ளது.

பொதுவாக உல்லாசப் புகலிடங்கள் ஒவ்வொன்றும் அதன் விருந்தினர்கள், உணவகங்கள், காபி கடைகள், கடைகள், ஓய்விடங்கள், மதுபானக் கடைகள், நடன அரங்குகள் மற்றும் இசுகூபா மூழ்கல் பயிற்சிப் பள்ளிகள் சூழ்ந்துள்ள அறைகள் மற்றும் அறைத்தொகுதிகளைக் கொண்டிருக்கின்றன. மற்றொரு பகுதியில் அதன் பணியாளர்கள், அவர்களுக்கான தங்குமிடங்கள், மின்னுற்பத்திப் பிரிவினர், துப்புரவுப் பணிபுரிபவர்கள் முதலியோர்கள் இருப்பிடமாக இருக்கும். இங்குள்ள தீவுக் கடைகளில் பல்வேறு விதமான நினைவுப்பொருட்கள், கலைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. காற்றுப் பயிற்சிகள், கைப்பந்து, மேசைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும் இங்கு வழியுண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maldives Largest Revenue Generator Is Its Tourism Industry". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-22.
  2. "World's best honeymoon spot is...". CNN. 14 February 2014. http://edition.cnn.com/2014/02/14/travel/honeymoon-destinations/. பார்த்த நாள்: 31 March 2014. 

புற இணைப்புகள்[தொகு]