மாற்றிடம் புகல்
மாற்றிடம் புகல் மெடாஸ்டாசிஸ் | |
---|---|
கணையப் புற்றுநோயிலிருந்து மாற்றிடம் புகுந்த புற்றுக்களை கல்லீரலின் வெட்டப்பட்ட மேற்பகுதியில் காணலாம். | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | புற்றுநோயியல் |
நோய்களின் தரவுத்தளம் | 28954 |
மெரிசின்பிளசு | 002260 |
மாற்றிடம் புகல் அல்லது மருத்துவ வழக்கில் மெடாஸ்டாசிஸ் (Metastasis) மாற்றிடம் புகல் நோய், என்பது ஒரு உள்ளுறுப்பிலிருந்து அல்லது அதன் பாகத்திலிருந்து அதற்கு அடுத்து இல்லாத மற்றொரு உள்ளுறுப்பிற்கோ அதன் பகுதிக்கோ புற்றுநோய் பரவுவதாகும். இவ்வாறு இரண்டாமிடத்தில் உருவாகும் புற்றுநோய் மெடாஸ்டாசிசஸ் என்று (சிலநேரங்களில் சுருக்கமாக மெட்சு) மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது.[1][2] முன்னதாக புற்றுநோய் கட்டிகளும் நோய்த்தொற்றுக்களுமே இவ்வாறு மாற்றிடம் புகுவனவாகக் கருதப்பட்டன; தற்போதைய புதிய ஆய்வுகளின்படி, இது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.[3] இச்சொல் மூலமான மெடாஸ்டாசிஸ் என்ற கிரேக்கச் சொல் "இடம் பெயரல்", μετά, மெடா, "அடுத்த", στάσις, இசுடாசிசு, "இடம்" எனப் பொருள்படும். இதன் பன்மை மெடாஸ்டாசிசஸ் ஆகும்.
ஒரு இழையத்தின் ஒற்றை உயிரணு படிப்படியாக மரபியல் சேதமடைந்து கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கத் தன்மை உடைய உயிரணுக்கள் உருவாவதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கம், இழையுருப்பிரிவு, முதன்மை புற்றுக்கட்டியை உருவாக்குகிறது. இந்தப் புற்றுக்கட்டியி உள்ள உயிரணுக்கள் அடுத்தடுத்து மாற்றுப்பெருக்கம் (metaplasia), பிறழ்ந்த வளர்ச்சி (dysplasia), விஞ்சு பெருக்கம் (anaplasia) அடைந்து புற்று மெய்வகையாக மாறுகிறது. இந்த புற்று மெய்வகைகள் குருதி அல்லது நிணநீர் ஓட்டங்கள் மூலமாக பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்து அங்கு கட்டி உருவாக்குகிறது. இவை நிணநீர் கலங்கள் அல்லது குருதிக்குழல்களின் சுவற்றை உடைத்து சுற்றோட்டத் தொகுதி மூலம் (சுற்றோடும் புற்றணுக்கள்) உடலின் பிற இடங்களுக்கும் திசுக்களுக்கும் பரவுகிறது. இவை முறையே நீணநீர்சார் பரவல் அல்லது குருதிசார் பரவல் எனப்படுகின்றன.
மற்றொரு இடத்திற்கு வந்தபிறகு புற்றணுக்கள் கலங்களை அல்லது சுவர்களை உடைத்து உட்சென்று பெருகத் தொடங்குகின்றன; இவ்வாறாக மருத்துவ முறைமையில் கண்டறியக்கூடிய மற்றொரு புற்றுக்கட்டி உருவாகிறது. இந்தப் புற்றுக்கட்டி மாற்றிடம் புகுந்த (அல்லது இரண்டாம் நிலை) புற்றுக்கட்டியாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம் பெயரலே புற்றுள்ள கட்டிகளை (எதிர் தீதிலாக் கட்டிகள்) அடையாளப்படுத்தும் மூன்று பண்புகளில் ஒன்றாகும்.[4] பெரும்பாலான திசுக்குவிப்புகள் மாற்றிடம் புகுவனவாம்; அவற்றின் பரவுத்தன்மையின் பண்பு வேறுபடலாம்.[4]
புற்றுக்கட்டிகள் மாற்றிடம் புகுந்து ஏற்படும் புற்றுக்கட்டிகள் இரண்டாம் நிலை அல்லது மாற்றிடம் புகுந்த கட்டி எனப்படுகின்றன; இவற்றின் உயிரணுக்கள் முதலில் தோன்றிய கட்டியினுடையதாக இருக்கும். அதாவது, எடுத்துக்காட்டாக, மார்பகப் புற்றுநோய் மாற்றிடம் புகுந்து நுரையீரலில் புற்றுக்கட்டி உருவாக்குமானால், இரண்டாம்நிலை புற்றுக்கட்டி வழமையிலா நுரையீரல் உயிரணுக்களால் அல்லாது வழமையிலா மார்பக உயிரணுக்களால் உருவாகியிருக்கும். இது மாற்றிடம் புகுந்த மார்பகப் புற்றுநோய் எனப்படும்; நுரையீரல் புற்றுநோய் என்றல்ல.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Klein CA (September 2008). "Cancer. The metastasis cascade". Science 321 (5897): 1785–7. doi:10.1126/science.1164853. பப்மெட்:18818347.
- ↑ Chiang AC, Massagué J (December 2008). "Molecular basis of metastasis". The New England Journal of Medicine 359 (26): 2814–23. doi:10.1056/NEJMra0805239. பப்மெட்:19109576.
- ↑ Podsypanina K, Du YC, Jechlinger M, Beverly LJ, Hambardzumyan D, Varmus H (September 2008). "Seeding and Propagation of Untransformed Mouse Mammary Cells in the Lung". Science 321 (5897): 1841–4. doi:10.1126/science.1161621. பப்மெட்:18755941.
- ↑ 4.0 4.1 Kumar, Vinay; Abbas, Abul K; Fausto, Nelson; Robbins, Stanley L; Cotran, Ramzi S (2005). Robbins and Cotran pathologic basis of disease (7th ed.). Philadelphia: Elsevier Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7216-0187-8.