உள்ளடக்கத்துக்குச் செல்

மார்பளவுத் தோற்றச் சிற்றோவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடையாளம் தெரியாத ஒருவருடைய மார்பளவுத் தோற்றச் சிற்றோவியம், 1572 இல் நிக்கோலாசு இலார்டால் வரையப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டு மார்பளவுத் தோற்றச் சிற்றோவியங்களின் காட்சி. வார்சோ தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

மார்பளவுத் தோற்றச் சிற்றோவியம் (Portrait miniature) என்பது, நீர்வர்ணம், குவாச் அல்லது எனாமல் பூச்சுக்களைக் கொண்டு வரையப்படும் சிறிய அளவிலான ஓவியத்தைக் குறிக்கும். இவ்வகை ஓவியம் கையெழுத்துப் பிரதிகளில் வரையப்பட்ட சிற்றோவிய நுட்பங்களில் இருந்து வளர்ச்சியடைந்தது. 16 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்குடியினர் மத்தியில் இது பெயர்பெற்று விளங்கியதுடன், 18 ஆம் நூற்றாண்டில் நடுப் பகுதியில் இருந்து இது ஐரோப்பா முழுவதும் பரவியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பாதரச ஆவிப் படங்களும், ஒளிப்படங்களும் புழக்கத்துக்கு வரும்வரை மக்கள் இவற்றை மிகவும் விரும்பிப் பயன்படுத்தினர். இவ்வோவியங்கள் தொலை தூரத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ளவை. தனது மகளுக்கு மணம் பேச விரும்பும் ஒரு பிரது தனது மகளின் சிற்றோவியத்தை மணமகன் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கலாம். நீண்டகாலம் வீட்டைவிட்டு வெளியே இருக்க வேண்டிய படை வீரர்களும், மாலுமிகளும் தமது அன்புக்கு உரியவர்களின் சிற்றோவியங்களைத் தம்முடன் வைத்திருப்பர். தூரப் பயணத்தில் இருக்கும் கணவனின் சிற்றோவியத்தை மனைவி ஞாபகத்துக்காக வைத்திருப்பது உண்டு.

தொடக்ககாலச் சிற்றோவியர்கள் நீர்வர்ணத்தைப் பயன்படுத்தி விலங்குத் தோல்களில் வரைந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், செப்புத் தகடுகளின்மீது எனாமலால் வரையப்பட்ட சிற்றோவியங்கள், குறிப்பாகப் பிரான்சு நாட்டில் விருப்பத்துக்கு உரியனவாகின. 18 ஆம் நூற்றாண்டில் சிற்றோவியங்கள் நீர்வர்ணங்களைப் பயன்படுத்தி யானைத் தந்தத் தகடுகளில் வரையப்பட்டன. இது அக்காலத்தில் ஒப்பீட்டளவில் மலிவாக இருந்தது. 40 மிமீ x 30 மிமீ போன்ற அளவுகளில் மிகவும் சிறியனவாக இருந்ததால், மார்பளவுத் தோற்றச் சிற்றோவியங்கள் பொதுவாகத் தனிப்பட்ட நினைவுப் பொருட்களாகவோ; நகைப்பேழை, மூக்குப்பொடிப் பேழை போன்றவற்றின் மூடியாகவும் பயன்பட்டன.

வரலாறு

[தொகு]

சிற்றோவியங்கள் முதலில் கையால் எழுதப்பட்ட நூல்களை அழகுபடுத்தவும், பட விளக்கங்களைத் தருவதற்காகவும் வரையப்பட்டன. 1520களில், பிரான்சு மற்றும் ஆங்கிலேய அரச அவைகளில் மார்பளவுத் தோற்றச் சிற்றோவியங்கள் அறிமுகமாயின. இதன் மிக முந்திய எடுத்துக்காட்டுக்கள், நெதர்லாந்தியச் சிற்றோவியர்களான பிரான்சில் பணிபுரிந்த யோன் குளுவெட் (இறப்பு: 1540) என்பவராலும், இங்கிலாந்தில் இருந்த லூக்காசு ஓரென்பவுட் என்பவராலும் வரையப்பட்டன.[1]

பிரான்சின் தொடக்ககால சிற்றோவியர்களுள் யோன் குளுவெட்டுடன், அவரது மகன் பிரான்கோயிசு குளுவெட், யோன் பெரியல் மற்றும் பலர் அடங்குவர். பல மார்பளவுத் தோற்ற ஓவியங்களும், பெரும் எண்ணிக்கையான படங்களும் இவர்கள் வரைந்ததாக அறியப்பட்டிருப்பினும், அவர்கள் வரைந்த மார்பளவுத் தோற்றச் சிற்றோவியங்கள் மிகச் சிலவே தற்காலத்தில் காணப்படுகின்றன. கலிக் போர் கையெழுத்துப் படியில் காணப்படும் ஏழு மார்பளவு தோற்றப் படங்கள் மூத்த குளுவெட் வரைந்ததாகக் கருதப்படுகின்றது. இவற்றுடன் அவரது ஆக்கங்களுள் ஒன்றாக, பியர்ப்பொன்ட் மோர்கன் சேகரிப்பில் உள்ள மார்ச்சல் டெ பிரிசாக் என்பவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த ஆக்கம் ஒன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்டவர்களைத் தொடர்ந்து, சைமன் ரெனார்ட் டி ச்ன் அன்ட்ரே (1613-1619), யோன் கொட்டேல் ஆகியோரையும் குறிப்பிடலாம். யோசேப் வேர்ணர் (1637–1710), ரொசெல்பா கரியேரா (1675–1757) ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள்.

முதல் பெயர்பெற்ற ஆங்கிலேய மர்பளவு தோற்றச் சிற்றோவியர் நிக்கோலாசு இலார்ட் (Nicholas Hilliard) (1537–1619) ஆவார். இவரது ஆக்கங்கள் பழமைவாதப் பாணி சார்ந்தவையாக இருந்தாலும், தோற்றத்துக்கு உரியவரின் இயல்புகளைக் காட்டக்கூடியனவாக இருந்தன. இவரைத் தொடர்ந்து இவரது மகன் லாரன்சு இலார்டும் (Lawrence Hilliard) மார்பளவுத் தோற்றச் சிற்றோவியங்களை வரைந்துள்ளார். மார்பளவுத் தோற்றச் சிற்றோவியர் தந்தையும் மகனுமாகிய ஐசாக் ஒலிவர் (1560–1617), இலார்டின் மாணவர். ஐசாக்கின் மகனும் அவரது மாணவருமான பீட்டர் ஒலிவரும் இவ்வகை ஓவியங்களை வரைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]