மார்க் பிளாக்
மார்க் பிளாக் | |
|---|---|
| பிறப்பு | மார்க் லியோபோல்ட் பெஞ்சமின் பிளாக் 6 சூலை 1886 லியோன், பிரெஞ்சு மூன்றாம் குடியரசு |
| இறப்பு | 16 சூன் 1944 (அகவை 57) செயிண்ட்-டிடியர்-டி-ஃபோர்மன்ஸ், விச்சி பிரான்ஸ் |
| இறப்பிற்கான காரணம் | மரணதண்டனை |
| கல்லறை | லெ போர்க்-டி'ஹெம் |
| கல்வி | லைசி லூயிஸ்-லெ-கிராண்ட் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | எகோல் நார்மல் சுப்பீரியர் |
| பணி | வரலாற்றாளர் |
| வாழ்க்கைத் துணை | சைமன் விடால் |
| பிள்ளைகள் | ஆலிஸ் மற்றும் எட்டியென் |
| இராணுவப் பணி | |
| சார்பு | |
| சேவை/ | பிரெஞ்சு இராணுவம் |
| சேவைக்காலம் | 1914–1918, 1939 |
| தரம் | கேப்டன் |
| விருதுகள் | செவாலியே விருது War Cross (1914–1918) War Cross (1939–1945) |
மார்க் லியோபோல்ட் பெஞ்சமின் பிளாக் (Marc Léopold Benjamin Bloch, 6 சூலை 1886 - 16 சூன் 1944) என்பவர் ஒரு பிரெஞ்சு வரலாற்றாசிரியராவார். இவர் பிரெஞ்சு சமூக வரலாற்றின் அன்னல்ஸ் பள்ளியின் நிறுவன உறுப்பினராக இருந்தார். பிளாக் இடைக்கால வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். மேலும் தனது தொழில் வாழ்க்கையில் இடைக்கால பிரான்ஸ் குறித்து விரிவாகப் பல நூல்களை வெளியிட்டார். கல்வியாளராக, ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகம் (1920 முதல் 1936 மற்றும் 1940 முதல் 1941 வரை), பாரிஸ் பல்கலைக்கழகம் (1936 முதல் 1939 வரை), மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகம் (1941 முதல் 1944 வரை) ஆகியவற்றில் பணியாற்றினார்.
லியோனில் ஒரு அல்சேஷியன் யூத குடும்பத்தில் பிறந்த பிளாக், பாரிசில் வளர்ந்தார். பாரம்பரிய வரலாற்றாசிரியரானன இவரின் தந்தை குஸ்டாவ் ப்ளாச் - சோர்போன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பிளாக் பாரிசில் உள்ள பல்வேறு லைசியங்களிலும் எக்கோல் நார்மல் சுப்பீரியூரிலும் கல்வி பயின்றார். மேலும் இளம் வயதிலிருந்தே டிரேஃபஸ் விவகாரத்தின் யூத எதிர்ப்புக் கொள்கையால் பாதிக்கப்பட்டார். முதல் உலகப் போரின் போது, இவர் பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றி மார்னே மற்றும் சோம் போர்களில் போரிட்டார். போருக்குப் பிறகு, இவர் 1918 இல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். அங்கு, புதுமைக்கால வரலாற்றாசிரியர் லூசியன் ஃபெப்வ்ரேவுடன் ஒரு அறிவுசார் கூட்டை உருவாக்கினார். இவர்கள் இருவரும் சேர்ந்து சிந்தனைப் பள்ளியை நிறுவினர். மேலும் 1929 இல் அன்னல்ஸ் டி'ஹிஸ்டோயர் எகனாமிக் எட் சோசியல் என்ற இதழை வெளியிடத் தொடங்கினர். பிளாக் தனது வரலாற்றுவரைவியலில் அணுகுமுறையில் ஒரு நவீனத்துவவாதியாக இருந்தார். மேலும் வரலாற்றை பல்துறை ஈடுபாட்டுடன் அணுகவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். குறிப்பாக தன் ஆய்வை புவியியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளுடன் இணைத்தார். 1936 இல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இவருக்கு ஒரு பதவி வழங்கப்பட்டபோது பொருளாதாரம் இவரது பாடமாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது பிளாக் தன்னார்வலராக இராணுவத்தில் இணைந்தார். மேலும் போனி போரின் போது தளவாட அதிகாரியாக இருந்தார். டன்கிர்க் போரில் ஈடுபட்டு பிரிட்டனில் சிறிது காலம் கழித்த இவர், அமெரிக்காவிற்குச் செல்ல முயற்சித்து தோல்வியடைந்தார். பிரான்சிற்கு திரும்பினார். பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் வந்த நிலையில், புதிய யூத-எதிர்ப்புச் சட்டங்களால் இவரது பணித் திறன் பாதிக்கபட்ட நிலையில், பிரெஞ்சுப் பல்கலைக்கழக அமைப்பில் யூதர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கும் சில அனுமதிகளில் ஒன்றை விண்ணப்பித்துப் பெற்றார். இவர் பாரிசை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, மேலும் நாட்சி ஜெர்மனி அதிகாரிகளால் இவரது வீடு ஆக்கிரமிக்கபட்டு, நூல்கள் சூறையாடபட்டதாக புகார் கூறினார். பெவ்ரேவின் வற்புறுத்தலால், அன்னல்ஸின் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ஜெர்மனி விச்சி பிரான்ஸ் மீது படையெடுக்கும் வரை, அதாவது 1942 நவம்பர் வரை, பிளாக் மாண்ட்பெல்லியரில் பணியாற்றினார். பின்னர் இவர் பிரெஞ்சு எதிர்ப்பியக்கத்தின் கம்யூனிச சார்பற்ற பிரிவில் சேர்ந்தார். 1944 இல், லியோனில் கெஷ்டாபோ எனப்படும் நாட்சி காவல்துறையால் பிடிக்கப்பட்டார். நேச நாட்டு நார்மண்டி படையெடுப்பிற்குப் பிறகு விசாரணை வாய்ப்புகள் வழங்கப்படாமல் இயன்றவரை வதைத்து, சுட்டுக் கொல்லப்பட்டார். தி ஹிஸ்டோரியன்ஸ் கிராஃப்ட் , ஸ்ட்ரேஞ்ச் டிஃபீட் போன்ற செல்வாக்கு மிக்க ஆய்வுகள் உட்பட பல படைப்புகள், இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டன.
இவரது வரலாற்று ஆய்வுகளும், எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினராக இவரது மரணமும், போருக்குப் பிந்தைய பிரெஞ்சு வரலாற்றாசிரியர்களின் தலைமுறைகளால் பிளாக்கை மிகவும் மதிக்கப்படும் ஒருவராக ஆக்கியது; இவர் "எல்லா காலத்திலும் சிறந்த வரலாற்றாசிரியர்" என்று அழைக்கப்பட்டார். [1] இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குள், வரலாற்றாசிரியர்கள் பிளாக்கின் திறன்கள், செல்வாக்கு, மரபு குறித்து மேலும் விமர்சனரீதியான மதிப்பீட்டைச் செய்யத் தொடங்கினர் அவரது அணுகுமுறையில் குறைபாடுகள் இருந்தன என்று வாதிட்டனரர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weber 1991, ப. 244.