உள்ளடக்கத்துக்குச் செல்

மாமல்லபுரத்து ஏழு கோவில்கள்

ஆள்கூறுகள்: 12°37′N 80°12′E / 12.617°N 80.200°E / 12.617; 80.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1914ஆம் ஆண்டளவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில். படம்வழங்கியவர்: ஜே.டபுள்யூ.கோம்ப்ஸ்

மாமல்லபுரத்துஏழுகோவில்கள் (Seven Pagodas of Mahabalipuram) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் தற்போது கடற்கரையில் எஞ்சியுள்ள கலையழகுமிக்க கோவில் பகுதிகள் தவிர கடல்கோள் ஏற்பட்டு மூழ்கிப்போன வேறு கோவில் தொகுதிகளும் உண்டு என்பதைக் குறிக்கும் சொற்பயன்பாடு ஆகும்.

மாமல்லபுரத்தில் மறைந்துபோன கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி

[தொகு]

இன்று மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடலோரக் கோவில் தவிர வேறு ஆறு கோவில்கள் கடல்நீருக்குள் மூழ்கிப்போயின என்னும் மரபுச் செய்தி தமிழகத்தில் பல காலமாக வழங்கிவருகிறது. அச்செய்தியையும் உள்ளடக்கிய விதத்தில் 1914இல் ஜே.டபிள்யூ ஜோசையா வாட்டர்சு (J.W. Josaiah Water) என்ற பிரித்தானியர் “ஏழு கோவில்கள்” (The Seven Pagodas) என்ற தலைப்பில் இலண்டனில் ஒரு நூல் வெளியிட்டார்.[1]

1931இல் டி.ஆர். ஃபைசன் (D.R. Fyson) என்பவர் “மகாபலிபுரம் அல்லது ஏழு கோவில்கள்” (Mahabalipuram or Seven Pagodas) என்ற தலைப்பில் சிறியதொரு நூலை வெளியிட்டார். ஃபைசன் நெடுங்காலம் சென்னையில் வாழ்ந்த ஒரு பிரித்தானியர். அவர் எழுதிய சிறுநூல் ஐரோப்பிய பயணியருக்கு மாமல்லபுரம் பற்றிய செய்திகள் வழங்குகின்ற ஒருபயணக்கையேடு.[2] தாம் எழுதிய சிறு நூலின் கடைசிப் பக்கங்களில் அவர் தமிழ்நாட்டில் மாமல்லபுரக் கோவில்கள் பற்றி வழங்கிவந்த புராதனச் செய்தியையும் குறிக்கிறார். அதாவது, சீரும் சிறப்புமாகப் பல கோவில்களைக்கொண்டு விளங்கிய மாமல்லபுரத்தைப் பார்த்து இந்திரன் பொறாமை கொண்டு, பெரியதொரு புயலை அனுப்பி அந்நகரை அழித்துவிட்டாராம். கடற்கரைக் கோவில் மட்டும் தப்பியது.[3] கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் கடலலைகளின் கீழே கோவில்கள் “ஒளிர்ந்து மிளிர்வது” பற்றிக் கூறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு மூழ்கிப்போன ஆறு கோவில்கள் உண்மையிலேயே உள்ளனவா என்பது குறித்து ஃபைசன் ஆய்வு நிகழ்த்தவில்லை. மாறாக, ஏழு கோவில்கள் பற்றிய மரபினால் மாமல்லபுரம் புகழ்பெற்றதே அவருக்கு முக்கியமானதாயிற்று.

இருப்பினும், இன்றைய மாமல்லபுரத்தை அடுத்த கடல்பகுதியில் வேறு கோவில்களும் கட்டடங்களும் கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளனவா என்பது பற்றிய அறியும் ஆர்வம் மக்கள் நடுவிலும், அகழ்வாளர் நடுவிலும் தொடர்ந்து இருந்துவந்துள்ளது.

ஆய்வாளர் முயற்சிகள்

[தொகு]

இந்திய வரலாற்று அறிஞர் என்.எஸ். இராமசுவாமி (N. S. Ramaswami) 1993இல் வெளியிட்ட “தென்னிந்தியக் கோவில்கள்” (Temples of South India) என்ற நூலில் 13ஆம் நூற்றாண்டு பயணி மார்க்கோ போலோ மாமல்லபுரம் சென்ற செய்தியைக் குறிப்பிடுகிறார். மார்க்கோ போலோ மாமல்லபுரத்தை நிலப்படத்தில் காட்டினார்.[4]

ஐரோப்பியர் பலர் பிரித்தானிய இந்தியாவுக்குச் சென்று திரும்பியதோடு “ஏழு கோவில்கள்” பற்றியும் பேசினர். 18-19 நூற்றாண்டுகளில் சென்னையில் வாழ்ந்த பிரித்தானிய வானியல் ஆய்வாளர் ஜான் கோல்டிங்காம் (John Goldingham) என்பவர் 1798இல் மாமல்லபுரம் சென்றது பற்றியும் கடல்கோளால் மறைந்த மாமல்லபுரக் கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி குறித்தும் உரைக்கிறார். அவர் கூறியவற்றை மாற்கு வில்லியம் கார் (Mark William Carr) என்பவர் தொகுத்து தாம் வெளியிட்ட நூலில் அளித்தார். அந்த நூலின் பெயர் “சோழமண்டலக் கரையில் அமைந்த ஏழு கோவில்கள் பற்றிய விளக்கம் மற்றும் வரலாற்று ஆய்வுகள்” (Descriptive and Historical Papers Relating to the Seven Pagodas on the Coromandel Coast) என்பது. அது 1869இல் வெளியானது.

கோல்டிங்காம் பெரும்பாலும் மாமல்லபுரத்துக் கலைப்பொருள்கள், சிலைகள், கல்வெட்டுகள் பற்றிப் பேசினார். கல்வெட்டுகள் பலவற்றையும் அவரே தம் கைப்பட பிரதி எடுத்து வெளீட்டார். அவருடைய விளக்கப்படி, அக்கல்வெட்டு படவடிவ எழுத்துக்குறிகளைக் கொண்டவை, அவற்றின் வடிவம் பார்த்து அவை எப்பொருள் தருகின்றன என்று காண வேண்டும். மேற்கூறிய நூலில் பெஞ்மின் கி பாபிங்டன் என்பவர் தாம் எழுதிய கட்டுரையில் மாமல்லபுரக் கல்வெட்டுகளில் தெலுங்கு எழுத்துக்கள் உள்ளன என்றார்.

பிரித்தான எழுத்தாளர் ஜே.டபிள்யூ. கோம்ப்ஸ் (J.W. Coombes) என்பவர் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மரபுச் செய்தியையும் ஐரோப்பிய கருத்தையும் 1914இல் எடுத்துரைத்தார். மாமல்லபுரத்துக் கடற்கரையில் ஒருகாலத்தில் பலகோவில்கள் இருந்தன என்றும், அக்கோவில்களின் கூரையில் வேய்ந்த தாமிரத் தகடுகள் கதிரவனின் ஒளியில் ஒளிர்ந்து கடல் பயணிகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்தன என்றும், மக்கள் பொதுவாக ஏழுகோவில்கள் இருந்ததாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

என்.எஸ். இராமசுவாமி கருத்துப்படி, மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுவதற்கு முக்கிய காரணம் 1810இல் ராபர்ட் சவுதி (Robert Southey) என்பவர் வெளியிட்ட “கேகமாவின் சாபம்” (The Curse of Kehama) என்னும் காப்பியமே. அக்கவிஞர் தமது படைப்பில் மாமல்லபுரத்துக் கடலின் கீழே கோவில்கள் உள்ளன என்றார்.

ஆய்வாளர் இராமசுவாமி கருத்து

[தொகு]

என்.எஸ். இராமசுவாமி மாமல்லபுரத்தில் கடல்கொண்ட கோவில்கள் உண்டு என்னும் செய்திக்கு வரலாற்று ஆதாரம் இருந்ததாகக் கருதவில்லை. இருப்பினும், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மாமல்லபுரத்தின் பல வரலாற்றுக் கட்டடங்கள் மணலுக்குள் அழுந்திக் கிடந்தன என்றும், பிரித்தானியக் குடியேற்றத்தாரும் அவருடைய குடும்பத்தாரும் தம் ஓய்வு நேரத்தில் உழைத்து அந்த வரலாற்றிடங்களை வெளிக்கொணர்ந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். மாமல்லபுரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்ததும் பிரித்தானியர் கோலின் மாக்கென்சி (Colin Mackenzie) போன்ற அறிஞரின் துணையோடு அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.

மறைந்துபோன வரலாற்று ஆதாரம்

[தொகு]

2004, திசம்பர் 26இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னால் மாமல்லபுரத்து மறைந்த கோவில்கள் பற்றிய செய்தி, ஆதாரங்களோடு உறுதியாக நிறுவப்படவில்லை. கடற்கரைக் கோவில், இரத வடிவிலான குடைக்கோவில்கள் மற்றும் கட்டுக்கோவில்கள் ஆகியவை ஒரே இடத்தில் காணப்பட்டது அந்த இடத்தின் சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தின. எனவே, மேலாதிக்க கோவில்கள் அங்கு இருந்திருக்கலாம் என்ற ஊகம் உறுதியாகவே இருந்தது.

மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மர்மம் தோன்றியதற்கு என்.எஸ். இராமசுவாமி அளித்த விளக்கம்: ”2000 ஆண்டு தொன்மை வாய்ந்த கலாச்சார அறிகுறிகள், மாமல்லபுரத்தில் தற்போதுள்ள சுமார் 40 கட்டடங்கள், வெளியே அமைந்துள்ள சிற்பத்தொகுதிகள் இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் மனத்தில் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுந்தது. அதற்கு ஐரோப்பியர்கள் ஊக்கமளித்தார்கள். ஆனால் உண்மையிலேயே மாமல்லபுரத்து மறைந்த கோவில்களுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை.”

ஆனால், வாய்மொழிச் செய்தியும் சில வேளைகளில் உண்மையாகலாம் என்பது விரைவில் தெரிந்தது.

மாமல்லபுரத்தில் நீருக்கடியில் உள்ள கோவில்

2002ஆம் ஆண்டு ஆய்வு

[தொகு]

மாமல்லபுரத்துக் கடலோரத்தில் மீனவர்கள் நீருக்கடியில் கட்டடங்கள் பகுதிகளைக் கண்டதாகக் கூறிய இடத்தில் 2002இல் அறிஞர்கள் ஆய்வைத் தொடங்கினர். அந்த ஆய்வுத்திட்டம் இந்திய தேசிய கடலாய்வு நிறுவனத்தாலும் (National Institute of Oceanography) ஐக்கிய இராச்சிய “அறிவியல் ஆய்வுக் கழகத்தாலும்” (Scientific Exploration Sociey) இணைந்து மேற்கொள்ளப்பட்டன.

அந்த இரு குழுக்களும் கண்டுபிடித்தவை: கடற்கரையிலிருந்து சுமார் 500-700 மீ. தொலைவில் 5-8 மீ. நீருக்கும் மணல்படுகைக்கும் அடியில் சுவர்ப் பகுதிகள். அவை பரந்து விரிந்து கிடந்த அமைப்பைக் கண்டபோது அவை பல கோவில்களின் பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. அந்தக் கட்டடங்கள் பல்லவர் காலத்தவை என்றும், முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை என்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் பல கண்டுபிடிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறினர்.

சுனாமி வெளிக்கொணர்ந்த கட்டடப் பகுதிகள்

[தொகு]

2004, திசம்பர் 26இல் நிகழ்ந்த சுனாமியின் விளைவாக மாமல்லபுரத்துக் கடல் பகுதியில் கடல்நீர் சுமார் 500 மீ. பின்வாங்கியது. அப்போது ஊர்மக்களும் சுற்றுப்பயணிகளும் கடல் மண் பகுதியில் நீண்ட தூரம் வரிசையாக அமைந்த பெரிய பாறைகள் தோன்றியதைக் கண்டனர். கடல் நீர் மீண்டும் கரைநோக்கி வந்து மணல்பகுதியை மூடியதும் அப்பாறை வரிசைகளும் நீருக்குள் மூழ்கின.

ஆயினும், பல நூற்றாண்டுகளாகப் படிந்த மணல் படுகைகளை அலைநீர் அடித்துச் சென்றுவிட்டிருந்தது. சுனாமியின் விளைவாக மாமல்லபுரக் கடலோர எல்லையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடலடியிலிருந்த பல சிலைகளும் கட்டடப் பகுதிகளும் கண்ணுக்குத் தென்படலாயின.[5]

மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய ஆய்வைத் தொடர்கையில் சுனாமியின் விளைவாக வேறு கண்டுபிடிப்புகளும் வெளிவந்தன. கல் பாளங்கள் அமைந்த பகுதிக்குக் கீழே செங்கல்லால் ஆன கட்டடப் பகுதிகள் தெரியவந்தன. இந்த இருவகைக் கட்டுமானப் பொருள்களும் வெவ்வேறு காலத்தவை என்பது தெளிவு. கல் பாளங்கள் அமைந்த பகுதி பல்லவர் காலத்தது என்று கொண்டால் அதற்கு அடியில் உள்ள செங்கல் பகுதிகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவை என்பது அறிஞர் கருத்து.

சங்ககாலக் கோவில் பகுதிகள் கண்டுபிடிப்பு

[தொகு]

சங்ககாலக் கட்டடங்களும் குடியிருப்புகளும் சுனாமி கடல்கோள் காரணமாக மறைந்திருக்க வேண்டும். இந்திய அகழ்வாய்வு ஆராய்ச்சிக் கழகத்தின் (Archeological Survey of India) சார்பாக நடந்த ஆய்வுமுடிவுகள் பற்றி டி. சத்தியமூர்த்தி இவ்வாறு கூறினார்: “சுனாமி அலைகள் வெளிக்கொணர்ந்த ஒரு பெரிய பாறைக் கல்வெட்டுகள் கி.பி. 935ஆம் ஆண்டைச் சார்ந்தவை. அவற்றில் மூன்றாம் கிருஷ்ணா என்ற கர்நாடக வம்ச மன்னன் கோவிலில் அணையா விளக்கு எரியும் வகைக்காகக் கோவிலிக்குப் பொன் கொடுத்த செய்தி உள்ளது. எனவே நாங்கள் இன்னும் ஆழமாக அகழ்ந்தோம். அங்கு நாணயங்கள், மண்பாண்டத் துண்டுகள், சுண்ணத்தால் ஆன சிறு உருவங்கள், பித்தளை விளக்குகள் போன்றவை கிடைத்தன. விரைவிலேயே 9ஆம் நூற்றாண்டு பல்லவ காலத்துக் கோவில் பகுதிகளைக் கண்டுபிடித்தோம்.”

அகழ்வாய்வு தொடர்ந்தபோது பண்டைய சங்க காலக் கோவில் பகுதிகள் தோன்றின. செங்கல் கட்டடப் பாணியிலிருந்து கருங்கள் பாளங்கள் அமைந்த கட்டடப் பாணிக்கு மாற்றம் ஏற்பட்டது தெளிவாகத் தெரிந்தது. சங்ககாலக் கோவில் தகர்க்கப்பட்டபின், அதன் அடித்தளத்தின் மீதே பல்லவர்கள் கோவிலை எழுப்பியுள்ளார்கள்.

சங்ககாலத்து சுனாமி

[தொகு]

அகழ்வாய்வின் போது தெரிந்த மற்றொரு உண்மை, பல அடுக்குகளாக அமைந்த கடல் சிப்பிப் பரப்புகள் மற்றும் இடிமானங்கள். அவற்றின் அடிப்படையில் ஆய்வாளர்கள் அந்த இடத்தில் சுனாமி இரு முறை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பல்லவர் காலத்துக் கட்டடங்கள் 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமியில் அழிந்தன. அதற்குக் கீழே மணலுக்கு அடியில் தெரிந்த செங்கல் கட்டடப் பகுதிகளைப் பார்க்கும்போது சங்ககாலத்தில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னிருந்த கோவிலும் சுனாமிக்கு இரையாகியிருக்க வேண்டும். இவ்வாறு இந்திய நில ஆய்வுக் கழக முன்னாள் இயக்குநர் எஸ். பத்ரிநாராயணன் கூறினார்.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு உட்பட் 1,200 கி.மீ. தூரம் இந்த சுனாமி அழிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு கடற்கரையிலிருந்து கடலுக்குள்ளாக சுமார் 1 கி.மீ. தூரத்திலும் பெரிய கட்டடங்கள் அழிவுப் பகுதிகள் கிடைத்துள்ளன. அவை முற்காலத்து மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்களின் பகுதிகளாக இருக்கலாம் என்று ஆழ்வியலார் கருதுகின்றனர்.

சுனாமி வெளிக்கொணர்ந்த சிங்கச் சிலை

[தொகு]

2004ஆம் ஆண்டு சுனாமியால் கடலிலிருந்து வெளிப்பட்ட வரலாற்று ஆதாரங்களுள் மிகச் சிறப்புவாய்ந்தது பெரியதொரு சிங்கச் சிலை ஆகும். மணற்கல்லால் ஆன இச்சிங்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர் கருதுகின்றனர்.[6] இது பல்லவர் காலத்ததே என்பதற்குத் தெளிவான அடையாளங்கள் உள்ளன.

பிற கண்டுபிடிப்புகள்

[தொகு]

2005 ஏப்பிரல் மாதத்தில் இந்திய அகழ்வாய்வுக் கழகமும் இந்திய கடற்படையும் மாமல்லபுரக் கடல்கரைப் பகுதியில் நீருக்குள் ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு (sonar) நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்ந்தனர். அதன்போது, 2004ஆம் ஆண்டு சுனாமி வெளிக்கொணர்ந்த பாறைக் கூட்டம் என்பது ஆறடி உயரமும் 230 அடி நீளமும் கொண்ட சுவரின் பகுதிகள் என்று கண்டனர். மேலும், கடற்கரையிலிருந்து 500 மீ. தூரத்தில் கடலுக்கடியில் வேறு இரண்டு கோவில்களின் பகுதிகளும் ஒரு குகைக்கோவில் பகுதியும் காணப்பட்டன. மேலும் கடலில் மூழ்கிய 25 மீ. நீளம் மற்றும் 28 மீ. அகலம் கொண்ட கோவிலின் கர்பகிரகம் (ஒவ்வொரு பக்கமும் 2.6 மீ. கொண்ட சமசதுரம்), அதைச் சூழ்ந்த பகுதி, பிரகாரம் ஆகியவையும் தெளிவாகத் தெரிந்தன. இடிந்து விழுந்த கோவில் சிகரம், கலசம் போன்றவையும் மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலில் உள்ளதுபோலவே உள்ளன.

கர்பகிரகப் பகுதியில் காணப்பட்ட கருங்கல் பாளங்களில் கட்டடக் கலைஞரின் கையெழுத்துப் போல ஒரு பறவை வரையப்பட்டுள்ளது. மேலும் அம்பும் வில்லும் உள்ளன. குறுக்கு நெடுக்காக இரு முக்கோணங்கள் ஒரு வண்ணத்துப் பூச்சி வடிவைக் காட்டுகின்றன. இத்தகைய சின்னங்கள் பல்லவர் காலக் கட்டடங்களில் இதுவரை காணப்படவில்லை என்று தெரிகிறது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

இப்பொருள்கள் பற்றியும் அகழ்வில் கிடைத்த கல்வெட்டுகள், பல்லவர் காலத்திற்கு முற்பட்டதாகத் தெரிகின்ற சுடுமண்ணால் (terracotta) கட்டப்பட்ட கிணறு போன்றவற்றைப் பற்றி டி.எஸ். சுப்பிரமணியன் ஃப்ரண்ட்லைன் இதழில் விரிவான தகவல்கள் தருகின்றார்.[7]

மாமல்லபுரத்தின் ஏழு கோவில்களா?

[தொகு]

மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற புராதனச் செய்தி முற்றிலும் உண்மையே என்று கூறமுடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. Adapted from Coombes, J.W. (Josiah Waters). The Seven Pagodas. London, UK: Selley, Service & Co., Ltd., 1914, 23-4.
  2. Fyson, D. R. Mahabalipuram or Seven Pagodas. Madras, Tamil Nadu, India: Higginbothams, Publishers, 1931.
  3. Fyson, D. R. Mahabalipuram or Seven Pagodas. Madras, Tamil Nadu, India: Higginbothams, Publishers, 1931. (Fyson 28).
  4. Ramaswami, N. S. Temples of South India. Madras, Tamil Nadu, India: Maps and Agencies, 1993.
  5. Maguire, Paddy. "Tsunami Reveals Ancient Temple Sites." BBC News (Online) 27 Oct. 2005. Retrieval 9 Sep. 2006 [1].
  6. [2]
  7. மாமல்லபுரத்து மறைந்த கோவில்கள் பற்றிய அகழ்வாய்வுத் தகவல்கள்

குறிப்புகள்

[தொகு]