மாநிலங்களவைத் தேர்தல் 2026 (2026 Rajya Sabha elections) என்பது இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களுக்கிடையே வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக அதன் 245 உறுப்பினர்களில் 75 பேரை இந்திய நாடாளுமன்றத்தின்மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தேர்தல் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களில், மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் 233 பேரைத் தேர்ந்தெடுக்கின்றனர். மீதமுள்ள 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.[1]
மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால், 'ஒற்றை மாற்றத்தக்க வாக்கு' முறை மற்றும் 'விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ' முறையைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் 'வெளிப்படையான வாக்குப்பதிவு' முறை பின்பற்றப்படுகிறது; ஒவ்வொரு வாக்காளரும் (சட்டமன்ற உறுப்பினர்) வேட்பாளர்களைத் தங்களின் முன்னுரிமை வரிசைப்படி (1, 2, 3 என) வரிசைப்படுத்தி வாக்களிக்கின்றனர். ஒரு இடத்தைக் கைப்பற்ற, வேட்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளைப் (வாக்கு ஒதுக்கீடு) பெற வேண்டியது அவசியமாகும்.
ஒரே ஒரு இடத்திற்கான தேர்தலில், ஒவ்வொரு வாக்குச்சீட்டின் மதிப்பும் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல இடங்கள் நிரப்பப்படும்போது, வாக்குச்சீட்டின் மதிப்பு நூறாக நிர்ணயிக்கப்படுகிறது.[2]
வேட்புமனு தாக்கல் மற்றும் அவற்றை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, வேட்பாளர்களின் எண்ணிக்கையும் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்போது, ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[3]