மாநாய்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாவாய் வணிகனை ‘நாய்கன்’ என்றனர்.

உறையூர்ப் பொருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். [1] இந்தப் புலவரின் தந்தை ‘உறையூர்ப் பெருங்கோழி நாய்கன்’ எனப் போற்றப்பட்டவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. பெருங்கோழி என்னும் சொல் கோழியார் எனவும் வழங்கப்பட்ட உறையூரைக் குறிக்கும். நாய்கன் என்னும் சொல் நீர்வழி தொழிலாளியைக் குறிக்கும். இவன் காவிரியாற்றைக் கடக்க நாவாய் ஓட்டி உதவிய வணிகன்.

சிலப்பதிகாரக் கண்ணகியின் தந்தை ‘மாநாய்கன்’ எனப் போற்றப்பட்டான். நாய்கன் எனப்பட்ட வணிகர்களின் தலைவனை ‘மாநாய்கன்’ என்றனர். அன்றியும் நாவாய் ஓட்டியவனை ‘நாய்கன்’ என்றும். பெரிய நாவாய்களைப் கடலில் ஓட்டியவனை ‘மாநாய்கன் என்றும் வழங்கினர் என்றும் கொள்ளலாம்.

மாநாய்கன் வரலாறு[தொகு]

கண்ணகியின் தந்தை மாநாய்கன். அவன் மழைமேகம் போல வழங்கும் கொடையாளி. [2] தன் மருமகன் கோவலனை பாண்டியன் கொலை செய்தான் என்பது கேட்டு வருந்தினான். சம்பந்தி மாசாத்துவானும் தானும் தம்மிடம் இருந்த செல்வங்களை யெல்லாம் தானமாகக் கொடுத்துவிட்டு இருவருமாகத் துறவு பூண்டனர். [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 83, 84, 95
  2. மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
    ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்; (சிலப்பதிகாரம், காதை 1)
  3. கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
    காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
    சாவது-தான் வாழ்வு’ என்று, தானம் பல செய்து,
    மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
    மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ, அன்னை? (சிலப்பதிகாரம், காதை 29)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநாய்கன்&oldid=2241921" இலிருந்து மீள்விக்கப்பட்டது