மாத்தளை அருணேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாத்தளை அருணேசர் என்ற பெயரில் எழுதி வந்த அ. ச. அருணாசலம் (மே 30, 1905 - மே 3, 1986) இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மாத்தளையில் மந்தந்தாவளை என்ற இடத்தில் வசித்து வந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

அரு­ணாச்­சலம் கேகாலை மாவட்டம், சன்னிகிராப்ட் என்னும் இறப்பர் தோட்­டத்தில் 1905 ஆம் ஆண்டில் பிறந்தவர். இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கல்வி பயின்று இலங்கையின் மலையகத்தில் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும், பின்னர் பின்னர் இலங்கை அரச நெல் கொள்வனவுச் சபையிலும் பணியாற்றி 1964 இல் ஓய்வு பெற்றார்.[1]

எழுத்துலகில்[தொகு]

தமிழகத்தில் பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்ட லோகோபகாரி இதழில் இவருடைய கட்டுரைகள் 1920களில் வெளிவந்தன. ஆனந்தப் போதினி, அமிர்­த­கு­ண­போ­தினி, கலைக்­கதிர், கலை­மகள், மஞ்­சரி ஆகிய இதழ்களில் கட்டுரைகளை எழுதினார்.[1] சிங்கள மொழியில் வெளி­யான சில சமய, சரித்­திரக் கட்­டு­ரை­களை தமிழில் மொழிபெ­யர்த்து எழுதிய கட்டுரைகள் மஞ்சரியில் வெளியாகியுள்ளன. அ. ச. அருணாச்சலம் என்ற பெயரில் எழுதி வந்த இவர் மாத்தளை அருணேசர் என்ற பெயரில் 1947 இல் தந்தையின் உபதேசம் என்ற சிறுகதையை கலைமகளில் எழுதினார்.[1]

நவரத்தினங்கள் பற்றிய நூலை சென்னை அமுதா நிலை­யத்­தி­னூ­டாக ஒன்பது மணிகள் என்ற பெயரில் நூலாக 1962 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் 1962 இல் மஞ்சரி இதழில் வெளிவந்தது. பின்னர் 1972 இல் மஞ்சரி இதன் சுருக்கத்தை புத்தகச் சுருக்கம் என்ற பகுதியில் வெளியிட்டது.[1]

இலங்கையில் கோ. நடேசையரின் தேச­பக்தன் (1929), மற்றும் வீரகேசரி, தினகரன், ஆத்மஜோதி, தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் அருணேசரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

கௌரவம்[தொகு]

மல்லிகை இதழின் 1985 பெப்ரவரி இதழில் மாத்தளை கணேசரின் படத்தை அட்டைப் படத்துடன் வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

பிற்காலம்[தொகு]

1983 இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட அருணேசர் மாத்தளையை விட்டு வெளி­யேறி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, வாழைச்சேனையில் குடியேறினார். அங்கு அவர் தனது 80வது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 துயர் பகிர்தல்: மாத்தளை அருணேசர், வீரகேசரி, அக்டோபர் 12, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தளை_அருணேசர்&oldid=3069359" இலிருந்து மீள்விக்கப்பட்டது