மாதவிடாய் சுழற்சி
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாதவிடாய் சுழற்சி (Menstrual Cycle) பெண்களின் இனப்பெருக்க காலமான பூப்பெய்தல் முதல் மாதவிடாய் நிறைவு செய்யும் வரை கர்ப்பகாலம் நீங்கலாக சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி அல்லது அண்டக சுழற்சி நிகழ்கிறது. ஒரு மாதவிடாய்க்கும் அடுத்த மாதவிடாய்க்கும் இடைப்பட்ட காலத்தில் கருப்பையின் உட்சுவரில் நிகழும் சுழற்சி மாற்றங்களே மாதவிடாய் சுழற்சி எனப்படும். ஒழுங்கான மாதவிடாய் சுழற்சி இயல்பான இனப்பெருக்க நிலையைக் குறிக்கிறது.
மாதவிடாய் சுழற்சி நிலைகள்
[தொகு]- மாதவிடாய் ஒழுக்கு நிலை
- நுண்பை செல்கள் பெருகு நிலை
- அண்ட அணு வெளியேறும் நிலை
- இயக்குநீர் சுரப்பு நிலை
மாதவிடாய் ஒழுக்கு நிலை
[தொகு]மாதவிடாய் சுழற்சியானது மாதவிடாய் ஒழுக்கு நிலையில் தொடங்குகிறது. இந்நிலையில் 3-5 நாட்கள் வரையில் உதிர ஒழுக்கு ஏற்படுகிறது. புரோசசுடிரோன் மற்றும் ஈஸ்ட்ரோசன் இயக்குநீர் அளவு குறைவதால் கருப்பையின் உட்சுவர் மற்றும் அதனோடு இணைந்துள்ள இரத்தக் குழாய்கள் சிதைவடைந்து உதிர ஒழுக்கு வெளிப்படுகிறது. விடுவிக்கப்பட்ட அண்டம் கருவுறாவிட்டால் மட்டுமே மாதவிடாய் ஏற்படுகிறது. மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது கருவுற்று இருப்பதற்கான அறிகுறியாகும். இருப்பினும் மன அழுத்தம், இயக்குநீர் கோளாறுகள் மற்றும் இரத்த சோகை போன்ற காரணங்களாலும் மாதவிடாய் ஏற்படாமல் இருக்கலாம்.
நுண்பை செல்கள் பெருகு நிலை
[தொகு]மாதவிடாய் சுழற்சியின் 5 ஆம் நாளில் இருந்து அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டமே நுண்பை செல்கள் பெருகு நிலை எனப்படும். இந்நிலையில் அண்டகத்திலுள்ள முதல் நிலை நுண்பை செல்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து முதிர்ந்த நுண்பை செல்களாக மாறுகின்றன. அதே வேளையில் கருப்பையின் உட்சுவர் பல்கிப் பெருகி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. நுண்பை நிலையில் உள்ள நுண்பை செல்களைத் தூண்டும் இயக்குநீர் மற்றும் லூட்டினைசிங் ஆகிய இனப்பெருக்க இயக்குநீரின் சுரப்பு சீராக அதிகரிப்பதால் அண்டகம் மற்றும் கருப்பை தூண்டப்பட்டு மேற்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் நுண்பை செல்களின் வளர்ச்சியும் அவற்றிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோசனின் அளவும் அதிகரிக்கின்றன.
அண்ட அணு விடுபடும் நிலை
[தொகு]மாதவிடாய் சுழற்சியின் நடுமத்தியான 14 ஆம் நாளில் நுண்பை செல்களைத் தூண்டும் இயக்குநீர் மற்றும் லூட்டினைசிங் இயக்குநீரின் அளவு உச்ச நிலையை எட்டுகிறது. இவ்வாறு மாதவிடாய் சுழற்சியின்மைய நாளில் அதிக அளவில் லூட்டினைசிங் உற்பத்தியாவது ‘லூட்டினைசிங் எழுச்சி நிலை’ எனப்படும். இதனால் முதிர்ந்த நுண்பை உடைந்து அண்ட அணு (இரண்டாம் நிலை அண்ட அணு) அண்டகச் சுவரின் வழியாக வெளியேற்றப்பட்டு வயிற்றுக்குழியை அடைகிறது.
இயக்குநீர் சுரப்பு நிலை
[தொகு]மீதமுள்ள முதிர்ந்த நுண்பை அணுக்கள் ஒரு இடை க்கால நாளமில்லாச் சுரப்பியான ‘கார்பசு லூட்டியம்’ என்னும் அமைப்பாக மாறுகிறது. கருப்பை சுவரின் உள்ளடுக்கை பராமரிக்க உதவும் முக்கிய இயக்குநீரான புரோசசுடிரோனை கார்பஸ் லூட்டியம் அதிக அளவில் சுரக்கிறது. கருவுறுதல் நிகழ்ந்தால், கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை புரோசசுடிரோன் உருவாக்குகிறது. கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிரம்பிய திரவத்தை கருப்பையினுள் வளரும் கருவிற்காக சிறிதளவு உற்பத்தி செய்கிறது. எனவே இது ‘சுரப்பு நிலை ’ என்றும் அழைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு மாதவிடாயும் நின்றுவிடுகிறது. கருவுறுதல் நிகழா விட்டால் கார்பஸ் லூட்டியம் முற்றிலுமாகச் சிதைவுற்று ‘கார்பசு அல்பிகன்சு’ எனும் வடு போன்ற திசுவை உருவாக்குகிறது. மேலும் கருப்பையின் உட்சுவர் சிதைவும் தொடங்குவதால் மாதவிடாய் உதிர நிலை ஏற்படுகிறது. இது அடுத்த மாதவிடாய் சுழற்சியின் தொடக்கமாகும்.
பிற உயிரிகளில் மாதவிடாய் நிலை
[தொகு]| மனிதன் | பிரைமேட்ஸ் | முட்கள் நிறைந்த எலி | மூஞ்சூறு | குட்டை வால் பழ வௌவால் சி. பெர்ஸ்பிசில்லாட்டா |
|---|---|---|---|---|
| 28 நாட்கள் | 21–37 நாட்கள் | 8–9 நாட்கள் | 12 நாட்கள் | 21–27 நாட்கள் |
மேற்கோள்கள்
[தொகு]"மாதவிடாய்". Retrieved 2026-03-06.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் மாதவிடாய் சுழற்சி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.