மாதண்ணா மற்றும் அக்கண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதண்ணா மற்றும் அக்கண்ணா (Madanna and Akkanna) 1674 மற்றும் 1685க்கும் இடையில் கோல்கொண்டா சுல்தானகத்தில் முக்கியத்துவம் பெற்ற இரண்டு சகோதரர்கள் ஆவர். அக்டோபர் 1685 இல் தங்கள் வாழ்க்கையின் முடிவில் இவர்கள் கோல்கொண்டாவில் இராச்சிய விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இவர்கள் நிர்வாகிகளாக அப்ப்குதிகளை ஆட்சி செய்தனர். ஏனென்றால் சுல்தானகத்தின் உயரடுக்கின் பெரும்பகுதி முஸ்லிம்களாக இருந்துள்ளனர்..

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இந்த சகோதரர்கள் அனம்கொண்டாவில் நான்கு சகோதரர்கள் மற்றும் சில சகோதரிகளைக் கொண்ட ஒரு நியோகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்துள்ளனர். இவர்களில், டச்சு சமகால ஆதாரங்களின்படி, அக்கண்ணா அவரது தாய்க்கு மிகவும் பிடித்தவராக இருந்துள்ளார். இருப்பினும், மாதண்ணா மிகவும் திறமையானவராக இருந்துள்ளார். இவர்கள் தெலுங்கு அல்லது மராட்டிய பிராமணர்களா என்ற கேள்வி குறித்து வரலாற்று இலக்கியங்களில் சில விவாதங்கள் நடந்துள்ளன. இவர்கள் சூர்யனுடன் சிவன் அல்லது விஷ்ணு ஆகிய இருவரையும் வழிபட்ட ஸ்மார்த பிராமணர்கள் என்று திறிகிறது. [1] அவர்கள் நியோகிகள் மற்றும் பத்ராச்சல இராமதாசின் மாமாக்கள் ஆவார்கள். அக்கண்ணாவின் சந்ததியினர் அக்கராஜுக்கள் என்றும், மாதண்ணாவின் சந்ததியினர் மாதராஜுக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். முதலில் அவர்களுக்கு பிங்கிலி என்ற குடும்பப்பெயரும் இருந்துள்ளது.

வாழ்க்கை[தொகு]

மாதண்ணா கோல்கொண்டா சுல்தானின் அவையில் எழுத்தராகத் தொடங்கி திறமை, தந்திரம் மற்றும் சூழ்ச்சி மூலம் உயர்ந்தார். ஒரு கட்டத்தில் பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரபு சையீத் முசாபரின் சேவைக்கு மாதண்ணாவும் அக்கண்ணாவும் சென்றார்கள். சையித் முசாபர் அபுல் ஹசனை (1672-1687) அரியணைக்குக் கொண்டுவந்த சிறிது காலத்திற்குப் பிறகு, அமைச்சரான மாதண்ணாவும் இவரது சகோதரரும் கருவூலத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். [2] பொருளாளராக, மாதண்ணா சுல்தான் இறக்கும் வரை பெயரளவிற்கு சுல்தானாக இருந்ததைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் அவரது சகோதரர் அக்கண்ணா மற்றும் அவரது மருமகன் இருஸ்தம் ராவ் ஆகியோரின் உதவியுடன் மேலும் மேலும் சக்திவாய்ந்தவராக ஆனார். அக்கண்ணா முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்ல என்றாலும் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இராணுவ நடவடிக்கைக்காக இல்லாமல் போர் நடப்பதை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டார். [3]

நிர்வாகம்[தொகு]

மாதண்ணாவின் மிக முக்கியமான கொள்கைகள் முகலாயப் பேரரசரைத் தடுத்து வரி அல்லது வருவாய் வசூலை சீர்திருத்துவதாகும். 1677 இல் சிவாஜி மற்றும் பிஜப்பூர் சுல்தானகத்தில் உள்ள சிலருடன் கூட்டணி வைத்து தோல்வியடை பின்னர், தக்கான சுல்தான்களை அடிபணியச் செய்ய விரும்பிய முகலாய பேரரசர் அவுரங்கசீப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு மாதண்ணா பயன்படுத்திய முறை அவருக்கு கப்பம் செலுத்துவதாகும். நவீன சொற்களில் இந்த கொள்கையை 'திருப்திபடுத்துவது' என்று அழைப்போம். முகலாயப் பேரரசருக்கு மகத்தான பாராட்டு செலுத்தும் பொருட்டு, மாதண்ணா வருவாய் முறையைச் சீர்திருத்தினார். சுருக்கமாக, வசூல் சங்கிலியில் இடைத்தரகர்களிடம் முடிந்தவரை குறைவாக பணம் செல்வதையும், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வருவாய் நேரடியாக மாநிலத்திற்கு வருவதையும் உறுதி செய்தார். [4]

இறப்பு[தொகு]

ஒரு நாள் இரவு தங்கள் அரண்மனையில் சகோதரர்கள் இருவரது தலைகளும் துண்டிக்கப்பட்டு 1685 அக்டோபரில் ஐதராபாத்தின் இளவரசர் ஷா ஆலமிற்கு அனுப்பப்பட்டது. இவர்களது மரணம் மிகவும் சூழ்ச்சிகளாலும் மர்மங்களாலும் சூழப்பட்டுள்ளது,. [5]

அவர்கள் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குள், சுல்தானகம் இறுதியாக முகலாயர்களிடம் விழுந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில், வரலாற்று ஆசிரியர் மெக்கன்சி தொகுப்பில் காணப்படும் உள்ளூர் வரலாறுகளைக் கொண்டு மக்களால் அவர்களின் ஆட்சி ஒரு பொற்காலம் என்று நினைவு கூறப்பட்டது. [6] இன்றைய தெலங்கானாவில் சகோதரர்கள் நிர்வாகிகளாகவும் தியாகிகளாகவும் நினைவு கூரப்படுகிறார்கள். [7]

கோயில்[தொகு]

ஐதராபாத்தில் உள்ள அக்கண்ணா மாதண்ணா கோயில், மற்றும் கோல்கொண்டா கோட்டையில் உள்ள அவர்களின் அலுவலகங்களாக குறிக்கப்பட்ட இடிபாடுகள் இவர்களை அரசியல்வாதிகள் மற்றும் மத பயனாளிகளாக நினைவூட்டுகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. Gijs Kruijtzer, Xenophobia in Seventeenth-Century India (Leiden: Leiden University Press, 2009), 226-30.
  2. S. Krishnaswami Aiyangar, "Abul Hasan Qutub Shah and his Ministers, Madanna and Akkanna." Journal of Indian History (August 1931): 91-142.
  3. Gijs Kruijtzer,Xenophobia in Seventeenth-Century India (Leiden: Leiden University Press, 2009), 237-9
  4. Gijs Kruijtzer,Xenophobia in Seventeenth-Century India (Leiden: Leiden University Press, 2009), 230-42
  5. Khafi Khan, Muntakhab ul-Lubab (Persian text), 308
  6. Gijs Kruijtzer,Xenophobia in Seventeenth-Century India (Leiden: Leiden University Press, 2009), 248-9
  7. K.V. Bhupala Rao, The Illustrious Prime Minister Madanna. Hyderabad, [1984].