மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் விடுதலைப்புலிகளால் நவம்பர் 21, 1990 இல் ஆரம்பிக்கப்பட்டு, நவம்பர் 23, 1990 அன்று முழுமையாக அம்முகாம் கைப்பற்றப்பட்டது.

பின்னணி[தொகு]

இந்திய அமைதி காக்கும் படை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று இது குறிப்பிடப்படுகிறது.

அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை விரிந்த கூட்டுப்படைத்தளத்தைக் கொண்டிருந்தனர். கிளிநொச்சியிலும் இராணுவ முகாம் அமைத்திருந்தனர். பின்னர் அம்முகாமைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர்.

வவுனியாவிலிருந்து தெற்குப்பக்கமாக தொடர்ச்சியாக சிறீ லங்கா படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் - ஏ-9 நெடுஞ்சாலை என அழைக்கப்படும் - யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் இரு இடங்களில் சிறீ லங்கா படைகள் முகாம் அமைத்துத் தங்கியிருந்தது. கொக்காவில், மாங்குளம் எனுமிடங்களில் இருந்த முகாம்களே அவைகள்.

சண்டை மூண்டதும் கொக்காவில் முகாம் தாக்கி வெற்றிகொள்ளப்பட்டது. அதன்பின் இடையில் துருத்திக்கொண்டிருந்த ஒரேமுகாம் மாங்குளம் முகாம்தான். தொடக்கத்தில் சிறிதாக இருந்த முகாம் பின்னர் ஒரு நடவடிக்கைமூலம் பெரிதாக்கிப் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் யாழ்.கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிய புலிகள் அடுத்துக் குறிவைத்தது மாங்குளத்தைத்தான்.

வன்னியில் விசாலமான நிலப்பரப்பொன்றையும் கண்டிவீதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டிய தேவையையும் புலிகள் உணர்ந்திருந்தனர். அதன் வெளிப்பாடுதான் தமது முதலாவது பெரிய நடவடிக்கையாக கொக்காவில் முகாமைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. அடுத்து இடையில் துருத்திக்கொண்டிருந்த மாங்குளத்தையும் கைப்பற்றுவது.

அக்காலத்தில் புலிகள் தமது நினைவுநாட்களுக்காக பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் புலிகள் பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்படியே இத்தாக்குதலும் நடந்தது.

இன்று கேணல் நிலையிலிருக்கும் தளபதி பால்ராஜ்ஜின் தலைமையில், இன்னொரு தளபதி தீபனின் துணை வழிநடத்தலுடன் மாங்குளம் முகாம் மீது 21 ஆம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.

தாக்குதல்[தொகு]

அப்போது பிரபலமாக இருந்த புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசீலன் 2000 என்ற எறிகணை செலுத்திகளின் துணையுடன் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. பல பகுதிகள் வெட்டையாக இருந்த நிலையில் தாக்குதலைச் செய்தன புலிப்படையணிகள்.

முடிவில் மாங்குளம் படைமுகாம் வீழும் நிலைக்கு வந்தது. இறுதி முயற்சியாக கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. முகாம் தாக்குதலுக்கான திட்டமிடலின்போது அக்கரும்புலித் தாக்குதலை நடத்துவது யாரென்று தீர்மானிக்கும் நேரத்தில், வன்னிமாவட்டத் துணைத்தளபதியாக இருந்த போர்க் தானே அதை நடத்தவேண்டுமென்று பிடிவாதமாக நின்று அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது

இறுதியில் திட்டமிட்டபடி தளபதி - கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் வெடிமருந்து வாகனம் படைமுகாம் வரை சென்று வெடித்தது. அத்தோடு மாங்குளம் படைமுகாம் புலிகள் வசமானது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

இலங்கை இனப்பிரச்சினை காலக் கோடு