மாங்கனீசு(II) சல்பேட்டு
மாங்கனீசு(II)) சல்பேட்டு (Manganese(II) sulfate) என்பது வழக்கமாக MnSO4·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மத்தைக் குறிக்றிது. இந்த இளஞ்சிவப்பு நிற, நீர் உறிஞ்சும் திறனுடைய திண்மமானது மாங்கனீசு தனிமத்தின் இரண்டு ஆக்சிசனேற்ற நிலை அயனியின் வணிகமுக்கியத்துவம் வாய்ந்த உப்பாகும். 2005 ஆம் ஆண்டில் உலகளவில் இதன் தயாரிப்பு தோராயமாக 260 ஆயிரம் டன்கள் ஆகும். இந்த உப்பானது மாங்கனீசு உலோகம் மற்றும் பல வேதிச்சேர்மங்களின் முன்னோடியும் ஆகும். மாங்கனீசு குறைவான நிலமானது இந்த உப்பினைப் பயன்படுத்தி சீர் செய்யப்படுகிறது.[1]
அமைப்பு
[தொகு]இதர பல உலோக சல்பேட்டுகளைப் போலவே மாங்கனீசு சல்பேட்டும் பலவிதமான ஐதரேட்டுகளை உருவாக்குகின்றன. அவை: ஒற்றை ஐதரேட்டு, டெட்ராஐதரேட்டு, பென்டாஐதரேட்டு போன்றவை ஆகும். ஒற்றை ஐதரேட்டானது மிகச்சாதாரணமான (அல்லது) பொதுவான வடிவம் ஆகும். இந்த அனைத்து உப்புகளுமே நீரில் கரைந்து மிக வெளிறிய இளஞ்சிவப்பு நிற நீர் அணைவுச் சேர்மத்தை [Mn(H2O)6]2+ தருகின்றன. மாங்கனீசு(II) உப்புகளின் வெளிறிய இளஞ்சிவப்பு நிறமானது தனித்தன்மை வாய்ந்தவையாகும்,
தயாரிப்பு மற்றும் பயன்பாடுகள்
[தொகு]மாங்கனீசுக் கனிமங்கள் அவற்றை மாங்கனீசு(II) சல்பேட்டாக மாற்றுவதன் மூலம் தூய்மையாக்கப்படுகின்றன. சல்பேட்டுகளின் நீர்க்கரைசல்களை சோடியம் கார்பனேட்டுடன் வினைப்படுத்துவது மாங்கனீசு கார்பனேட்டினை வீழ்படிவாக்குதற்கு வழிவகுக்கிறது. இந்த மாங்கனீசு கார்பனேட்டானது வறுக்கப்பட்டு மாங்கனீசின் ஆக்சைடுகளைத் (MnOx) தருகிறது. ஆய்வகத்தில், மாங்கனீசு சல்பேட்டானது மாங்கனீசு டை ஆக்சைடுடுன் கந்தக டை ஆக்சைடை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது:[2]
- MnO2 + SO2 → MnSO4
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் சோடியம் பைசல்பேட்டு மற்றும் ஐதரசன் பேரொட்சைடு ஆகியவற்றை வினைப்படுத்துவதன் மூலமும் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. 4-அனிசால்டிகைடு மற்றும் ஐதரோகுயினோன் போன்றவற்றை உள்ளிட்ட பல தொழிலக முக்கியத்துவம் வாய்ந்த, மாங்கனீசு டை ஆக்சைடை பயன்படுத்துகின்ற, ஆக்சிசனேற்றங்களில் மாங்கனீசு சல்பேட்டானது ஒரு உப விளைபொருள் ஆகும்..[1]
மாங்கனீசு சல்பேட்டின் மின்னாற்பகுப்பு மங்கனீசீரொக்சைடைத் தருகிறது. இது மின்னாற்பகுப்பு மாங்கனீசீராக்சைடு என அழைக்கப்படுகிறது. மாற்றாக, மாங்கனீசு சல்பேட்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டால் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் போது வேதிய மாங்கனீசீராக்சைடைத் தருகிறது. இந்தப் பொருள்கள் குறிப்பாக மின்னாற்பகுப்பு மாங்கனீசீராக்சைடு உலர்-மின்கல மின்னடுக்குகளில் பயன்படுகிறது.[1]
விலங்குகளுக்கு இது ஒரு ஊட்டச்சத்து மருந்தாகவும் பயன்படுகிறது. கால்நடைகளில் மாங்கனீசு குறைபாட்டைத் தடுக்கவும், கோழியினத்தில் எலும்பு மெலிவு நோயைத் தடுக்கவும் இது மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. துணி அச்சுத் தொழில் மற்றும் கண்ணாடித் தயாரிப்பில் பயன்படும் பல கனிம வண்ணப்பூச்சுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக உள்ளது.[3] மனிதர்களின் உடல்நலனுக்கு மிகவும் அவசியமானதாக இருப்பதோடு வளர்சிதைமாற்றச் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் ஆக்சிசனேற்றத் தடுப்பானாகவும் மிக முக்கியப்பங்காற்றுகிறது.[4]
பண்புகள்
[தொகு]இச்சேர்மத்தின் உருகுநிலை 710° செல்சியசு ஆகும். வெப்பப்படுத்தும் போது இது கந்தகத்தின் ஆக்சைடுகளை வெளியிடுகிறது. 850° செல்சியசு வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது சிதைவடைகிறது. இச்சேர்மம் ஈதரில் கரையாது. மெத்தனாலில் சிறிதளவு கரையும்.
இயற்கையில் கிடைக்கும் விதம்
[தொகு]மாங்கனீசு(II) சல்பேட்டுக் கனிமங்கள் இயற்கையில் மிக அரிதாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஐதரேட்டுகளாகவே கிடைக்கின்றன. ஒற்றை ஐதரேட்டானது இசுமிகைட்டு எனவும், டெட்ராஐதரேட்டு இலிசைட்டு எனவும், எக்சாஐதரேட்டு(மிக அரிதானது) இச்வாலேடிசெய்ட்டு எனவும், பென்டாஐதரேட்டு ஜோகோகுயைட்டு எனவும் எப்டாஐதரேட்டு மல்லார்டைட்டு எனவும் அழைக்கப்படுகின்றன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Arno H. Reidies "Manganese Compounds" Ullmann's Encyclopedia of Chemical Technology 2007; Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123
- ↑ John R. Ruhoff (1943). "n-Heptanoic acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0315.; Collective Volume, vol. 2, p. 315
- ↑ "Uses of Manganese sulfate". PUBCHEM."Uses of Manganese sulfate". PUBCHEM.
- ↑ "Manganese Sulfate". DrugBank.
- ↑ http://www.mindat.org