மாங்கனித் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாங்கனித் திருவிழா என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூருமுகமாக, காரைக்காலிலுள்ள சுந்தரம்பாள் உடனாய சோமநாதர் கோயில் சார்பில் நடத்தப்படும் திருவிழா ஆகும். காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித் திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.[1][2]

புராண வரலாறு[தொகு]

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானகாரைக்காலில் வாழ்ந்த சிவபக்தையான புனிதவதியின் வீட்டிற்கு வந்து மதிய வேளையில், சிவபெருமான், சிவனடியார் வேடத்தில் வந்து உண்பதற்கு அன்னம் வேண்டினார். புனிதவதியும் அன்னத்துடன், தன் கணவர் பரமதத்தன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்கு படைத்தார்.

வீடு திரும்பிய புனிதவதியின் கணவர் பரமதத்தன், தான் வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை வாங்கி புசித்தார். மாங்கனி நன்கு இனிக்கவே, மீதியிருந்த ஒரு மாங்கனியையும் புசிக்க வேண்டி, தன் மனைவி புனிதவதியிடம், அதனையும் எடுத்து வரச்சொன்னார்.

இதனைக் கேட்ட புனிதவதி திகைத்து நின்று பின் இறைவனை மனதார வேண்டினார். இறைவனின் அருளால், புனிதவதியார் கையில் ஒரு மாங்கனி கிடைத்தது. அம்மாங்கனியைத் தன் கணவர் பரமதத்தனிடம் புசிக்கக் கொடுத்தார். இறைவன் அருளால் கிடைத்த மாங்கனியை சுவைத்த பரமதத்தனுக்கு, ஏற்கனவே உண்ட முதல் மாங்கனியை விட இது மிகமிக சுவையாக இருக்கவே, இம்மாங்கனி நான் ஏற்கனவே புசித்த மாங்கனியை விட அமைப்பும், சுவையும் மிகமிக மாறுபட்ட காரணத்தை வலியுறுத்தி கேட்க, புனிதவதியார் இறைவனின் திருவிளையாடலை எடுத்துரைத்தார்.

இதை நம்ப மறுத்த பரமதத்தன், மீண்டும் ஒரு மாங்கனியை இறைவனிடமிருந்து வரவழைத்து தருமாறு கேட்க, புனிதவதியும் அவ்வாறே சிவபெருமானை மனதார நினைத்து வேண்டி, மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றதை நேரில் கண்ட கணவன் பரமதத்தன் மனதில் பயம் கொண்டார். இறையருள் வாய்த்த புனிதவதியைக் கண்டு பயந்து, அவரை விட்டு விலகினார். கணவனே தன்னை ஒதுக்கிய பின்னர், தனக்கு இந்த மனித உடல் இனி எதற்கு என்று இறைவனை வேண்டி பேய் உடல் பெற்றார். பின் பேயுடலுடன் கையிலைக்குச் சென்று சிவபெருமானை சரணடைந்தார் என்பது புராண வரலாறு.[3]

விழா நிகழ்வு[தொகு]

விழாவின்போது பக்தர்கள் தம் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளும்பொருட்டு மாங்கனிகளை வீசும்போது விழாவிற்கு வந்திருந்தோர் அவற்றைப் பிடிக்கிறார்கள். பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் தம் கையில் மாம்பழத்துடன் உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தந்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொள்வதாக பக்தர்களால் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனித்_திருவிழா&oldid=2114115" இருந்து மீள்விக்கப்பட்டது