மலையக தோட்டத் தொழிலாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையகத் தொழிலாளர்கள் அல்லது மலையக தோட்டத் தொழிலாளர்கள் என்போர் இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில், தோட்டத் தொழிலாளர்களாக தொழில் புரிவோரை குறிக்கப் பயன்படும் ஒரு சொற்றொடராகும். இருப்பினும் இலங்கையின் மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு அல்லாத அனைத்து பிரதேசங்களிலும் தோட்டத்தொழிலாளர்களாக தொழில் புரிவோரையும் "மலையகத் தொழிலாளர்கள்" அல்லது "தோட்டத் தொழிலாளர்கள்" என்று அழைப்பதுண்டு.

இலங்கையில் மலையகத் தொழிலாளர்கள் என்போர், பிரித்தானியரின் ஆட்சியின் போது பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக கூலி தொழிலார்களாக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களாகும்.[சான்று தேவை] அவர்களில் அதிகமானோர் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களாகும். இருப்பினும் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான மலையாளம், மற்றும் தெலுங்கு, கன்னடா போன்றவர்களும் அவற்றில் உள்ளடக்கமாகும்.[சான்று தேவை] அதேவேளை தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பல்வேறு மாநிலத்தவரும் தற்போது இந்திய வம்சாவளித் தமிழர்களாகவே இனங்காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தவர்கள் தமிழ் பேசினாலும், தங்களது மலையாள வழக்குகளை பேணுவோராக இருப்பதனையும், கேரளாவில் தமது உறவுகளுடன் உறவு நிலையை தொடர்ந்து பேணிவருவோரும் இருப்பதும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.

அதேவேளை இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக சிங்களவர்களும் உள்ளனர்.

இவர்களைத் தவிர, இலங்கை தமிழர்களான வட கிழக்கு தமிழர்களும், முஸ்லீம்களும் தோட்டத் தொழிலாளர்களாக எங்கும் பணிப்புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை தோட்டங்களில் அதிகாரிகளாக பணிப்புரிந்தோர் உளர்.

சிங்கள தோட்டத் தொழிலாளர்கள்[தொகு]

இலங்கையில் 1977ம் ஆண்டு ஆட்சியின் பின்னர் தோட்டங்களை பிரித்து,[சான்று தேவை] அதன் காணிகளை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் தோன்றத் தொடங்கியதன் பின்னர். தோட்டங்கள் பல மறைந்து, சிங்கள கிராமங்களாக மாற்றம் அடையத் தொடங்கின. அக்காலப்பகுதிகளில் சிங்கள தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணிகள் கிடைக்கப்பெற்றதால், அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனும் நிலையில் இருந்து கிராம மக்களாக மாற்றம் பெற்றுவிட்டனர். இருப்பினும் இன்னும் சில இடங்களில், மிக சொற்பமான அளவில் தோட்டத் தொழிலாளர்களாக சிங்களவர்கள் இருப்பது காணக்கூடியதாக உள்ளது.

தோட்டங்கள் பகிர்ந்தளித்தல்[தொகு]

தோட்டங்கள் "கொலனிமயமாக்கல்" எனும் பெயரில் பகிர்ந்தளிக்கும் திட்டம் 1977ம் ஆண்டு தொடங்கியது.[சான்று தேவை] அப்போது ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தமது ஆதரவாளர்களுக்கு தோட்டங்களை பிரித்து காணிகள் வழங்கி கிரமமயமாக மாற்றினர். அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்களும் இதே முறைமையை தொடர்ந்ததால் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்த அனைத்து தோட்டங்களுமே சிங்களவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு சிங்களக் கிராமங்களாக மாறிவிட்டன. தற்போது மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே அதிகமான தோட்டங்கள் உள்ளன.

இவ்வாறு தோட்டங்களை பிரித்து காணிகள் வழங்கியப் பகுதிகளில் ஆட்சிக்கு வந்த கட்சிக்கு ஆதரவாக இருந்த, அதேவேளை வாக்குரிமை இருந்த ஒரு சில தமிழர்களுக்கு காணிகள் கிடைத்துள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருந்தும் வாக்குரிமை அற்றவர்களாக இருந்த தமிழர்களுக்கு காணிகள் வழங்கப்பட வில்லை. அதேவேளை அக்காலப்பகுதியில் அதிகமான மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தோட்டங்கள் பிரித்து சிங்களவர்களின் காணிகளாகியதும், அங்கே தோட்டத் தொழிலைத் தவிர வேறு தொழில்கள் தெரியாத மலையகத் தமிழர்கள், சிங்களவர்களின் காணிகளில் கூலித் தொழிலாளர்களாக வேலைச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மலையகத் தமிழர் எதிர்நோக்கியப் பிரச்சினைகள்[தொகு]

பெருந்தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக தொழில் புரிந்தப் போதும், தமிழர்கள் அந்தந்த தோட்டங்களில் ஒருங்கிணைந்து வாழ்ந்தனர். எனவே தமது அடையாளங்களை பேணிக்கொள்பவர்களாக இருந்தனர். தோட்டங்கள் பிரிக்கப்பட்ட சிங்கள கிராமங்களாக மாறியப் பின், அதே கிராமத்தில் சிங்களவர்களின் காணிகளில் கூலி தொழிலாளர்களாக பணிப்புரிந்தோர் கிட்டத்தட்ட அடிமை நிலைக்கே தள்ளப்பட்டனர். அவர்களது வாழ்க்கை மிகவும் அச்சமான சூழ்நிலைக்கே இட்டுச் சென்றது. காலப்போக்கில் தமிழர் தனித்தனியே பிரியும் நிலை தோன்றியதுடன், தமது குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்பிக்கும் நிலை இல்லாத சூழ்நிலையில் சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பும் நிலை தோன்றியது. அப்பாடசாலைகளிலும் தமிழர் எனும் அடையாளத்துடன் சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் போது ஏற்படும் இன்னல்களால், தமது அடையாளத்தை மறைத்து வாழ்வதே அவர்களுக்கு பாதுகாப்பானது எனும் நோக்கில், வீட்டுக்கு வெளியில் தமிழ் பேசாத ஒரு சமூகமாக, மாற்றமாகி தற்போது தென்னிலங்கைப் பகுதிகளில் வாழும் பலர் தம்மை சிங்களவர்களாக அடையாளம் காட்டி வருகின்றனர் அல்லது பாவனை செய்து வருகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கும் சிங்களப் பெயர்களை சூடிக்கொள்பவர்கள் பலரை தென்னிலங்கையில் காணலாம்.

முஸ்லீம்களின் ஆதரவு[தொகு]

தோட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு, சிங்கள கிராமங்களாக மாறியதன் பின்னர், தமது சமூக அடையாளங்களையும் ஒருங்கிணைந்து பேண முடியாத சூழ்நிலையில், தமிழ் பாடசாலைகளும் இல்லாத நிலையில், சிங்களப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வந்த அதேவேளை, முஸ்லீம்கள் செரிந்து வாழும் ஊர்களில் முஸ்லீம் பாடசாலைகள் இருப்பதால், அவை தமிழ் வழி கல்வி கற்பிக்கும் பாடசாலைகள் என்பதால், அப்பாடசாலைகளிற்கு தமது குழந்தைகளை அனுப்பு தமிழ் வழி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.[சான்று தேவை] இவ்வாறான நிலையில் முஸ்லீம் சமூகம் மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாக உதவிய இடங்கள் பலவற்றை அறியலாம். இந்த உறவின் காரணமாக ஓரளவான மலையகத் தமிழர்கள் இஸ்லாம் மார்க்கத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியதுடன், முஸ்லீம்களாக மாறினர்.[சான்று தேவை] குறிப்பாக தென்னிலங்கை மற்றும் மேற்கு பிரதேசங்களில் இவ்வாறான நிகழ்வுகள் பல இடம்பெற்றிருப்பதனை காணலாம்.

மலையகத் தமிழரின் வாழ்நிலை[தொகு]

தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழைத்து வரப்பட்டவர்களான இவர்களுக்கு அக்காலம் முதல் இன்று வரை போதிய ஊதியம் இன்றியே வேலை வாங்கப்படுகிறது. ஒப்புநோக்கில் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்றவர்களாகவே இவர்கள் வாழ்கின்றனர். மிகவும் கடினமான தொழில் புரியும் இவர்களுக்கு தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஊதியம் என்றாலும் இல்லை. இலங்கையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்புவரை, இலங்கையின் பிரதான வருமானமே பெருந்தோட்டப் பயிர்செய்கையின் ஊடாகவே கிடைக்கப்பட்டது. எனினும் தற்போதும் இவர்கள் வாழும் பகுதிகள் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற சமூகமாகவே உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது லயான் என அழைக்கப்படும் குதிரைகளை அடைக்கும் நீண்ட கொட்டில்களிலே இன்றும் பெரும்பான்மையோனோரின் வசிப்பிடங்களாக உள்ளன.[சான்று தேவை] அத்துடன் அடிப்படை வசதிகள் எதுவும் இவருகளுக்கு இல்லை. நூலகம், உடற்பயிற்சி மையம், விளையாட்டு மைதானம் போன்ற எதுவும் அநேகமான இடங்களில் இல்லை. இன்னும் பல தோட்டத் தொழிலார்களுக்கு மலசலக்கூட வசதிகள் கூட இல்லை.

இவர்களது கடின உழைப்புக்கு வழங்கும் ஊதியம் இவர்களது உணவுக்கே போதாத நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவில் உள்ளவர்களாக, தமது உரிமைகளை கேட்டும் பெறும் அல்லது தமது உரிமைகளே என்ன என்று தெரியாத நிலையில் அதிகமானோர் வாழ்கின்றனர்.[சான்று தேவை]இவர்களுக்கான அமைச்சர்களும் பெரிதாக இவர்களது உரிமைகள் தொடர்பில் ஒரு வரையரைக்கு மேலே குரல் கொடுப்பதில்லை.

இவர்கள் கடுமையான தொழில் புரிவோர் என்பதாலும், வெயிலில் காய்ந்து உடல் கருத்தவர்களாகவும், பொருளாதார ரீதியிலும் பின்னடைவில் உள்ளவர்கள் என்பதாலும், தொடர்ந்தும் அச்சத்திற்குள்ளேயே வாழ்பவர்கள் என்பதாலும், சிங்கள சமூகத்தவரும் ஏனைய பிற சமூகத்தவரும் இவர்களை ஒரு அடிமை வர்க்கமாக பார்ப்பதனையும் பல இடங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.[சான்று தேவை]

இருப்பினும் அன்மையக் காலங்களில் மலையகத் தமிழர்களும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தும் மற்றும் பல்வேறு வணிகங்களில் தம்மை ஈடுபடுத்தி வருவதனாலும் முன்னேற்றமான சூழல் உருவாகி வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]