மலையகத் தமிழ்
இலங்கையில் மலையகத் தமிழ் அல்லது தோட்டத் தமிழ் (Indian Tamil dialect of Sri Lanka or Upcountry Tamil dialect or Estate Tamil) என்பது, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தென்னிந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்காக இலங்கைக்கு குடிபெயர்ந்து இலங்கையின் நடுப் பகுதியில் செறிந்து வாழுகின்ற தமிழ் மக்களிடையே வழங்கும் தமிழ் பேச்சுவழக்கேக் குறிக்கிறது. இது இலங்கைத் தமிழின் ஒரு வட்டார வழக்கு ஆகும். மலையகத் தமிழ் பெரும்பாலும் இந்தியத் தமிழ் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஏனெனில் இந்த பேச்சுவழக்கு பேசும் மக்கள் பிற இலங்கைத் தமிழரோடு ஒப்பிடுகையில் அண்மைக் காலத்தில் இலங்கைக்குத் தமிழ்நாட்டில் இருந்து பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் பிரித்தானியரால் கூட்டி வரப்பட்டவர்கள். ஆனால் மலையகத் தமிழுக்கும் இந்தியத் தமிழுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்ற தவறான புரிதலின் காரணமாக இந்த பேச்சுவழக்கு பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்யப்படவில்லை.[1] எவ்வாறாயினும், மலையகத் தமிழ் என்பது இந்தியத் தமிழிலிருந்து பல காரணங்களுக்காக பெரிதும் வேறுபடும் ஒரு பேச்சுவழக்கு என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இப்பகுதித் தமிழ் மக்களில் பலர் தொடக்கத்தில் பெருந்தோட்டத் தொழில் துறையில் பணி புரிந்தவர்கள். இதனால், இத்துறை தொடர்பான பல சொற்களும் இவர்களது மொழியில் பொதுவாகப் புழங்குகின்றன.
மலையகத் தமிழ் பேசுபவர்களின் மூதாதையர் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள். இதனால் அவர்கள் தமிழின் வெவ்வேறு பேச்சுவழக்குகளைப் பேசியவர்களாவர். உதாரணமாக, பள்ளர் சமூகத்தில் பாட்டிக்கு "அத்தாய்" என்றால் குடியருக்கு "அம்மை" ஆகும்.[2] கடந்த நூற்றாண்டில் இந்தியத் தமிழின் இந்த வெவ்வேறு பேச்சுவழக்குகள் மலையகத்தில் அருகாமையில் ஒன்றாக இருந்து, தற்போது தோட்டத் தமிழ் என்று ஒன்றாக அழைக்கப்படுவதாக பரிணமித்துள்ளது. மேலும் பல்வேறு வகையான மொழி தொடர்புகள் காரணமாக மலையகத் தமிழுக்குள் இயங்கியல் வேறுபாடுகள் உள்ளன.[1] தேயிலை, இரப்பர் தோட்டங்களில் சிங்களத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கிய பின்னர் இந்தியத் தமிழ் மற்றும் சிங்களத்தின் வெவ்வேறு பேச்சுவழக்குகளுக்கிடையிலான மொழித் தொடர்பானது, இந்தியத் தமிழிலிருந்து ஒரு தனியான பேச்சுவழக்காக மலையகத் தமிழ் வளர்ச்சியடைய கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மலையகத் தமிழ், இந்தியத் தமிழ் ஆகிய இரு பேச்சுவழக்குகளுக்கும் இடையே உள்ள புவியியல் இடைவெளி, மலையகத் தமிழை தனி வட்டார மொழியாக பரிணாம வளர்ச்சியடைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத் தமிழானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் உள்ளது மேலும் மேலே குறிப்பிட்டபடி அயல் மொழியான சிங்களத்துடன் தொடர்பு கொண்டும் வந்துள்ளது. மேலும், மலையகத் தமிழானது யாழ்ப்பாணத் தமிழ் போன்ற இலங்கைக்குள் உள்ள தமிழின் வெவ்வேறு பேச்சுவழக்குகளின் தாக்கத்துக்கும் உட்பட்டுள்ளது. இது மலையகத் தமிழில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மலையகத் தமிழ் உண்மையில் இந்தியத் தமிழிலிருந்து வேறுபட்டது என்பதை இது காட்டுவதாக உள்ளது.
இரண்டு பேச்சுவழக்குகளுக்கும் இடையே ஒலியியல் வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தியத் தமிழில் 'பயம்' (bayam) என்பது மலையகத் தமிழில் "பயம்" (payam) என்று ஒலிக்கப்படுகிறது. இந்தியத் தமிழில் மூன்று தனித்துவமான முக்கொலிகள் இருப்பது ஆய்வுகளில் கண்டறிந்துள்ளன. ஆனால் இந்த மூக்கொலி வேறுபாடுகள் மலையகத் தமிழில் மெதுவாக மறைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியத் தமிழில் maɳam (வாசனை) என்பது மலையகத் தமிழில் manam என்று ஒலிக்கபடுகிறது. மேலும் இந்திய தமிழில் 'koɳjam' (கொஞ்சம்) என்பது மலையகத் தமிழில் 'koɳcam' என்று ஒலிக்கபடுகிறது.[1] இந்தியத் தமிழுக்கும் மலையகத் தமிழுக்கும் இடையே இவ்வாறான பல வேறுபாடுகளைக் காண இயலும். [1]
ஆக, மலையகத் தமிழ் என்பது இந்தியத் தமிழிலிருந்து வேறுபட்ட பேச்சுவழக்கு என்பது தெளிவாகிறது. இது இந்தியத் தமிழின் வெவ்வேறு வட்டாரவழக்குகள் சேர்ந்தும், சிங்களம் மற்றும் இலங்கைத் தமிழின் பிற பேச்சுவழக்குகளுக்கு இடையிலான தொடர்பு காரணமாக மலையகத் தமிழாக உருவானது.