உள்ளடக்கத்துக்குச் செல்

மலைச்சுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
30 அடிவரை வளரும் மரமான மலைச்சுத்தியின், பூக்களில்(மஞ்சரி) மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகள் அழிந்ததால், இனப்பெருக்கத் தடை ஏற்படுகிறது
கேம்பிள்,
தாவரவியல் அறிஞர்

மலைச்சுத்தி (தாவர வகைப்பாடு : Monosis shevaroyensis) மரமானது, தமிழகத்தில் மட்டுமே காணப்படக் கூடிய மரமாகும். இது முற்றிலும் அழிந்து போன மரம் எனக் கருதப்பட்டது. இம்மரத்தை முதன்முதலில் கண்டுபிடித்து, அதற்கு வெர்னோனியா சேர்வராயன்சிஸ் (Vernonia shevaroyensis) எனப் பெயரிட்டவர், பிரித்தானிய அறிஞர் கேம்பிள் ( Gamble, James Sykes 1847-1925 )[1] ஆவார். இவர் 1920 ஆம் ஆண்டு வெளிவந்த தனது புத்தகத்தில்,[2] இம்மரத்தை விவரித்துள்ளார். தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், ஏறத்தாழ 400 சதுர கிலோ மீட்டர் பரந்து இருக்கும், சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள இம்மரம், உலகளவில் சேர்வராயன் மலையில் மட்டுமே வளர்வதால், இதற்கு இவர் சேர்வராயன்சிஸ் (shevaroyensis) எனப் பெயரிட்டார். அம்மலைத்தொடரிலும், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வளரும் (Endemic) இயல் தாவரம் ஆகும். உலகில் மொத்தம் நான்கு மரங்களே உள்ளன. இது தமிழகத்தின் அழிந்து வரும் தாவரங்களில் ஒன்றாகும். இம்மரமானது, ஏற்காட்டின் பாரம்பரிய சின்னமாக காட்சி தந்து கொண்டிருக்கிறது.

வாழிடம்

[தொகு]
'ஏற்காடு' மலைத் தொடர், 400 சதுர கி. மீ.

சேர்வராயன் மலைப்பகுதியில் மரப்பாலம் என்னும் இடத்தில் இம்மரங்கள் இயற்கையாக வளர்ந்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1350 மீட்டர் உயரத்தில் இவை காணப்பட்டன. இந்த இடத்திலிருந்து இதன் உலர் தாவர மாதிரிகள் (Herbarium)1966 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. காகாசோலையிலிருந்து ஓடிவரும், காட்டாற்றின் கரை ஓரம் 2 மரங்கள் இருந்தன. இம்மரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறையினர் இந்த இரண்டு மரங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை 1979 ஆம் ஆண்டில் மேற்கொண்டனர். மரத்தைச் சுற்றி கற்களால் ஆன கட்டிடத்தை உருவாக்கினர். ஏற்காடு மலையில் கிறித்துவர்கள் அதிகம் இருப்பதால், அம்மரத்தில் ஒரு சிறு சிலுவையை வைத்தனர். மேலும் மரத்தின் கீழே, இந்து கடவுளை குறிக்கும் வகையில், நடுகற்களை வழிபாட்டிற்காக வைத்தனர். சிறு சிலுவையை இம்மரத்தில் பொறுத்தி வைத்த காரணத்தால், இதனை சிலுவை மரம் என பலர் அழைக்கத் தொடங்கினர்.

இனப்பெருக்க இயல்புகள்

[தொகு]

இந்த மரம் 30 அடி உயரம் கொண்டது. இதன் பூக்கள் வெளிறிய ஊதா நிறம் கொண்டவை. அப்பூக்கள், நறுமணம் வீசும் இயல்புடையதாக உள்ளன. இதன் விதைகளில், கரு இல்லாதக் காரணத்தால், விதை முளைக்கும் திறன் அற்று இருக்கின்றன. இக்காரணத்தினாலேயே இயற்கையில், இம்மரம் முழுவதும் அழிந்துவிட்டது எனலாம். மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தும் ஒரு வகையான பூச்சி இனம், இம்மலையில் அழிந்து போன காரணத்தால், இம்மரத்தின் இனமும் அழிந்து போயிருக்கலாம் என வல்லுனர்கள் எண்ணுகின்றனர்.

நாற்று வளர்ப்பு

[தொகு]

விதை முளைக்காதக் காரணத்தால், இதன் குச்சிகளை நறுக்கி நடுவதன் மூலமும், விண்பதியம் (Air-layering) மூலமும், புதிய நாற்றுகளை உருவாக்கலாம். ஆனால், அவையும் வெற்றிகரமாக வளர்வதில்லை. 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இறந்து விடுகின்றன. விண்பதியத்தின் மூலம் மரத்திலேயே வேர் வந்த பிறகு, நறுக்கி நடப்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு, அது இறந்து விடுவதும் உண்டு. திசு வளர்ப்பு மூலம், புதிய செடிகள் உருவாக்க முடிகின்றன. திசுவளர்ப்பில் உருவான செடிகளும், ஏறத்தாழ 5 ஆண்டுகள் உயிருடன் இருப்பதே சிரமமாகி விடுகிறது. எனவே, அதிகமாக கவனம் செலுத்துவதன் மூலமே, இம்மரத்தினை பாதுகாக்க முடிகிறது.

இந்திய அரசின் பாதுகாப்பு

[தொகு]

இம்மரத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் இந்தியத் தாவரவியல் அளவாய்வு (Botanical Survey of India) சார்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டன. விதைகளைச் சேகரித்து, பல முறை முயன்றும், அம்மரத்தின் விதைகள் முளைக்கவில்லை. 1979 ஆம் ஆண்டில் முதல் முறையாக, 35 குச்சிகளும், இரண்டாவது முறையாக 50 குச்சிகளையும் நட்டு பராமரித்தனர். இரண்டாவதாக 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடப்பட்ட 50 குச்சிகளில், 4 மட்டுமே முளைக்கத் தொடங்கின. பிறகு, அவற்றில் ஒன்று இறந்து விட்டது.மீதமுள்ள 3 மட்டுமே வளர்ச்சியடைந்தன. இந்திய தாவரவியல் மதிப்பாய்வுத் துறை எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தற்போது, 4 பெரிய மரங்களும், 6 சிறு செடிகளும் இங்கு உள்ளன. இவற்றில் ஒரு மரம், பெரிய மரமாக உள்ளது.

வகைப்பாட்டியல்

[தொகு]

உயிரினத்தில், இது மரபணு பொருளைக் கொண்டிருக்கும், நிலையான கருவையும், அதனை மூடியுள்ள கருமென்சவ்வையும் பெற்று, மெய்க்கருவுயிரி என்பதுள் அடங்குகிறது. பூக்கும் தாவரமான இது, இருவித்திலைத் தாவரங்களின் கீழ் அமைகிறது. சேர்வராயன் மலைத்தொடரில் இருக்கும் இந்த மரம், சூரியகாந்திக் குடும்பத்தைச் சார்ந்தது. நீர் தட்டுபாடு உள்ள சூழ்நிலையில் (Arid) இருந்தாலும், 30அடிகள் வரை வளரும் இயல்புடையது ஆகும். மேலும், ஏற்காட்டின் குறிப்பிட்ட இடத்தில் ( endemic) மட்டும் வளரும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இது தாவரவியலாளர் ஆய்வுகளில், அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனமாக (endanger species) அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அரிய (rare)வகைத் தாவரமான இம்மரம், மொத்த எண்ணிகையில் 4 வளர்ந்த மரங்களாகவும், 4-6 இளங்கன்றுகளாகவும், இந்தியத் தாவரவியல் அளவாய்வு, ஏற்காடு (Botanical Survey of India, Yercaud) அலுவலக வனத்தில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கச் செய்தி ஆகும்.

வகைப்பாட்டியல் ஒப்பீடு

[தொகு]
மலைச்சுத்தி
தாவர வகைப்பாட்டியல்[3]
இலத்தீன் (மூலம்)[4] ஆங்கிலம் தமிழ்
Regio : vita Region :life மண்டலம் : உயிரினம்
Superregnum/Dominio : Eukaryota Domain : Eukaryota திரளம் : மெய்க்கருவுயிரி
Regnum : Plantae Kingdom : Plant திணை : தாவரங்கள்
Cladus : Angiosperms Clade : Angiosperms கிளை : பூக்கும் தாவரங்கள்
Cladus : Eudicots Clade : Eudicots கிளை : இருவித்திலைத் தாவரம்
Cladus : Core eudicots Clade : Core eudicots கிளை :
Cladus : Asterids Clade : Asterids கிளை :
Cladus : Euasterids II Clade : Euasterids II கிளை :
Phylum Divisio : Phylum Division :Euasterids தொகுதி பிரிவு :
Classis : Class : வகுப்பு :
Ordo : Asterales Order : Asterales வரிசை  :
Familia : Asteraceae Family : Asteraceae குடும்பம் : சூரியகாந்தி
Subfamilia : Cichorioideae Subfamily : Cichorioideae துணைக்குடும்பம் :
Tribus : Vernonieae Tribe  : Vernonieae கூட்டம் :
Subtribus : Vernoniinae Subtribe : Vernoniinae துணைக்கூட்டம்  :
Genus : Vernonia Genus : Vernonia பேரினம் :
Subgenus : Subgenus : துணைப்பேரினம் :
Species : shevaroyensis Species : shevaroyensis இனம் : மலைச்சுத்தி
Subspecies : Subspecies : துணையினம் :
பிற பெயர்கள்: Monosis shevaroyensis [5]

மேற்கோள்கள்

[தொகு]

உயவுத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vernonia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • உலகின் 16 வகையான உயிரியல் தரவுத்தளங்களில், இத்தாவத்தினைக் குறித்து அறிய, ஆங்கில மொழியில் அமைந்துள்ள, இந்த இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
  • மோனோசிசு (Monosis) தாவரங்களை, இனங்காண்பதற்கான, கணிய நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, ஆங்கிலத்தில் இருக்கும் species-id என்ற இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்சுத்தி&oldid=3886418" இலிருந்து மீள்விக்கப்பட்டது