மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலைக்கோட்டை பஞ்சாமிப் பிள்ளை (4 ஆகஸ்ட் 1905 – 23 மார்ச் 1935) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார். வாய்ப்பாட்டு, கஞ்சிரா வாசிப்பு, வாக்கேயக்காரர் என தனது திறமையினை வெளிப்படுத்தியவர்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்[தொகு]

பஞ்சாமிப் பிள்ளை, 4 ஆகஸ்ட் 1905 அன்று புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள இலுப்பூர் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தாய், தைலம்மாள் எனும் வாய்ப்பாட்டு ஆசிரியர். பஞ்சாமி தனது தவில் பயிற்சியினை மலைக்கோட்டை வெங்கடேசத் தவில்காரர் என்பவரிடம் தொடங்கினார். தொடந்து லால்குடி அங்கப்பத் தவில்காரரிடம் 16 மாதங்களுக்கு மாணவராக இருந்தார்.

இசை வாழ்க்கை[தொகு]

தவில் கலைஞராக[தொகு]

முன்னணி நாதசுவரக் கலைஞர்கள் பெரம்பலூர் அங்கப்பப் பிள்ளை, மதுரை பொன்னுசுவாமி பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை, திருவீழிமிழலை சகோதர்கள், திருவிடைமருதூர் வீருசுவாமி பிள்ளை ஆகியோருக்கு தவில் வாசித்துள்ளார்.

திருபுவனம் சோமுபிள்ளை, அத்திக்கடை கண்ணுப் பிள்ளை, சிங்காரம் பிள்ளை ஆகியோர் பஞ்சாமிப் பிள்ளையின் மாணவர்கள் ஆவர்.

பாடகராக[தொகு]

பஞ்சாமி தனது 22 ஆவது வயதில் தவில் வாசிப்பை நிறுத்திவிட்டு, வாய்ப்பாட்டு கச்சேரிகளை செய்யத் தொடங்கினார். சுமார் 2 ஆண்டு காலத்திற்கு இவர் தவிலை வாசிக்கவில்லை.

கஞ்சிராக் கலைஞராக[தொகு]

செம்மங்குடி சீனிவாச ஐயர், காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர், டைகர் வரதாச்சாரியார், பல்லடம் சஞ்சீவ ராவ் ஆகியோரின் கச்சேரிகளில் பஞ்சாமிப் பிள்ளை கஞ்சிரா வசித்துள்ளார்.

வாக்கேயக்காரராக[தொகு]

இசையோடு இவர் இயற்றிய பாடல்கள் 11 கிடைத்துள்ளன. மேலும், பல கீர்த்தனைகளுக்கு சிட்டை சுவரங்கள் அமைத்துள்ளார்.

மறைவு[தொகு]

சிவகிரி எனும் ஊரில் ஏழாந்திருநாள் வீதியுலா ஒன்றில் வாசித்துக் கொண்டிருந்தபோது இரத்த வாந்தியெடுத்து மயக்கமுற்றார். சிகிச்சை பலனளிக்காது 23 மார்ச் 1935 அன்று தனது 29 ஆம் வயதில் காலமானார்.

உசாத்துணை[தொகு]