மலாய் தேசியவாத தொடக்க காலம்

மலாய் தேசியவாத தொடக்க காலம் (ஆங்கிலம்: Early Malay nationalism; (மலாய்: Semangat Kebangsaan Melayu; சாவி: سماڠت كبڠساءن ملايو) என்பது ஒரு மலாய் நாட்டை (மலாய்: Bangsa Melayu; ஆங்கிலம்: Malay nation) உருவாக்கும் தேசியவாத இலட்சியத்தினால் உந்தப்பட்டு, மலாய்க் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பெருமளவில் ஈர்க்கப்பட்ட தேசியவாதத்தைக் குறிக்கிறது. மலாய்த் தனமை (Malayness); மதம் (இசுலாம்); மொழி (மலாய் மொழி), மற்றும் அரச குடும்பம் (மலாய் ஆட்சியாளர்கள்) ஆகிய கூறுகளை முன்னேற்றுவது; மற்றும் பாதுகாப்பது; ஆகியவையே மலாய் தேசியவாதத்தின் முதன்மை மைய நோக்கங்களாக இருந்தன.
மலாயாவில் ஐரோப்பிய குடியேற்றம்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து மலாயாவில் குடியேறிய வெளிநாட்டு மக்கள்; ஆகிய கூறுகளின் நேரடிப் பிரதிபலிப்பாக மலாய் தேசியவாதம் அமைந்தது.
பின்னணி
[தொகு]மலாய் தேசியவாதம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே அதன் தொடக்கக்கால வேர்களைக் கொண்டுள்ளது. ஆனால் அப்போது அது ஓர் ஒன்றுபட்ட இயக்கமாக அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமாகவோ அமையவில்லை. மலாயா மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி அளவில் இருந்த சீனர்களும் இந்தியர்களும் தங்களை மலாயாவின் குடிமக்களாகக் கருதாததால், மலாய் மேலாதிக்கம் (Ketuanan Melayu) என்ற கருத்து அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலும் பொருத்தமற்றதாக இருந்தது.[1]
1930-களின் முற்பகுதியில் பிரித்தானிய குடியேற்றங்களுக்கான பிரித்தானிய முதன்மைத் துணைச் செயலாளரின் அறிக்கை, 'மலாயாவைத் தங்களின் இருப்பிடமாக ஏற்றுக்கொண்ட மலாய்க்காரர் அல்லாதவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் மிகச் சிறிய அளவு' என்பதைக் கண்டறிந்தது.[2] மலாய் தேசியவாதத்தின் எழுச்சி பெரும்பாலும் மூன்று தேசியவாதப் பிரிவுகளால் தோன்றியது. மலாய் இடதுசாரிகள் பிரிவு; பழமைவாத உயரடுக்குகளை எதிர்க்கும் இசுலாமிய குழு; மற்றும் வேறுபடுத்தி பார்க்கக்கூடிய தீவிரவாதிகள் என மூன்று பிரிவுகள் இருந்தன.[3]
இளம் மலாயர் சங்கம்
[தொகு]மலாய் இடதுசாரிகள் இளம் மலாயர் சங்கம் (Kesatuan Melayu Muda) எனும் கெசாத்துவான் மெலாயு மூடா குழுவால் பிரதிநிதிக்கப்பட்டனர். இந்தக் குழு 1938-ஆம் ஆண்டு சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தில் முதன்மையாகக் கல்வி கற்ற மலாய்க் குழுவால் உருவாக்கப்பட்டது. இது பெரும் இந்தோனேசியாவின் (Greater Indonesia) கொள்கைத் தோற்றத்தைக் கொண்டிருந்தது. 1945-ஆம் ஆண்டில், அந்த மலாய்க் குழுவினர், மலாயா மலாய் தேசியக் கட்சி (Partai Kebangsaan Melayu Malaya) (PKMM) என்று அழைக்கப்படும் ஓர் அரசியல் கட்சிக்குள் தங்களை இணைத்துக் கொண்டனர்; மறுசீரமைப்புச் செய்து கொண்டனர்.
இசுலாமிய குழுவினர் முதலில் கவும் மூடா (Kaum Muda) எனும் இளைஞர் குழுவால் பிரதிநிதிக்கபட்டனர். இந்தக் குழுவினர் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் (குறிப்பாக எகிப்தில்) கல்வி பெற்ற கல்விமான்களைக் கொண்டிருந்தனர். இவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகள்; மற்றும் பன்னாட்டு-இசுலாமிய சிந்தனையால் (Pan-Islamism) ஈர்க்கப் பட்டவர்கள்;[4] முதல் இசுலாமிய அரசியல் கட்சி மார்ச் 1948-இல் மலாயா முசுலிம் மக்கள் கட்சி (இசுபுல் முசுலிம்) (Parti Orang Muslimin Malaya) (Hizbul Muslimin) எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1951-இல் இந்தக் கட்சி மலேசிய இசுலாமிய கட்சி என மாற்றம் கண்டது.
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு
[தொகு]மூன்றாவது பிரிவு, பழமைவாதிகள் ஆவார்கள். இவர்கள் மேற்கத்திய மயமாக்கலின் உயரடுக்குப் பிரிவினரைச் சார்ந்தவர்கள். பெரும்பாலோர் அரசு அதிகாரிகள் மற்றும் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்; கோலா கங்சார் மலாய் கல்லூரியில் ஆங்கிலக் கல்வியைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்தப் பழைமைவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மலாய்ச் சங்கங்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகளை உருவாக்கினர். மேலும் மலாய்க்காரர்களின் நலன்களை முன்னேற்றுவது; மலாய்க்காரர்களின் நிலைப்பாட்டில் பிரித்தானியாவின் பாதுகாப்பைக் கோருவது; ஆகியவை அவர்களின் முதன்மையான குறிக்கோள்களாக இருந்தன. மார்ச் 1946-இல், பழைமைவாதிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள்; மலாயாவில் மலாய் ஆதிக்கத்தை நிலைநாட்ட, 41 மலாய் சங்கங்களை ஒன்றிணைத்து, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (UMNO) எனும் அரசியல் கட்சியை உருவாக்கினர்.[3]
1946-ஆம் ஆண்டு, மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து; வெளிநாட்டு குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் மலாயா ஒன்றியத்தை பிரித்தானியர்கள் முன்மொழிந்தபோது மலாய் தேசியவாதத்தின் முதல் பெரிய படைபலம் தெரிய வந்தது. ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக, பிரித்தானியர்கள் அந்தத் திட்டத்தை மீட்டுக் கொண்டனர். இதன் விளைவாக 1948-இல் மலாயா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ye, Lin-Sheng (2003). The Chinese Dilemma, pp. 26–27. East West Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9751646-1-9.
- ↑ Hwang, In-Won (2003). Personalized Politics: The Malaysian State under Mahathir, p. 24. Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-230-185-2.
- ↑ 3.0 3.1 3.2 Suryadinata, Leo (2000), Nationalism & Globalization: East & West, Institute of Southeast Asian Studies, pp. 133–136, ISBN 978-981-230-078-2
- ↑ Mohammad Redzuan Othman; Abu Hanifah Haris (2013). "Egyptian Influences on Malaya's Muslim Kaum Muda (Young Faction) Before World War II". Al-Shajarah (International Islamic University Malaysia) 18 (1): 1–33. doi:10.31436/shajarah.v18i1.294.