உள்ளடக்கத்துக்குச் செல்

மலாயா விடுதலை அறிவிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா விடுதலை அறிவிப்பு
Malayan Declaration of Independence
Pemasyhuran Kemerdekaan Tanah Melayu
மலாயா விடுதலை ஆவணம்
நாள்31 ஆகத்து 1957
நேரம்மலேசிய நேரம் காலை 09:30
இடம்மெர்டேக்கா அரங்கம், கோலாலம்பூர்  மலேசியா
வகைஐக்கிய இராச்சியத்திலிருந்து மலாயா விடுதலை பெற்றதாக அறிவிப்பு
பங்கேற்றோர்துங்கு அப்துல் ரகுமான்

மலாயா விடுதலை அறிவிப்பு (ஆங்கிலம்: Malayan Declaration of Independence; (மலாய்: Pemasyhuran Kemerdekaan Tanah Melayu}}, சாவி: ڤمشهوران کمرديکاءن تانه ملايو) என்பது ஐக்கிய இராச்சியத்திலிருந்து மலாயா விடுதலை பெற்ற அறிவிப்பு ஆகும். மலாயா கூட்டமைப்பின் முதல் முதலமைச்சரான துங்கு அப்துல் ரகுமான், 1957 ஆகத்து 31 சனிக்கிழமை அறிவிப்பு செய்தார். மெர்டேக்கா அரங்கத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில், மலாயா விடுதலை ஆவணம் காலை 09:30 மணிக்கு; ஆயிரக்கணக்கான மலாயா குடிமக்கள், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் முன்னிலையில். வாசிக்கப்பட்டது.

மலாயாவின் ஒன்பது மலாய் மாநிலங்களின் மீதான பிரித்தானிய பாதுகாவலர் ஆட்சி முடிவுக்கு வந்ததையும்; மலாக்கா பிரித்தானிய முடியாட்சி மற்றும் பினாங்கு பிரித்தானிய முடியாட்சி ஆகிய இரண்டு நீரிணை குடியேற்றங்களில் பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவுக்கு வந்ததையும்; நடைமுறைக்கு வந்த ஒரு விடுதலையான மலாயா கூட்டமைப்பு மக்களாட்சி நிறுவப்பட்டதையும் அந்த மலாயா விடுதலை அறிவிப்பு ஏற்றுக் கொள்கிறது.

அந்த அறிவிப்பு ஆவணத்தில் துங்கு அப்துல் ரகுமான் கையெழுத்திட்டார். அவர் நாட்டின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் மலேசியாவில் மலேசிய விடுதலை நாள் எனும் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விடுதலை நாள்

[தொகு]
மலாயா விடுதலை அறிவிப்பின் தமிழ்ப் பிரதி; 1957-ஆம் ஆண்டு மலாயா விடுதலை அறிவிக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட நான்கு அதிகாரப்பூர்வ பதிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

துங்கு அப்துல் ரகுமான், அஜி சுலைமான் பாலஸ்தீனம், அஜி அகமத் படாவி மற்றும் அம்னோ தலைவர்கள் பலரின் முயற்சியில் செயிக் அப்துல்லா பாகிம் (Syeikh Abdullah Fahim) என்பவரின் கருத்துக்களைக் கேட்டபின் மலாயா விடுதலை நாளுக்கான தேதி உறுதி செய்யப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில், செயிக் அப்துல்லா பாகிம், கெப்பாலா பத்தாஸ் பகுதியில் ஒரு சிறந்த சமய ஆசிரியராக விளங்கினார்.[1]

செய்க் அப்துல்லா பாகிமின் கூற்றுப்படி, பிரித்தானியர்கள் ஆகத்து 31, 1957 அன்று மலாயாவிற்கு விடுதலை வழங்கவில்லை என்றால், அடுத்த பொருத்தமான திகதி ஆகத்து 31, 1962-ஆக இருக்க வேண்டும்.[1][2] 1957 ஆகத்து 31-ஆம் தேதி என்பது நமக்கு நல்ல ஆண்டு வந்துவிட்டது (அரபு மொழி: அம் கைர் அதனா (عام خير اتانا); ஆங்கிலம்: Good Year Has Come to Us) என்று பொருள்படும் என செய்க் அப்துல்லா பாகிம் குறிப்பிட்டார்.

துங்கு அப்துல் ரகுமான், ஐக்கிய இராச்சியத்தில் மலாயா விடுதலை பற்றிய பேச்சு வார்த்தைகளை நடத்திய பின்னர், 1956 பெப்ரவரி மாதம் மலாக்காவில் நடந்த ஒரு கூட்டணிப் பேரணியில் விடுதலை நாள் பற்றிய திகதியை உறுதிப்படுத்தினார்.

அறிவிப்பு விழா

[தொகு]

1957 ஆகத்து 30-ஆம் தேதி இரவு, கோலாலம்பூரில் உள்ள அரச சிலாங்கூர் மன்றத் திடலில், பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப் படுவதைக் காண மக்கள் கூட்டம் கூடியது. பிரதமராக நியமிக்கப்பட்ட துங்கு அப்துல் ரகுமான் இரவு 11:58 மணிக்கு வந்து சேர்ந்தார். கூட்டணிக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்களுடன் சேர்ந்து இரண்டு நிமிட நேர அமைதி இருளைக் கடைப்பிடித்தார்.[3]

நள்ளிரவு இரவு 12.00 மணிக்கு, மின்விளக்குகள் மீண்டும் எரியவிடப்பட்டன. மெர்டேக்கா சதுக்கத்தில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் யூனியன் கொடி (Union Flag) இறக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் பிரித்தானிய நாட்டுப்பண் (God Save The Queen) இசைக்கப்பட்டது. அதன் பின்னர் மலேசிய நாட்டுப்பண் நெகராகூ இசைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய மலாயா கொடி (List of Malaysian flags) உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் கூட்டத்தினர் மெர்டேக்கா (விடுதலை) என்று ஏழு முறை பேரொலி எழுப்பி முழக்கம் செய்தனர்.[3]

விடுதலை விழாக்கள்

[தொகு]
1957 ஆம் ஆண்டு மலாயா விடுதலை ஆவணத்தில் கையெழுத்திடும் போது துங்கு அப்துல் ரகுமான் மெர்டேக்கா! என்று முழக்கமிடுகிறார்.

பின்னர் துங்கு அப்துல் ரகுமான் அந்த விழாவை மலாயா மக்களின் வாழ்வில் மறக்க முடியாத வரலாற்றுப் பரிமாணம் என்று பாராட்டி உரை நிகழ்த்தினார்.[3] கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன், கூட்டணிக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்களால் துங்கு அப்துல் ரகுமான் அவர்களுக்கு ஒரு கழுத்தணி அணிவிக்கப்பட்டது.

மலாயா வரலாற்றின் சிறந்த ஒரு நிகழ்வை பெருமைப் படுத்தும் வகையில் அந்தக் கழுத்தணி பரிசளிப்பு அமைந்தது. கழுத்தணியில் மலாயாவின் வரைபடம் பொறிக்கப்பட்டிருந்தது. முதல்கட்ட விடுதலை விழா நிகழ்வு அதிகாலை 1 மணிக்கு முடிவுற்றது.[4]

மெர்டேக்கா அரங்கம்

[தொகு]

மறுநாள் ஆகத்து 31, 1957 அன்று காலை, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மெர்டேக்கா அரங்கத்திற்கு, அடுத்தக் கட்ட மலாயா விடுதலை விழாக்கள் இடம் பெயர்ந்தன. காலை 9:30 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவை 20,000-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். மலாய் மாநிலங்களின் ஆட்சியாளர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள்[5] மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.[4]

ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் அரசியின் பிரதிநிதியான குளோசெஸ்டர் இளவரசர் என்றி பிரபு, துங்கு அப்துல் ரகுமானிடம் விடுதலை ஆவணங்களை வழங்கினார். பின்னர் துங்கு அவர்கள் விடுதலை ஆவணத்தைப் படிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் அவருடன் இணைந்து பொது மக்களும் ஏழு முறை "மெர்டேக்கா!" என்று முழக்கமிட்டு நிகழ்வை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.[4]

மலாயாவின் முதல் அரசர்

[தொகு]

மலாயாவின் தேசியக் கொடி உயர்த்தப்பட்டதும், இராணுவ இசைக்குழுவினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு, 21 மரியாதை துப்பாக்கி முழக்கம் செய்யப்பட்டது. பின்னர் அசான் அழைப்பு; மற்றும் நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனையுடன் விழா தொடர்ந்தது.

அதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் அம்பாங் சாலையில் மலாயாவின் முதல் அரசராக நெகிரி செம்பிலான் துவாங்கு அப்துல் ரகுமான் அவர்களின் புனிதப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.[6] மாலையில் மலேசிய அரசரைச் சிறப்பிக்கும் வகையில் முதல் புனித விருந்தும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளும் மற்றும் பிற நிகழ்வுகளும் ஒரு புதிய நாட்டின் ஒரு புதிய பிறப்பைப் பெருமைப் படுத்துவதாகதாக அமைந்தன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Zuraida, Abdul Rahman (29 July 2007). "Abdullah Fahim: The man who decided the Independence date". Malaysian Bar. Bernama. https://www.malaysianbar.org.my/article/news/legal-and-general-news/general-news/abdullah-fahim-the-man-who-decided-the-independence-date.
  2. Petah, Mokhtar (1997). Sheikh Abdullah Fahim Penentu Tarikh Kemerdekaan Negara 31 Ogos '57 [Sheikh Abdullah Fahim: The Determiner of the Nation's Independence Date 31 August '57] (PDF) (in மலாய்). Kuala Lumpur: Pustaka Antara. p. 45. ISBN 9789679373882.
  3. 1 2 3 "1957: Malaya celebrates independence". BBC. 31 August 1957. https://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/31/newsid_3534000/3534340.stm.
  4. 1 2 3 "Proclamation of independence of Malaya (Kuala Lumpur, 31 August 1957)". The National Archives of the United Kingdom. Retrieved 11 November 2025.
  5. Arkib Negara: Pembentukan Kabinet Pertama Persekutuan Tanah Melayu (in Malay)
  6. (4 August 1957) Sunday Times, Singapore

வெளி இணைப்புகள்

[தொகு]

மலாயா விடுதலை அறிவிப்பு (arkib)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா_விடுதலை_அறிவிப்பு&oldid=4415896" இலிருந்து மீள்விக்கப்பட்டது