உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியதேவனின் வேருகளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலர்வணக்கப் பாடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

"சூரியதேவனின் வேருகளே" என்ற பாடலானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் போது ஒலிக்கப்படும் பாடலாகும். ஆகையால் இப்பாடலானது தமிழீழத்தின் தேசிய "மலர்வணக்கப் பாடல்" என்றும் அறியப்படுகின்றது. புதுவை இரத்தினதுரை எழுதிய இப்பாடலை, இசைவாணர் கண்ணனின் இசையில் எஸ். ஜி. சாந்தன், மணிமொழி கிருபாகரன், தியாகராஜா ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ஒரு தனிப்பாடலாக வெளிவந்தது.

பாடல் வரலாறு

[தொகு]

ஆரம்ப காலத்தில் தியாகி திலீபனின் நினைவாக வீரமணி ஐயரால் எழுதப்பட்ட "மலர்தூவ வாருங்கள்" என்ற பாடல் மாவீரர்களின் மலர்வணக்கத்தின் போது ஒலிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்காலத்தில் மாவீரர்களின் மலர்வணக்கத்திற்காக ஒரு தனித்துவமான பாடலை உருவாக்க வேண்டும் என்ற தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய "சூரியதேவனின் வேருகளே" என்ற பாடல் உருவானது. 1999ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று எனும் இடத்தில் அமைந்த நிதர்சனம் தர்மேந்திராக் கலையகத்தில் இப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.[1] அதன் பின்னர், "மலர்தூவ வாருங்கள்" என்ற பாடலுக்குப் பதிலாக இப்பாடல் மாவீரர்களின் மலர்வணக்கத்தின் போது ஒலிக்கப்படுவது வழக்கத்­துக்கு வந்­துள்ளது. இப்பாடலானது தமிழீழத்தின் "தேசியப் பாடலாகவும்", "மலர்வணக்கப் பாடலாகவும்" விளங்குகின்றது.

முழுப் பாடல்

[தொகு]

பல்லவி

சூரியதேவனின் வேருகளே,
ஆயிரம் பூக்களைச் சூடுகிறோம்

போரினில் ஆடிய வேருகளே - விட்டுப்
போகின்ற நேரத்தில் பாடுகிறோம்

சரணம்

மடியில் வளர்ந்த மகளே - எங்கள்
குடியில் மலர்ந்த மகனே!
விடியும் பொழுதின் கதிரே - புலிக்
கொடியில் உலவும் உயிரே!

கண்களில் நீர்வழிந்து ஓடிட ஓடிட
கைகளினால் மலர் சூடுகின்றோம்!
காலெடுத்தாடிய தாயக பூமியைக்
காதலித்தீர் உம்மைப் பாடுகின்றோம்!

மண்மடி மீதிலே தூங்கிடும் போதிலே
மாலையிட்டோம் உங்கள் தோள்களிலே!
மாதவம் செய்த நம் பிள்ளைகளே - நாங்கள்
மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே!

செங்கனி வாய்திறந்து ஓர்மொழி பேசியே
சின்னச் சிரிப்பொன்றைச் சிந்துங்களே!
தேச விடுதலையைத் தோளில் சுமந்த எங்கள்
செல்வங்களே ஏதும் சொல்லுங்களே!

வந்து நின்றாடிய சிங்களச் சேனையை
வாசல்வரை சென்று வென்றவரே!
வாழும் வரையும் உங்கள் பாதையிலே - செல்லும்
வல்லமை தாருங்கள் கன்றுகளே!

மேற்கோள்கள்

[தொகு]
  1. நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 71 (ஆகஸ்டு 1999).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியதேவனின்_வேருகளே&oldid=4446125" இலிருந்து மீள்விக்கப்பட்டது