மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்கள்
மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்கள் (ஆங்கில மொழி: Society of apostolic life) என்பன கத்தோலிக்க திருச்சபையில் ஒரே நோக்கோடு சகோதர வாழ்வு வாழும் ஆண்களையும் பெண்களையும் குறிக்கும். இவற்றின் உறுப்பினர்கள் தம் சமூகத்திற்கு உரித்தான மறைத்தூதுப்பணி நோக்கத்தைப் பின்தொடர்கின்றனர். தங்களுக்கு உரித்தான முறையில் சகோதர வாழ்வைப் பொதுவில் வாழ்ந்து[1] அமைப்புச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அன்பின் நிறைவை அடைய முனைகின்றனர். மறைமாவட்ட ஆயரின் எழுத்து வடிவ முன்ஒப்புதலுடன் இவ்வகை சமூகங்கள் நிறுவப்படலாம்.
மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்கள் அர்ப்பணவாழ்வுச் சபைகளை ஒத்திருந்தாலும். இவற்றிற்கிடையே பல வேறுபாடுகள் உள்ளன; அவற்றுள் சில:
- அர்ப்பணவாழ்வுச் சபைகளைப்போல அல்லாமல் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள் துறவற வார்த்தைப்பாடுகள் அளிப்பதில்லை.
- மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள் உலகியல் சார்ந்த சொத்துக்களை ஈட்ட உடைமையாக்க நிர்வகிக்க மற்றும் உடைமை மாற்றம் செய்ய தகுதி பெற்றுள்ளனர். (ஆனால் சமூகத்தின் பொருட்டு அவர்களிடம் வரும் எதுவும் சமூகத்திற்கே சொந்தமானது.)
ஓர் அர்ப்பணவாழ்வுச் சபைக்கு மாறுவதற்குகோ அல்லது அதிலிருந்து ஒரு மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்திற்கு மாறுவதற்கோ திருஆட்சிப்பீடத்தின் அனுமதி தேவை. அர்ப்பணவாழ்வுச் சபைகள் மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களுக்கான பேராயம் இவ்வகைச்சபைகளை மேற்பார்வையிடும் உரோமைச்செயலகம் ஆகும்.