மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் என்னும் இக்கட்டுரை, மருத்துவத்துறை இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்குள் வந்தது குறித்தது ஆகும். 1986 ம் ஆண்டு இராஜீவ் காந்தி முதன்மை அமைச்சராக இருந்த போது இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது நடுவண் அரசின் நலத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜ், நுகர்வோர் சட்டம் மருத்துவத் துறைக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். இந்திய மருத்துவக் கழகம் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மணிசங்கர் ஐயர் அவர்களைச் சந்தித்த போது அவரும், இராஜீவ் காந்தி மருத்துவத் துறையை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்தில் உருவாக்கவில்லை என்று உறுதி அளித்தார். அந்த சட்ட வரைவினைப் படித்துப் பார்த்த பலரும் (மருத்துவர் , ஆர். டி.லே.லி)மருத்துவ துறை நுகர்வோர் சட்டத்தின் கீழ் வராது என்றே நம்பினார்கள். இந்த சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நுகர்வோர் குழுமுன் வந்த புகார்[தொகு]

1989 ஆம் ஆண்டுவரை மருத்துவத்துறைக்கு நுகர்வோர் சட்டம் பயன்படுத்தப்பட்டது பற்றிக் குறிப்பான செய்திகள் எதுவும் இல்லை. மருத்துவத் துறை நுகர்வோர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவும் இல்லை. உண்மையில் மருத்துவத்துறை அதற்குள் அடங்குமா என்பது தெரியாத ஒரு இரண்டுங் கெட்டான் நிலை இருந்து வந்தது. 1989ம் ஆண்டு வி.பி. சாந்தா என்பவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையைக் குறித்து புகார் ஒன்றினைக் கேரள் மாநில நுகர்வோர் குழு முன்னர் தெரிவித்தார். 1986 ம் ஆண்டின் நுகர்வோர் சட்டத்தின் படி அமைக்ககப்பட்ட இந்தக் குழு இந்த வழக்கினையும் ஏற்றுக் கொண்டது. மருத்துவ மனையின் தரப்பில், “மருத்துவத் தொழில் நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒன்று ஆகும், எனவே நுகர்வோர் குழுவிற்கு இந்த வழக்கினை விசாரிக்கும் அதிகாரம் இல்லை” என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் கேரள நுகர்வோர் மன்றம் இந்த வாதத்தினைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கினை எடுத்துக் கொண்டதன் மூலம் மருத்துவத் தொழில் நுகர்வோர் சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றே என்ற நிலை ஏற்பட்டது. நுகர்வோர் சட்டம் தொடர்பில் மருத்துவத் தொழிலுக்கு என்று சிறப்பான விதிவிலக்கு ஒன்றும் இல்லை என்ற முடிவும் கிடைத்தது.[1]

நுகர்வோர் மன்றத் தீர்ப்பு[தொகு]

இந்த முடிவினை எதிர்த்து தேசிய நுகர்வோர் மன்றத்திற்கு மருத்துவமனை சென்றது. அப்போது அதன் தலைவராக இருந்த, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கேரள உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாகவும் இருந்து ஓய்வு பெற்றவருமான நீதிபதி பாலக்கிருஷ்ன இராடி அவர்கள் மருத்துவத் துறையும் நுகர்வோர் சட்டத்திற்கு உட்பட்டதே என்று தீர்ப்பு வழங்கினார். அதற்கு அவர் ஒரு விளக்கமும் அளித்தார். நீதியரசர் பாலகிருஷ்ணன் இராடி அவர்கள் சட்டத்தின் சில வார்த்தைகளின் பொருளை ஆய்வு செய்து அதை வேறு விதமாக விளக்கிப் பதிவு செய்திருக்கிறார். மிகவும் உன்னதமான, அறிவியல் பூர்வமான தொழிலாகிய மருத்துவத் தொழிலை நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியாது, அவ்வாறு விலக்கு அளிக்க முயல்வது முறையற்றது, தவறானது, மிகவும் கீழ்த்தரமான முயற்சியும் கூட என்பது அருடைய தீர்ப்பின் சாரம், அவர் இதற்கு முன்னர் வழக்கத்தில் இருந்து வந்த மருத்துவர், நோயாளி உறவை மறு ஆய்வு செய்து அதற்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். ஒரு சேவைக்கான ஒப்புதல் (Contract of Service) என மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான தொடர்பை விளக்கினார். சேவைக்கான ஒப்புதல் அல்லது ஒப்பந்தம் என்பது மருத்துவருக்கும், நோயாளிக்கும் இடையே ஒரு தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையே உள்ளது போன்ற ஒரு தொடர்பினை குறிப்பதாகும். ஆனால் நீதி அரசர் இராடி அவர்கள் அது சேவைக்கான ஒப்பந்தம் என்பதை மாற்றி (Contract for Service) என்று ஒரு வர்த்தக அடிப்படையிலான ஒப்பந்தமாக நோயாளி மருத்துவர் உறவுமுறையை மாற்றி அமைந்துள்ளார். இந்த நோக்கில் பார்த்தால் 'மருத்துவரும் ஒரு கடைக்காரரைப் போல அல்லது வணிகரைப் போல அல்லது ஒரு பொருள் உற்பத்தி செய்பவரைப் போல தன்னுடைய நோயாளிக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு ஊழியம் செய்கிறார். எனவே மற்றவர்களைப் போலவே அந்த ஊழியத்தில் குறை இருந்தாலோ அல்லது ஊழியத்தின் விளைவு நோயாளிக்கு நிறைவு அளிக்கும் வகையில் இல்லாவிட்டாலோ அது குறித்து நோயாளி நுகர்வோர் நீதி மன்றத்தை அனுகலாம்'" என்று தீர்ப்பு அளித்துள்ளார். இந்த வார்த்தை விளையாட்டுகளின் காரணமாக மருத்துவத் தொழிலும் நுகர்வோர் நீதி மன்றத்தின் ஆய்வுக்குட்பட்ட மற்றும் ஒரு தொழிலாக ஆகிவிட்டது. அதன் உன்னதம், மருத்துவர் கடவுளுக்கு நிகரானவர் என்ற பழைய வாதங்கள் இதில் அடிபட்டு போகின்றன. இவற்றைக் கொண்டு மருத்துவர்கள் நுகர்வோர் நீதி மன்றத்தின் ஆய்விலிருந்து தப்பித்துக் கொள்ள இயலாதபடி இந்த தீர்ப்பு அமைந்த்து.

இந்திய மருத்துவ மன்ற வழக்கு[தொகு]

இந்திய மருத்துவ மன்றம் தொடர்ந்த வழக்கில் மருத்துவத் துறையும் நுகர்வோர் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதே என்ற தீர்ப்பினை 1995ம் ஆண்டு வழங்கியது. இந்த தீர்ப்பானது இந்தியாவில் மருத்துவம் நடைபெறுகின்ற நடைமுறையையே முற்றிலுமாக மாற்றிவிட்டது இன்றைய தேதியில் மருத்துவமும் அதன் சேவைகளும் நுகர்வோர் சட்டத்திற்கு உட்பட்டவையே.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • மருத்துவம், சட்டம், அறநெறி - மருத்துவர் து. இளமுருகன்

வெளியிணைப்புக்கள்[தொகு]