உள்ளடக்கத்துக்குச் செல்

மருதக்கலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மருதத்திணைக் கலிப்பாப் பாடல்களை மருதக்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 35. இவை கலித்தொகை நூலில் 66 முதல் 100 எண்ணுள்ள பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர் மருதன் இளநாகனார்.

ஊடல் செய்திகள்[தொகு]

இந்நூலில் வரும் பாடல்கள் ஊடல் பாங்கினைப் பல்வேறு கோணங்களில் காட்டுகின்றன. (எண்கள் இக்கலியில உள்ள பாடல் வரிசை எண்களைக் குறிக்கின்றன)

ஊடல்

 • ஊடல் தீர்கின்றாள் தனக்குத் தானே கூறியது 1, 2, 3, 4,
 • அவன் வாயைக் கிண்டி அவன் பரத்தமையை வாங்கல் 5,
 • தலைவியின் ஊடல் 6, 7, 8, 9,
 • ஊடல் தீர்கின்றாள் தோழிக்குக் கூறியது 10, 11, 12,
 • காமக்கிழத்தியின் ஊடல் 13, 14

மகன் வாயில் ஆதல்

 • தலைவி தன் குழந்தை-மகனிடம் கூறி ஊடியது 15,
 • மகன் வாயிலாக ஊடல் தீர்ந்தது 16,
 • தோழியோடு கோயிலுக்கு அனுப்பிய மகன் பர-தாயர் பூட்டிய அணிகளுடன் வந்ததைக் கூறி ஊடியது 17, 19
 • விளையாடச் சென்ற மகன் அணிகலன்களுடன் வந்ததைக் கூறி ஊடியது 18
 • குழந்தையைப் பாராட்டிக்கொண்டே தலைவனோடு ஊடியது. 20
 • குழந்தையைச் சொல்லி ஊடல் தீர்ந்தது 21

உரையாடல்கள்

 • ஊடலும் ஊடல் தீர்க்கும் உரையாடல்களும் 22, 23, 24, 25, 26, 27,
 • இழிந்தோர் ஊடல் 29

உருவகப்படுத்தி ஊடல்

 • பரத்தையைக் கடவுளாக்கி ஊடியது 28
 • பரத்தையைக் காடைச்சண்டை, குதிரையேற்றம், யானையேற்றம், புனலாடல் ஆகிய விளையாட்டுகளோடு ஒப்பிட்டு ஊடியது. 30, 31, 32, 33

பெருந்திணை

 • ஆண்மகன் ஊடி விலகிய பெருந்திணை 34, 35

குறிப்புச் செய்திகள்[தொகு]

இந்தப் பாடல்களில் காணப்படும் பண்பாடு, கதை, மொழி முதலானவற்றைப் பற்றிய சில செய்திகளை இப்பகுதியில் குறிப்பிடலாம்.

மொழி[தொகு]

 • இவண் காண்டிகா (34) - 'கா' விகுதி பெற்று வரும் ஏவல் வினைமுற்று
 • ஒராங்கு மூச (27) = ஒருசேர மொய்க்க
 • காண்டீ, சென்றீ (26) - 'ஈ' விகுதி பெற்ற ஏவல் வினைமுற்று
 • காண்டைப்பாய் (22) - காண் < காண்டை < காண்டைப்பாய் - 'ஐ' < 'ஐப்பாய்' என்னும் விகுதி பெற்ற ஏவல் வினைமுற்று
 • உண்டீத்தை, பருகீத்தை (20) - 'ஈ' < 'ஈத்தை' விகுதி பெற்ற ஏவல் வினைமுற்று.
 • ஈத்தை இவளை யாம் கோடற்குச் சீத்தை (21) - தாயிடம் இருந்த மகன் (பரத்தையிடமிருந்து மீண்ட) தந்தையிடம் தாவியபோது ஊடிய தாய் மகனைப் பார்த்து கூறிய சொற்கள். கொச்சைப் பேச்சு
 • அத்தத்தா என்னும் (15) - குழந்தை தந்தையை 'அத்தத்தா' என அழைத்ததாம்
 • கோதை பரிபு ஆடக் காண்கும் (15) - காண்கும் = காண்பேன் - 'கும்' விகுதி பெற்ற பலர்பால் வினைமுற்று.
 • காணிய (6) = காண்பாயாக - வாழிய என்பது போன்ற வியங்கோள் வினைமுற்று.

நடை[தொகு]

பரத்தையர் பலர் ஒருவனை மொய்த்த காட்சி

ஒருத்தி, செயல் அமை கோதை நகை;
ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப;
ஒருத்தி, தெரி முத்தம், சேர்ந்த, திலகம்;
ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க,
ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்;
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப:
ஒருத்தி, புலவியால் புல்லாதிருந்தாள், (27)

மதுரையில் தமிழ்ச்சங்கம்[தொகு]

பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர

திருக்குறள் தாக்கம்[தொகு]

புலப்பென் யான் என்பேன்மன் அந்நிலையே அவற் காணின்,
கலப்பென் என்னும் இக் கையறு நெஞ்சே (2)

ஊடிவென் என்பேன்மன் அந்நிலையே அவற் காணின்
கூடுவென் என்னும் இக் கொள்கையில் நெஞ்சே (2)

இந்தக் கலித்தொகை அடிகளில்

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து
கூடற்கண் சென்றது என் நெஞ்சு (1284)
என்னும் திருக்குறளின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

பண்பாடு[தொகு]

 • திருமண உறுதிக்கு மோதிரம் அணிவித்தல் செவ் விரற்கு ஏற்பச் சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் (19)
 • ஓலைக்கு முத்திரை இட்டு அனுப்புதல் [1]
 • அந்தணர் தீயைச் சுற்றிவருதல் [2]
 • கிளிக்குச் சொல்லித்தருதல் [3]
 • காளையர் கன்னியருடன் துணங்கை ஆடல். [4]
 • ஓரை விளையாட்டு [5]
 • தோளில் எழுதுதல் [6]
 • போர் தொடுத்தவர் நாட்டில் இறை வாங்கல் [7]
 • வயந்தகம் என்னும் நெற்றியணி [8]
 • வாதுவன் [9]

புராணக் கதை[தொகு]

 • சிவன் மகன் முருகன் [10]
 • சாமன் [11] 29
 • ஆண்டலை 29
 • அந்தணர் இருவர் [12] 34

சிறந்த தொடர்கள்[தொகு]

அருந்தொடரும் செய்தியும்[தொகு]

 • வீங்கு இறை வடு [14]
 • அறைபோகும் நெஞ்சு [15]
 • வேளா முயக்கம் [16]
 • புனலாடப் பண்ணியாய் [17]
 • கல்லாவாய்ப் பாணன் [18]
 • அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு [19]
 • அறிவுடை அந்தணன் [20]

அடிக்குறிப்பு[தொகு]

 1. வையத்தார் ஓலை முகடு காப்பு யாத்து விட்டாங்கு (29)
 2. ஒது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் (4)
 3. ஊடும் என் சிறு கிளி புணர்ப்பவள் (7)
 4. நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள (8)
 5. ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து, ஆரல் ஆர்கை அஞ்சிறைத் தொழுதி, ... மரம் ஏறி ... பல்குரல் பயிற்றும் (10)
 6. வேய் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தான் (12)
 7. பண்புடை நன்னாட்டுப் பகை தலைவந்து என அது கைவிட்டு ஒரீஇக் காக்கிற்பான் குடை நீழல் பதி படர்ந்து இறை கொள்ளும் குடி போல (13)
 8. அரங்கின்மேல் ஆடுவாள் அணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகம் (14)
 9. குதிரைவீரன் (31)
 10. ஆல் அமர் செல்வன் அணிசால் மகன் விழாக் கால்கோள் (18)
 11. ஒருவரை ஒருவர் விரும்பக் காம உணர்வு ஊட்டுபவன் காமன். காமத்தால் இருவரையும் தழுவச் செய்பவன் காமனின் தம்பி சாமன். (இந்த அடிகளுக்கு நச்சினார்க்கினியர் உரை)
 12. வியாழம், வெள்ளி ஆகிய இருவரும் அந்தணர். இவர்கள் சுக்கிரநீதி என்னும் பொயரில் வடமொழியில் இரண்டு நூல் இயற்றினர். அந்த நூல்நெறி பிறழாது அரசன் ஆண்டானாம். நச்சினார்க்கினியர் உரை
 13. கொற்றி என்னும் காளியே ஒரு பேய். அவளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று சொல்வது போல் உள்ளது.
 14. பாடல் 66 வேறொருத்தி தன் தோள்வளை வடு உண்டாக்கும்படி உன்னைத் தழுவியதை மறைக்கிறாயா என்று தலைவி தலைவனிடம் ஊடினாள்.
 15. பாடல் 67 தன் நெஞ்சு தலைவனிடம் அறைபோகும்போது தன்னால் ஊட முடியுமா என்று தலைவி தன் நெஞ்சோடு பேசுகிறாள்.
 16. பாடல் 68 வேள்வி என்னும் சொல் உதவி என்று பொருள்படும். வேளா முயக்கம் என்பது உதவாத தழுவல். கனவில் கணவன் தழுவியதை வேளா முயக்கம் என்கிறாள்.
 17. பாடல் 69 தலைவன் தான் சொன்ன இடத்துக்கு வந்தவளைத் தன்னோடு புனலாடப் பண்ணினான்
 18. பாடல் 70 தலைவன் பரத்தையுடன் வாழ்ந்ததை மறைக்கக் கற்றுக்கொள்ளாது பாணன் யாழிசையோடு பாடுவதால் அவனைக் கல்லாவாய்ப் பாணன் என்று தலைவி தலைவனிடம் ஊடும்போது குறிப்பிடுகிறாள்.
 19. பாடல் 71 அணங்கு என்பது பிணம் தின்னும் பேய். பரத்தையைத் தழுவிவிட்டு வந்த கணவன் மார்பு மனைவிக்குப் பேய்போல் முடைநாற்றம் வீசுகிறதாம்.
 20. பாடல் 72 ஊடல் தீர்க்கும் வாயில்களாக இந்தப் பாடலில் பாணன், புலைத்தி, அந்தணன் ஆகிய மூவர் காட்டப்படுகின்றனர். இந்த அந்தணன் தலைவனின் புகழ்களைப் பாடும் அறிவு உடைய அந்தணன் எனப் பாராட்டப்பட்டுள்ளான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதக்கலி&oldid=1904426" இலிருந்து மீள்விக்கப்பட்டது