மரியின்சுகி அரண்மனை
| மரியின்சுகி அரண்மனை | |
|---|---|
Маріїнський палац | |
அரண்மனையின் முகப்பு | |
![]() | |
| பொதுவான தகவல்கள் | |
| கட்டிடக்கலை பாணி | பரோக் கட்டிடக்கலை |
| ஆள்கூற்று | 50°26′54″N 30°32′15″E / 50.44833°N 30.53750°E |
| கட்டுமான ஆரம்பம் | 1744 |
| நிறைவுற்றது | 1752 |
| கட்டுவித்தவர் | உருசியாவின் எலிசபெத்து, ரோமானோவ் வம்சம் |
| உரிமையாளர் | உக்ரைன் |
| வடிவமைப்பும் கட்டுமானமும் | |
| கட்டிடக் கலைஞர்(கள்) | பார்த்தலோமியோ ராசுத்ரெல்லி |
உக்ரைனின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அசையா நினைவுச்சின்னம் | |
| அலுவல் பெயர் | மரியின்சுகி அரண்மனை |
| வகை | கட்டிடக்கலை |
| உசாவு எண் | 260118 |
மரியின்சுகி அரண்மனை (Mariinskyi Palace) (உக்ரைனியம்: Маріїнський палац) உக்ரைன் நாட்டின் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். எலிசபெத்திய பரோக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ள இந்த அரண்மனை, உக்ரைனின் கீவ் நகரில் திநிப்ரோ ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. இது உக்ரைன் நாடாளுமன்றமான வெர்கோவ்னா ராடாவின் நவசெவ்வியல் கட்டிடத்தை ஒட்டியதாக அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]மரியின்சுகி அரண்மனை 1744 ஆம் ஆண்டில் உருசியப் பேரரசி எலிசபெத்து பெத்ரோவ்னாவின் ஆணைப்படி கட்டப்பட்டது. அக்காலத்தில் உருசியப் பேரரசில் பணியாற்றிய புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான பார்தலோமியோ ராசுத்ரெல்லி இதற்கான கட்டிட வடிவமைப்பை உருவாக்கினார். ராசுத்ரெல்லியின் மாணவர்களில் ஒருவரான இவான் மிச்சுரின், மேலும் சில கட்டிடக் கலைஞர்களுடன் இணைந்து 1752 ஆம் ஆண்டில் அரண்மனையின் கட்டுமானத்தை நிறைவு செய்தார். எனினும், பேரரசி எலிசபெத்து அரண்மனை முழுமையாக நிறைவடைந்ததைக் காண உயிருடன் இருக்கவில்லை. அரண்மனையில் தங்கிய முதல் உயர்நிலை அரச குடும்ப உறுப்பினர், பேரரசி எலிசபெத்தின் மருமகளான பேரரசி இரண்டாம் கத்தரீன் ஆவார். அவர் 1787 ஆம் ஆண்டில் கீவுக்கு வந்தபோது இங்கு தங்கினார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்த அரண்மனை ஆளுநர் தலைவர்களின் முக்கிய இல்லமாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான தீ விபத்துகளில் அரண்மனை எரிந்து பெரும் சேதமடைந்தது. இதன் பின்னர் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அது புறக்கணிக்கப்பட்டும் பயன்பாடின்றியும் இருந்தது. 1870 ஆம் ஆண்டில் உருசியப் பேரரசர் இரண்டாம் அலெக்சாந்தர், கட்டிடக் கலைஞர் கான்சுடான்டின் மயேவ்சுகியின் மேற்பார்வையில் அரண்மனையை மறுகட்டமைக்கச் செய்தார். பழைய வரைபடங்களும் நீர்வண்ண ஓவியங்களும் மறுகட்டமைப்பிற்கான வழிகாட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் ஆட்சி செய்த பேரரசி மரியா அலெக்சாந்திரோவ்னாவின் பெயரால் அரண்மனை மரியின்சுகி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அவரது விருப்பத்தின்படி அரண்மனையின் தெற்குப் பகுதியில் பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு வரை இந்த அரண்மனை உருசியப் பேரரசின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கீவுக்கு வருகை தந்தபோது தங்குவதற்கான இல்லமாகப் பயன்படுத்தப்பட்டது. 1917 முதல் 1920 வரையிலான உருசிய உள்நாட்டுப் போரின் காலத்தில், குறிப்பாக கீவ் போல்செவிக் எழுச்சியின்போது, இந்த அரண்மனை கீவு புரட்சிக் குழுவின் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1920களில் இக்கட்டிடம் வேளாண்மைப் பள்ளியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது மரியின்சுகி அரண்மனை கடுமையாக சேதமடைந்தது. 1940களின் இறுதியில் அது மீண்டும் சீரமைக்கப்பட்டது. இதன் பின்னர் 1980களின் தொடக்கத்திலும் மற்றொரு பெரிய மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
நவீனகால அரச இல்லம்
[தொகு]2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரண்மனையின் மறுகட்டமைப்புப் பணிகள் தொடங்கின. அவை 2011 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், 2017 ஆம் ஆண்டிலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன.[1] 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று உக்ரைன் குடியரசுத் தலைவர் வலோதிமிர் செலேன்சுக்கி, வெளிநாடுகளின் தலைவர்களை அரசு சார்பில் வரவேற்கும் மரியின்சுகி அரண்மனையின் வெள்ளை மண்டபம் இனி உக்ரைனின் வீரர்களின் வெள்ளை மண்டபம் என்று அழைக்கப்படும் என அறிவித்தார். உக்ரைன் வீரர் என்ற பட்டம் பெற்றவர்களுக்கு இந்த மண்டபத்திலேயே விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.[2][3]
மக்கள் பண்பாட்டில்
[தொகு]2022 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழித் திரைப்படமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கான இசைக் காணொலி, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மரியின்சுகி அரண்மனையில் படமாக்கப்பட்டது.[4][5] இந்தப் பாடல் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த அசல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும்,[6] 95வது அகாதமி விருதுகளில் சிறந்த அசல் பாடலுக்கான விருதையும் வென்றது.[7][8]
காட்சியகம்
[தொகு]- அரண்மனையின் தோட்டங்களிலிருந்து அதன் பின்பகுதியின் காட்சி
- உள்ளே: ஜனாதிபதி குச்மா அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுடன் பேசுகிறார், 5 ஜூன் 2000.
- ஜூன் 2018-இல் கீவ் நகருக்கு லீக்டன்சுடைனின் வாரிசு இளவரசர் அலோயிசு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணம்.
- அரண்மனை நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட இரும்பு வேலிகளால் சூழப்பட்டுள்ளது.
- 1911-இல் மரியின்சுகி அரண்மனை
- 1888-இல் மரியின்சுகி அரண்மனை
- பிப்ரவரி 20, 2023 அன்று கீவ் நகரில் உக்ரைனிய அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Маріїнський палац після реконструкції відкриють для туристів". ua.korrespondent.net. uk:Корреспондент. 6 April 2009. Archived from the original on 17 January 2018. Retrieved 16 January 2018.
- ↑ "Володимир Зеленський вручив ордени "Золота Зірка" військовослужбовцям ЗСУ та членам родин загиблих Героїв України". Офіційне інтернет-представництво Президента України (in உக்ரைனியன்). 5 April 2022. Archived from the original on 30 April 2022.
- ↑ "У Маріїнському палаці з'явилася Біла зала Героїв України". Укрінформ (in உக்ரைனியன்). 6 April 2022. Archived from the original on 5 May 2022.
- ↑ "'RRR' team reaches Ukraine for last leg of shooting". The News Minute. 3 August 2021. Archived from the original on 3 February 2023.
- ↑ "Zelenskyy Offered Ukrainian President's Palace for RRR". indiaherald.com (in ஆங்கிலம்). Retrieved 29 May 2022.
- ↑ "RRR Team Celebrates Win at Golden Globe Awards 2023".
- ↑ Nordyke, Hilary Lewis, Kimberly; Lewis, Hilary; Nordyke, Kimberly (24 January 2023). "Oscars: Full List of Nominations". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 26 January 2023.
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Oscars 2023: RRR's Naatu Naatu, the Elephant Whisperers bring home trophy". 13 March 2023.

