மரபுரிமைச் சுற்றுலாத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபுரிமைச் சுற்றுலாத்துறை (Heritage tourism) அல்லது பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலாத்துறை என்பது, சுற்றுலா நிகழும் இடத்தின் பண்பாட்டு மரபுரிமையை முதன்மைப்படுத்தும் சுற்றுலாத்துறை ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை (National Trust for Historic Preservation) மரபுரிமைச் சுற்றுலாத்துறை என்பதற்கு "கடந்தகாலக் கதைகளையும் மக்களையும் உண்மையாக எடுத்துக்காட்டும் இடங்கள், அரும்பொருட்கள், செயற்பாடுகள் ஆகியவற்றை அனுபவிப்பதற்கான பயணம்"[1] என்றும், "மரபுரிமைச் சுற்றுலாத்துறை பண்பாட்டு, வரலாற்று, இயற்கை வளங்களை உள்ளடக்கலாம்."[1] என்றும் வரைவிலக்கணம் தருகிறது.

பண்பாடு[தொகு]

பல்வேறு பண்பாடுகளை அறியும் ஆர்வம் எப்போதுமே பயணங்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் இருந்து "பெரும் சுற்றுலா"வின் (Grand Tour) வளர்ச்சி இதற்குச் சான்றாக உள்ளது. உலக மட்டத்தில் உலகப் பண்பாட்டின் முக்கியமான விடயங்களில் இருந்து, உள்ளூர் அடையாளங்கள் சார்ந்த விடயங்கள்வரை எல்லா மட்டங்களிலான சுற்றுலாக்களிலும் பண்பாடு சார்பான ஈர்ப்புக்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன.[2]

வெயிலர், ஹோல் ஆகியோரது கூற்றுப்படி, பண்பாடு, மரபுரிமை, கலைகள் ஆகியன நீண்ட காலமாகவே சுற்றுலாத் தலங்களுக்குக் கவர்ச்சியை வழங்குவனவாக இருந்துவருகின்றன. அண்மைக் காலத்தில், மரபுரிமைகளிலும், கலைகளிலும் சிறப்பு ஆர்வம் கொண்டவர்களைக் கவர்வதற்கான ஒரு முக்கிய சந்தைப்படுத்தும் விடயமாக "பண்பாடு" உருவாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடையே சிறப்பாக்கம் அதிகரிக்கும் போக்குக் காணப்படுவதால், பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலாத்துறை இப்போது மிக வேகமாக வளரும் சுற்றுலாத்துறையாக உள்ளது. சாகசம், பண்பாடு, வரலாறு, தொல்லியல், உள்ளூர் மக்களுடனான தொடர்பாடல் போன்றவற்றை நாடும் சுற்றுலாப் பயணிகளின் அளவு உயர்ந்து வருவது இப்போக்குக்குச் சான்றாக உள்ளது.

பல்வேறு காரணங்களுக்காகப் பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலாத்துறை முக்கியமாக உள்ளது. இது விரும்பத்தக்க பொருளாதார, சமூகத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது அடையாளங்களை உருவாக்கி அவற்றை வலுவூட்டுகின்றது. இது பண்பாட்டு மரபுரிமைகளைப் பாதுகாக்க உதவுகின்றது. பண்பாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மக்களிடையே புரிந்துணர்வையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இது பண்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதுடன் சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்கவும் உதவுகிறது. பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலாத்துறை, சம்பந்தப்பட்டவர்களிடையே நெருக்கடிகளையும், பிணக்குகளையும் கூட உருவாக்குகின்றன எனச் சில ஆய்வாளர்கள் இனவரைவியல் அடிப்படையில் எடுத்துக்காட்டி உள்ளனர்.[3]

பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலாத்துறை, தாங்கு வளர்ச்சிச் சூழலில் அடையப்படவேண்டிய பல இலக்குகளைக் கொண்டதாக உள்ளது. இவற்றுள் பண்பாட்டு வளங்களின் பாதுகாப்பு, வளங்களைத் துல்லியமாக விளக்குதல், உண்மையான வருகையாளர் அனுபவம், வருமானத்தைக் கூட்டுதல் என்பன இவ்விலக்குகளுள் அடங்குகின்றன. இதிலிருந்து பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலாத்துறை என்பது அடையாளம் காணல், மேலாண்மை, மரபுரிமைப் பெறுமானத்தைப் பாதுகாத்தல் என்பவற்றைக் கருத்திலெடுப்பது மட்டும் அல்லாது, அது சமூகங்களிலும் பிரதேசங்களிலும் விளைவிக்கக்கூடிய தாக்கங்களைப் புரிந்துகொள்ளல், பொருளாதார, சமூகப் பயன்களைப் பெறுதல், பாதுகாப்பதற்கான நிதி வழங்களை வழங்குதல், சந்தைப்படுத்தல் போன்ற விடயங்களிலும் கவனம் செலுத்தவேண்டும்.

மரபுரிமைச் சுற்றுலாவானது, பழைய கால்வாய்கள், தொடர்வண்டிப் பாதைகள், போர்க்களங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய வரலாற்று அல்லது தொழிற்றுறைக் களங்களுக்குச் செல்வதாக இருக்கலாம். இவற்றின் அடிப்படையான நோக்கம் கடந்தகாலம் பற்றிய உணர்வைப் பெறுவது ஆகும். ஒரு குறித்த இடத்தில் மூலத்தைக் கொண்டுள்ள புலம்பெர்ந்து வாழும் சமூகங்களைச் சேர்ந்தவர்களிடையே அவ்விடத்தை சந்தைப்படுத்துவதும் ஒரு இலக்காக இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Heritage Tourism". National Trust for Historic Preservation. பார்க்கப்பட்ட நாள் 4 April 2014.
  2. Richards, Greg (1996). Production and consumption of European Cultural Tourism. Annals of Tourism Research. Tillburg University Press. 
  3. Porter, Benjamin W. and Noel B. Salazar (2005). "Heritage tourism, conflict, and the public interest". International Journal of Heritage Studies 11 (5): 361–370. doi:10.1080/13527250500337397.