மயிலாடும்பாறை பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாடும்பாறை பாறை ஓவியங்கள், என்பவை தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் கிருட்டிணகிரிக்கு அண்மையில் உள்ள மயிலாடும்பாறை என்னும் ஊரில் இருக்கும் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள குகைபோன்ற அமைப்பின் மேற்புறப் பாறை மேற்பரப்பில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகும்.[1] இப்பகுதி ஏராளமான கல்திட்டைகளுடன் கூடிய பெருங்கற்காலச் சின்னங்களைக் கொண்ட களமாகும்.

மயிலாடும் பாறை சிற்றூரானது கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி வட்டத்தில், கிருட்டிணகிரி- சந்தூர்- மங்கள்பட்டி பேருந்து சாலையில் அமைந்துள்ளது. சந்தூரில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தை அடைய ரெட்டிப்பாளையும் என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து வடபுறமாக திரும்பி மூன்று கிலோமீட்டர் தொலைவு செல்லவேண்டும்.[2] இங்கு இயற்கையாக அமைந்த குகை போன்ற பகுதி இரு பாறைகளுக்கு இடையில் உருவான அமைப்பால் உருவாகி உள்ளது. இந்த குகையில் மேற்புற கூரையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மனிதன், விலங்குகள் ஆகியவற்றின் உருவங்களும், குறியீடுகளும் காணப்படுகின்றன. சிவப்பு. வெள்ளை நிறங்களில் கோட்டுருவங்களாக இவ்வுருவங்கள் காணப்படுகின்றன. வெள்ளை நிற ஓவியங்கள் சிவப்பு ஓவியங்களின்மீது மேற்படியும்படி வரையப்பட்டுள்ளன.[3] இந்த இருவண்ணங்களும் இருவேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றும், சிவப்பு வண்ண ஓவியம் மதலில் வரையப்பட்டு அதன்மீது மீண்டும் வெள்ளை வண்ணத்தில் வரையபட்டுள்ளது என்று க. ராஜன் குறிப்பிடுகிறார்.[2]

பல ஓவியங்களில், மனிதர்கள் விலங்குகளின் மீது இருப்பது போலவும் நிற்பது போலவும் வரையப்பட்டுள்ளன. குடிசைக்குள் மனிதன் இருப்பது போலவும், அக்குடிசையும் மனிதனும் ஒரு விலங்குமீது இருப்பது போலவும் சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றுடன், வாள் போன்ற ஒரு பொருளுடன் விலங்குமீது இருக்கும் மனிதன், விலங்கை ஈட்டியால் வேட்டையாடுவது போன்ற காட்சிகளும் காணப்படுகின்றன. இங்கே மனித உருவங்கள் உடலுறவு கொள்வது போன்ற காட்சியொன்றும் உள்ளது. தமிழகத்தில் கிடைத்த முதலாவது இத்தகைய ஓவியம் இதுவாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 121
  2. 2.0 2.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். பக். 151-156. 
  3. Dayalan, D., p. 13
  4. பவுன்துரை, இராசு., 2001, பக். 125

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]