மனுநேய கயவாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மநுநேயாகயவாகுவுடன் தொடர்புறும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்.

மநுநேயகயவாகு என்பவன் இலங்கைத் தமிழ் வழக்கு மரபுரைகளில் விளங்கி வருகின்ற வரலாற்றுப் பாத்திரம் ஆவான். இவன் பற்றிய குறிப்புகள், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் முதலான கிழக்கிலங்கை வரலாற்று நூல்களில் சொல்லப்படுகின்றன. எவ்வாறெனினும் இந்நூல்கள் கி.பி 15ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியவை என்பதால், இம்மன்னனின் வரலாற்றை உறுதி செய்வது கடினமாகும்.


கோணேசர் கல்வெட்டு[தொகு]

மநுநேயகயவாகு, உண்ணாசகிரியெனும் பட்டினத்தை ஆண்ட "புவனேககயவாகு" எனும் அரசனின் மகன். அவன் அனுராதபுரத்து கயவாகுவுக்கு சிலகாலம் முன்பு ஆண்டவன்.[1] (p110) அவன் கலிங்கநாட்டு அசோகசுந்தரனுக்கும் மனோன்மணிசுந்தரிக்கும் பிறந்த குழந்தை, பேழையில் கடலில் மிதந்துவர, அதையெடுத்து "ஆடகசௌந்தரி" எனப் பெயரிட்டு வளர்த்தான். அவள் பின்னாளில் குளக்கோட்டு மகாராசாவை மணந்து கொண்டாள்.[1](p123,124)

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்[தொகு]

உண்ணாசகிரி மன்னன் புவனேயகயவாகுவுக்கும் அவன் தேவி தம்பதி நல்லாளுக்கும் பிறந்த மேகவண்ணன், கலி. 3150இல் மநுநேயகயவாகு என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தான். உண்ணாசகிரிக்கு வடக்கே இருந்த மட்டக்களப்பு நாட்டை ஆண்டுவந்த தாசகனுடன் சினேகம் கொண்டாடி, நாகர்முனைச் சுப்பிரமணியர் கோவிலுக்குச் சோழநாட்டுச் சிற்பிகளை அழைப்பித்து திருப்பணிகள் செய்து, பிரமாண்டமாய்க் குடமுழுக்குக் கொண்டாடி, சங்கமன்கண்டி முதல் தாண்டகிரி வரை பெரும் ஏரியொன்று அமைத்து, கடலில் பேழையில் மிதந்துவந்த ஆடகசௌந்தரியைத் தன் மகளாய்த் தத்தெடுத்து, கலி.3180 இல் இறைவனடி சேர்ந்தான்.[2](p29-32)[3](p17-19)

வரலாற்றுண்மை[தொகு]

கோணேசர் கல்வெட்டில், இவன் கோணேச்சரத்துடனும், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில், இவன் திருக்கோவிலுடனும்ம் தொடர்புறுத்தப்படுகின்றான். இன்னொரு கிழக்கிலங்கை மரபுரை ஒன்றில் இன்றைய திருக்கோவிலைக் கட்டிய மனுராசா இவனே என அடையாளம் காணப்படுகின்றான்.[4] ஏனைய எந்த நூல்களிலும், இம்மன்னன் பற்றிய குறிப்புக்களைக் காணமுடியவில்லை.

மட்டக்களப்புக்குத் தெற்கே இருந்த உண்ணாசகிரி எனும் அரசை இவன் ஆண்டதாகவே இந்நூல்கள் சொல்கின்றன. மட்டக்களப்புப்ப் பூவ சரித்திரம், காலத்தால் மிகப்பிந்தியது என்பதால், மனுராசன் ஆண்டதாக அது கூறும் (பொ.பி 48 - பொ.பி 78 வரையான) காலக்கணக்கை ஏற்கமுடியாது. இருக்கின்ற குறிப்புக்களை வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மீதான சோழர் படையெடுப்புக்கு சற்று முன்பின்னான காலத்தில், கிழக்கிலங்கையை ஆண்ட குறுநில மன்னன் ஒருவனாக அல்லது வன்னிமை ஒருவனாக மனுநேயகயவாகு இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 இ.வடிவேல், கவிராஜவரோதயர் . (1993), கோணேசர் கல்வெட்டு, இந்துசமய கலாசார திணைக்களம், ISBN 9789558733974
  2. நடராசா, எப்..எக்ஸ்.சி. (1962), மட்டக்களப்பு மான்மியம், கலா நிலையம்
  3. கமலா கமலநாதன்n, வித்துவான் கமலநாதன். (2005), மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், குமரன் புத்தக இல்லம், ISBN 955-9429-66-3
  4. கந்தையா, வீ.சீ. (1983), மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் I, கூடல் வெளியீடு, pp. 49–64

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுநேய_கயவாகு&oldid=2068102" இருந்து மீள்விக்கப்பட்டது