மனுஜோதி ஆசிரமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலாசீர் லாறி என்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

மனுஜோதி ஆசிரமம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கொள்கை நோக்கத்துடன் 1963-ல் பாலாசீர் லாறி (ஆங்கிலம் : Paulaseer Lawrie Muthukrishna) என்பவரால் இது துவங்கப்பட்டது.

பாலாசீர் லாறி[தொகு]

1921-ல் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்த லட்சுமி தேயிலைத் தோட்டம் எனும் இடத்தில் திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜையா என்பவரின் மகனாகப் பிறந்தவர் பாலாசீர் லாறி. இவர் தனது பள்ளிக் கல்வியை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலும், கல்லூரிக் கல்வியை பாளையங்கோட்டை, சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியிலும் படித்து வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். 1947-ல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எபநேசர் நட்சத்திரம் என்பவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட இவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருந்ததால் 1953-ல் தனது பணியைத் துறந்து இறைபணியாகப் பிரசங்கங்கள் செய்து வந்தார்.

மனுஜோதி ஆசிரமம்[தொகு]

அதன் பின்பு கிறித்துவ மதப் பிரச்சாரகராக நாசரேத், நாகர்கோவில் பகுதிகளிலும் அதன் பின்பு கேரள மாநிலத்திலும் கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்து வந்தார். இந்தப் பிரச்சாரங்களின் மூலம் இவர் பல அரிய செயல்களைச் செய்ததால் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது அவர் கடவுள் ஒருவரே, இந்த மதங்கள் என்பது கடவுளுக்கான மார்க்கங்கள் என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் மனுஜோதி ஆசிரமம் ஒன்றை அமைத்து அந்தப் பகுதிக்கு சத்தியநகரம் என்று பெயரிட்டார். இங்கு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற கடவுள் கொள்கை வலியுறுத்தப் பட்டது. இங்கு 1965-ல் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு "கூடாரப் பண்டிகை" என்று சிறப்பு விழா ஒன்று கொண்டாடப்பட்டது.

அவதாரப் புருசர்[தொகு]

1969-ம் வருடம் ஜீலை மாதம் 21ம் நாள். அன்றுதான் சந்திரனில் மனிதன் கால் தடம் பதித்த நாள். அன்று அமெரிக்கா விலிருந்த பாலாசீர் லாறியைச் சந்தித்த அமெரிக்கத் தீர்க்கதரிசியான வில்லியம் பிரான்மியம் என்பவர் "மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடவுள் மனிதன் உருவில் பூமியில் அவதரிப்பது உண்டு என்கிற சித்தாந்தத்தில்தான் அனைத்து வேதங்களிலும் கடவுள் மனித உருவில் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. தங்களிடம் அதற்கான அனைத்து அம்சங்களும் தெரிகிறது." என்று தெரிவித்தார். அன்றிலிருந்து பாலாசீர் லாறி ஆதி புருஷராக, ஸ்ரீ மந் நாராயணராக, பத்தாவது அவதாரமாக, அதாவது கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்டார்.

ஆசிரம செயல்பாடு[தொகு]

1974-ல் இருந்து 1985 வரை வைகுண்ட யோகம், ஆதிபலி ரகசியங்கள், தர்ம வழிகாட்டுதல்கள் போன்ற வேதபாட விளக்கங்கள் இந்த ஆசிரமத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டன. உலகின் பல பகுதிகளிலும் இவரது செயல்கள் அறியப்பட்டன. இதன் மூலம் இங்கு பல மதங்களைச் சேர்ந்த, சாதி, இன, மொழி வேறுபாடுகளில்லாத பலர் இங்கு வரத் துவங்கினர். அவர்கள் பாலாசீர் லாறியைக் கடவுளாகக் கருதினர்.

கல்கி ஜெயந்தி விழா[தொகு]

தனது பிறந்தநாளையே கொண்டாடாத பாலாசீர் லாறி கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்ட நாள் - 1969 ம் வருடம் ஜூலை மாதம் 21ம் நாள் - அவரது பக்தர்களால் 1970 முதல் கல்கி ஜெயந்தி விழாவாக எட்டு நாட்கள் திருவிழாவாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போதைய செயல்பாடு[தொகு]

பாலாசீர் லாறி மறைவிற்குப் பிறகு இந்த ஆசிரமத்தின் தலைவரான தேவாசீர் லாறி மற்றும் அவரது துணைவியார் கீதா தேவாசீர் லாறி இந்த ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு வேதவழிபாட்டுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன. இந்த ஆசிரமத்திற்கு தனி நபர்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ நன்கொடையும் பெறப்படுவதில்லை. இந்த ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆசிரம இணைய தளங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுஜோதி_ஆசிரமம்&oldid=2916806" இருந்து மீள்விக்கப்பட்டது