மனவளர்ச்சிக் குறை
மனவளர்ச்சிக் குறை (Intellectual disability) என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளைக் குறிக்கிறது. மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு என்பதும், மன நோய் என்பதும் வெவ்வேறு உடல்நிலை வளர்ச்சியாலும், மனவளர்சியாலும் உண்டாகின்றன.1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது, ”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல என்றும், அது வளர்ச்சியானது தடைபட்டு, நின்றுவிடும் நிலையைக் குறிக்கிறது” என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர், ”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை” என்று கூறினார். மன வளர்ச்சி குறைபாடு இன்று சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு இன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசாங்கமே ஏற்படுத்தி வருகிறது. மன வளர்ச்சி குறைபாடிற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நெருங்கிய உறவில் திருமணம் செய்தல்,[1] தாமதத் திருமணம், கர்ப்பக் காலத்தில்[2] தாய்க்கு ஏற்படும் விபத்து போன்றவைகளைக் காரணங்களாக அமையலாம்.[3]
காரணங்கள்
[தொகு]உளவாற்றல் குறைவு என்பது மனிதனுக்கு ஏற்படவதற்குரிய உடலியற் காரணங்கள் பல இருந்தாலும், மூன்று முக்கியமானவைகள் என கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று மூளையிலுள்ள சாம்பல் நிறப்பொருள் அளவில் குறைவாயிருப்பது ஆகும். இரண்டாவதாக, மூளை அடுக்குக்கள், பிறப்பிலேயே ஒழுங்கற்ற முறையில் அமைந்திருப்பது ஆகும். மூன்றாவதாக, மூளையின் உயிர் அணுக்கள் முழுவளர்ச்சி நிலையை அடையாமல், அரைகுறையாக இடையில் நின்று போதல் என்பனவற்றைக் கூறலாம்.எந்தக் குறைவையும், அளவிடுவதற்கு ஓர் அலகு உள்ளது. அதுபோல, மூளையின் நிலையை, திறனை அறிந்து கொள்ள அறிதிறன் ஆய்வுகள் உதவுகின்றன. அறிதிறன் (Intelligence) ஆய்வுகள் வழியாக, ஒருவரின் அறிதிறனை அளப்பதற்கு ஓர் அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை, 'அறிதிறன் ஈவு' என்று அழைக்கின்றனர். அறிதிறன் ஈவின் அலகினை, 100 என்று கொள்ளப்படும். இதைக் கொண்டு கணிக்கும்போது, தவறுகள் நேரக் கூடுமாதலால், அலகு 90-110 என்று கொள்ள வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். அறிதிறன் ஈவு, 70-90 உடையவர்கள் அசை உள்ளத்தினர் (Feeble minded) என்றும், 50-70 உடையவர்கள் பேதையர்(Morons) என்றும், 20-50 உடையவர்கள் மடையர்கள் (Imbeciles) என்றும், 20க்குக் குறைந்தவர்கள் முட்டாள்கள் (Idiots) என்றும் அழைக்கப்படுகிறார்கள். முட்டாள்கள் எனப்படுபவர் நெருப்பு, நீர் முதலிய கேடுகளினின்றுங்கூட விலகிக்கொள்ளவும், உண்ணவும் உடுத்தவும் குளிக்கவும் இருக்கவேண்டிய அறிதிறனைப் பெற்று இருக்கமாட்டார்கள். இரண்டொரு சொற்களை மட்டுமே பேசக்கூடிய திறன் பெற்றவராயிருப்பர். இவர்கள் சாதாரண விபத்துக்களில் இருந்து கூடத், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களாக கணிக்கப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்த்தால் உளவாற்றல் குறைவு என்பது, பிறவிக் குறைவு (Endogenic[4]),பிற்குறைவு (Exogenic[5]) என இருவகையாக உள்ளது.
தனி வகைகள்
[தொகு]உளவாற்றல் குறைவின் சில தனிப்பட்ட வகைகள் : நரம்பு மண்டலக் காரணங்களையும் மருத்துவக் காரணங்களையும் வைத்துக் கீழ்க்கண்டவாறு தனியாகக் கூறும் வகைகளும் உண்டு.
கிரீட்டின் (Cretin) : இக்குழந்தைகளின் தலை சிறியதாகவும், உடல் குட்டையாகவும், தோல் வறண்ட நிலையிலும் இருக்கும். இவர்கள் எப்போதும் சோம்பல் மிகுந்தவராயும், எதையும் மெதுவாகச் செய்பவராயும், எதிலும் கருத்தில்லாதவராகவும் இருப்பர். இந்த நிலைக்குக் காரணம், தைராய்டு சுரப்பியில் சுரப்பு உண்டாகாதிருப்பதே என்று கூறப்படுகிறது. இத்தகைய மக்கள் சிலர், தைராய்டு சுரப்பு நீர் பெற்றபின், அறிதிறன் ஈவு மிகுந்தவர்களாக ஆகியிருக்கிறார்கள்.
மங்கோலிய வகை : இவ்வகையினர் மங்கோலிய இனத்தவருடைய, முகத்தோற்றங்களை உடையவராக இருப்பதால், இப்பெயரினைக் கொண்டு அழைக்கப் படுகின்றனர்.
உளவாற்றல் குறைவு என்பது பெரும்பாலும் ஒரு சமூகப் பிரச்சினை என்று தொடக்கத்தில் கருத்தப்பட்டது. பின்னர் வந்த, இவைகள் குறித்த அறிவியல் ஆய்வுகள், பரம்பரையாகச் செல்லக்கூடியதாக இருப்பதையும், சமூகப் பிரச்சினைகளினால் தோன்றியதாகவும் உள்ளதைத் தெரிவிக்கின்றன. அதனால் பல்வேறு நாடுகளும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மலடாக்குதல், கருச்சிதைத்தல், தனியே வைத்தல் ஆகிய முறைகளைக் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3904202/
- ↑ https://www.sciencedaily.com/releases/2018/08/180813082803.htm
- ↑ https://www.webmd.com/parenting/baby/intellectual-disability-mental-retardation#1
- ↑ https://www.ncbi.nlm.nih.gov/pubmed/14136825
- ↑ http://brain.ucsf.edu/sites/brain.ucsf.edu/files/The%20Importance%20of%20Metabolic%20Testing%20in%20Evaluation%20of%20Intellectual%20Disability.pdf