மனத் தற்பாதுகாப்பு நடிவடிக்கைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃபிராய்டிய நோக்கில் மனித மனத்தின் இயக்கத்தை ஒட்டி மனத்தை இச்சை உணர்ச்சி(Id-Instinctual drive), தன்முனைப்புணர்ச்சி(Ego), பண்பாட்டுணர்ச்சி(Super Ego) என்று மூவகைப்படுத்தப்படுகிறது. இச்சை உணர்ச்சியின் விருப்பங்களை வெளியேற்றுவதற்கு தன்முனைப்புணர்ச்சி உதவி புரிகிறது. அவ்வாறு வெளிப்படுத்தும்போது தன்முனைப்புணர்ச்சி பண்பாட்டிற்கு உகந்தவண்ணம் சில மனத் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை(Defense mechanism) மேற்கொள்கிறது. இதன்மூலம் தன்முனைப்பின் இயல்புகளையும் அறியமுடிகிறது. அந்நடவடிக்கைகளாவன:

 1. ஒடுக்கம்(Repression)
 2. மறுசீரமைப்பு(Reaction formation)
 3. புறத்தேற்றம்(Projection)
 4. மறுதலித்தல்(Denial or Undoing)
 5. மீளுகை(Regression)
 6. உயர்வாக்கம்(Sublimation)

என்பன.

ஒடுக்கம்:[தொகு]

இச்சை உணர்வுகளும், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உணர்வுகளும் தன்முனைப்பால் ஒடுக்கப்படுகின்றன. இத்தகைய ஒடுக்கப்பட்ட உணர்வுகள் நனவு மனத்திற்கு அவ்வளவு எளிதில் வருவதில்லை. ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் கொள்கலனாகத் திகழும் நனவிலி மனம் எப்போதும் தனது விழைவுகளை நிறைவேற்றப் பலவித முயற்சிகளை மேற்கொண்டவண்ணம் உள்ளது. ஒடுக்கம் என்ற மனச்செயல் முறை தன்னடக்கத்திற்குச் சமமாகக் கருதப்படுகின்றது. ஆனால் அடக்குதல் தன்னியல்பாக நடைபெறுகின்றது.[1]

மறுசீரமைப்பு:[தொகு]

தன்முனைப்பு மனம், நனவிலி மன இச்சைகளை எதிர்மறையாக மாற்றுவது மறுசீரமைவு ஆகும். பிறரை அழிக்கத் தூண்டும் தாக்குதல் உணர்வுகள், தன்முனைப்பால் மாற்றப்பட்டுப் பிறர்மீது இரக்கம் கொள்வதாகக் காட்டுகிறது. இத்தகைய மாற்றத்தால்தான் மனிதன் சமூக அங்கத்தினனாக, ஒழுக்கமுள்ளவனாக, நேர்மையானவனாகத் தோற்றமளிக்கின்றான். மறுசீரமைப்பின் பொருட்டு திருப்பி விடப்பட்ட காம இச்சையின் ஆற்றல்தான் உலக நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.[2]

புறத்தேற்றம்:[தொகு]

மனிதன் தனது விழைவுகளைத் தானே வெளிப்படுத்தத் தயக்கம் காட்டுகிறான். அவன், தனது அன்பைத் தான் வெளிப்படுத்தாமல் பிறர் இவன்மீது அன்பு காட்டுவதாகவும், தனது வெறுப்புணர்வுகளை மறைத்துப் பிறர் தன்மீது வெறுப்பு கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டுவதாகவும், தனது ஆளுமைத் தன்மையைப் பிற பொருளின்மீது ஏற்றிக் காண்பதாகவும் வெளிப்படுத்துகிறான். அன்பு, கவலை முதலானவை நனவு மனத்தைத் தாக்காவண்ணம் தன்முனைப்பு செய்யும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே இப்புறத்தேற்றமாகும்.

மறுதலித்தல்:[தொகு]

நனவு மனத்தைப் பாதிக்கும் எச்செயலையும் தன்முனைப்புணர்ச்சி மேற்கொள்ளாதிருத்தலே மறுதலித்தல் ஆகும். நனவிலி மன உணர்வுகள் கவலையையும், குற்ற மனப்பான்மையையும் தோற்றுவிக்கக்கூடியன. இதனைத் தவிர்க்க அவ்வுணர்வுகள் நிறைவடையும்படியான செயலைச் செய்யாமல் தன்முனைப்புணர்ச்சி தள்ளி வைக்கிறது. உதாரணமாகத் தான் சமூகத்தில் செய்ய முடியாத செயல்களைப் பகற்கனவில் செய்வதாகக் கண்டு திருப்தி அடைகிறான். கற்பனை உலகில் அவனுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதால் மனமுறிவிலிருந்து தப்பித்துக் கொள்கிறான்.[3]

மீளுகை:[தொகு]

இடிப்பஸ் சிக்கலால் உண்டாகும் விளைவுகளைத் தவிர்க்க நனவு மனம் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கை மீளுகை என்பதாகும். அதாவது மகன், தாய், தந்தை என்ற உறவு முறையில் ஏற்படும் சிக்கலிலிருந்து விடுபட தன்முனைப்புணர்ச்சி ஆசனவாய் இன்பப் பருவத்தையும், வாயின்பப் பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறது. இதன்மூலம் மனிதன் ஒழுக்கம் வாய்ந்தவனாகவும், அதிகம் பேசுபவனாகவும் காணப்படுகின்றான்.

உயர்வாக்கம்:[தொகு]

தன்முனைப்புணர்ச்சி, இச்சையுணர்ச்சியின் விழைவை நிறைவேற்றாமல், அதனைச் சமூகத்திற்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கிறது. அவ்வாறு வடிவமைக்கும்போது சமூகத்தில் பிறரால் மதிக்கத் தகும் உயர்ந்த செயல்களை மேற்கொள்கிறது. உதாரணம் - துறவு. துறவிகள் தனது அனைத்துப் பற்றுக்களையும் துறந்துவிட்டு பிறரால் மதிக்கப்படுமாறு வாழ்கின்றனர். எனினும் அவர்களுடைய இயல்புணர்ச்சிகளாகிய காமம் மற்றும் போருணர்ச்சிகள் மறைந்துவிடுவதில்லை.[2]

தன்முனைப்புணர்ச்சியின் பண்புகள்:[தொகு]

 • தன்முனைப்புணர்ச்சி தற்போதைய நிகழ்வுகளையும், புலன் காட்சிகளையும் நனவு மனத்திற்குக் கொடுக்கிறது. மேலும் பழைய நினைவுகளிலிருந்து புலன் காட்சிகளை வெளிக்கொணர வைக்கிறது. அக்காட்சிகள் அக உலகு சார்ந்து காணப்படுபவை.[4]
 • உணர்வுகளைக் கொள்கலனாகக் கொண்ட இச்சை உணர்ச்சிக்கு மாறாகிய காரணத்தையும், பொது அறிவையும் பிரதிபலிப்பதாகத் தன்முனைப்பு உணர்ச்சி அமைந்துள்ளது.[5]
 • தன்முனைப்புணர்ச்சி இச்சையுணர்ச்சியின் வெளிப்பாட்டிற்குத் தடை விதித்தும், கட்டுப்படுத்தியும் தனது ஆளுகையை மேற்கொள்கிறது.[6]
 • இயல்பான அறத்தை நிலைநாட்டும் மன அமைப்பாக இது விளங்குகிறது. ஆகையால் உணர்ச்சிகளை மடைமாற்றம் செய்யும் செயலைச் செய்கிறது.

[7]

அடிக்குறிப்புகள்:[தொகு]

 1. மு.இராசமாணிக்கம், உள்ளத்தின் விந்தைகள், ப.116
 2. 2.0 2.1 மேலது., ப.85.
 3. மேலது.,ப.71.
 4. Sigmund Freud, Neurosis and Psychosis, Penguin Freud Library, Vol.10. P.215.
 5. Sigmund Freud, The Ego and the Id, Penguin Freud Library, Vol.11. P.364.
 6. Ibid., P.397.
 7. Ibid., P.396.