உள்ளடக்கத்துக்குச் செல்

மத மாற்றத் தடை சட்ட வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத மாற்றத் தடை சட்ட வழக்கு (Anti-Conversion Law Case), இந்தியாவின் ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அரியானா மற்றும் இராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்கள் மத மாற்றத் தடைச் சட்டங்களை இயற்றியுள்ளது. இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதால், இந்தியக் கிறிஸ்தவ திருசபைகளின் மன்றம்[1] இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது[2]. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த அமர்வு மதமாற்றச் சட்டங்கள் தொடர்பான பிற ஒத்த மனுக்களுடன் இணைத்தது. இந்த மனுக்களை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்படும் என அறிவித்ததுடன், இந்த வழக்கு குறித்து பதில் அனுப்ப 12 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.[3][4]

பின்னணி

[தொகு]

சமீப காலங்களில் பல இந்திய மாநிலங்கள் மத மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றி வருகிறது. மத மாற்றத்திற்காக ஆசை வார்த்தைகள், வெகுமதிகள் மற்றும் பிற முறைகளை கையாளத் தடை செய்வதற்காக மாநில அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களாகும். இந்தச் சட்டங்களில் சிலவற்றின் இந்திய அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மைக்கு சவால் விடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க வழக்குகளும் விவாதிக்கப்பட்டுள்ளது. மதமாற்றப் பிரச்சினைக்கு ஒரு மாற்று நடவடிக்கையாக மதமாற்றத் தடைச் சட்டங்கள் பார்க்கப்படுகிறது. இந்த மத மாற்றத் தடை சட்டம், இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு சில கடுமையான சவால்களை ஏற்படுத்துகிறது.

மதமாற்றத் தடை சட்டங்கள் என்பது ஒருவரின் நம்பிக்கையை மாற்றுவதற்கான வற்புறுத்தல் மற்றும் மோசடி வழிகளைத் தடுப்பதன் மூலம் மத மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விதிகளின் தொகுப்பாகும். இந்தச் சட்டங்கள் தனிநபர்கள் மற்றொரு மதத்திற்கு மாறுவதற்கு முன்பு அரசாங்க அனுமதியைப் பெற வேண்டும் என்றும் கோருகிறது.

இந்தியாவில் பல மாநிலங்கள் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுகின்றன. இருப்பினும் இது சட்டங்களின் நோக்கம், சட்டங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குடிமக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமைகள் மற்றும் தனிநபர்களின் தனிப்பட்ட தேர்வு மற்றும் சுதந்திரம் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

மதமாற்ற தடைச் சட்டங்கள்

[தொகு]

ஏமாற்றுதல், கட்டாயப்படுத்துதல் அல்லது திருமணம் மூலம் செய்யப்படும் மத மாற்றங்களுக்குத் தண்டனை விதிக்கிறது. குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை (சில மாநிலங்களில் 7 ஆண்டுகள் வரை) விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

.

மதமாற்ற தடை சட்டங்களின் அம்சங்கள்

[தொகு]
  • கட்டாய மதமாற்றங்களைத் தடை செய்தல்: வற்புறுத்தல், மோசடி, தேவையற்ற செல்வாக்கு அல்லது நிதி ஊக்கத்தொகை மூலம் ஒருவரை மதமாற்றம் செய்வதை தடை செய்கிறது.
  • அறிவிப்பு தேவைகள்: சில மாநிலங்களில், மதமாற்றம் செய்ய விரும்பும் நபர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • தண்டனை நடவடிக்கைகள்: இந்தச் சட்டங்களை மீறுவதற்கான தண்டனைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. மேலும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகியவை அடங்கும்.

மதமாற்ற தடை சட்டங்களின் தேவை

[தொகு]

இந்தச் சட்டங்கள் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பல்வேறு சமூகங்களில் வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பராமரிக்கவும் முயல்கின்றன. கட்டாய மதமாற்றங்கள்: மத மாற்றங்களில் வற்புறுத்தல், மோசடி அல்லது தூண்டுதலைத் தடுக்க மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் தேவையாக உள்ளது. குறிப்பாக மதம் மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட பகுதிகளில் கட்டாய மதமாற்றங்கள் நடந்ததாக அறிக்கைகள் வந்துள்ளது. எடுத்துக்காட்டாக சனவரி 2021 மற்றும் ஏப்ரல் 2023க்கு இடையில், உத்தரபிரதேசத்தில் 427 மதமாற்றம் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளது.

அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துதல்: இந்திய அரசியலமைப்பு, பிரிவு 25 தனி நபர்களுக்கு மத சுதந்திரம் வழங்குகிறது. அதே நேரத்தில் நியாயமான கட்டுப்பாடுகளை அனுமதிக்கிறது. மதமாற்றங்கள் தானாக முன்வந்து நடப்பதை உறுதி செய்வதன் மூலம் இந்த சமநிலையை பராமரிக்க மதமாற்ற தடைச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்தைத் தடுப்பது: தனிநபர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட, தூண்டப்பட்ட அல்லது வேறு மதத்திற்கு மாற்றப்படும் வழக்குகளை எதிர்த்துப் போராடுவதில் மதமாற்ற தடைச் சட்டம் மிக முக்கியமானது. பெரும்பாலும் நிதி மற்றும் பொருள் நன்மைகள் அல்லது தவறான திருமண வாக்குறுதியின் மூலம்.

மத மக்கள்தொகை: மத மாற்றங்களால் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் இது பெரும்பான்மை மதத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக, துருவமுனைப்பு பிரச்சாரம், வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்கள் பரவுவதால், அரசின் தலையீட்டின் தேவையை அதிகரிக்கிறது.

சமூக நல்லிணக்கம்: மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், கட்டாய மதமாற்றக் குற்றச்சாட்டுகளால் ஏற்படும் மதப் பதட்டங்கள் அல்லது மோதல்களைத் தணிப்பதற்கும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் அவசியமாகிறது.

மதமாற்ற தடைச் சட்டங்களின் நிலை

[தொகு]

இந்தியாவில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே தொடங்கியது. துவக்கத்தில் பிரித்தானிய கிறித்துவ இயக்கங்களின் செல்வாக்கை எதிர்க்க இந்து சமய மன்னர்கள் ஆண்ட சுதேச சமஸ்தானங்களால் கட்டாய மத மாற்றச் சட்டங்கள் 1930-1940 இடைப்பட்ட ஆண்டுகளில் இயற்றப்பட்டது. இந்திய விடுதலைப் பிறகு 1967ஆம் ஆண்டு ஒரிசா மத சுதந்திரச் சட்டம், கட்டாய மதமாற்றங்களைத் தடைசெய்யும் நாட்டின் முதல் சட்டமாகும். தற்போது சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற 12 மாநிலங்கள் மதமாற்ற தடைச் சட்டங்களை இயற்றியுள்ளது.

சிக்கல்கள்

[தொகு]

இந்தியாவில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தாலும், தெளிவற்ற மொழி, அடிப்படை உரிமைகள் மீதான சாத்தியமான மீறல்கள், சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்கங்கள் மற்றும் அரசியலமைப்புச் சவால்கள் காரணமாக மத சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்புகின்றன.

தெளிவற்ற சொற்களஞ்சியம்: "வற்புறுத்தல்", "தூண்டுதல்" மற்றும் "வசீகரிப்பு" போன்ற சொற்கள் பெரும்பாலும் வரையறுக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. எடுத்துக்காட்டாக உதாரணமாக உத்தரப் பிரதேச மாநில் சட்டவிரோத மத மாற்றத் தடைச் சட்டம், 2021ன் கீழ் மதமாற்ற முயற்சிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது. இருப்பினும் மதமாற்ற முயற்சியில் என்ன அடங்கும் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

அடிப்படை உரிமைகளை மீறுதல்: மதமாற்றத் தடுப்புச் சட்டம் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆவணங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரம் மற்றும் மனசாட்சிக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகக் கருதப்படுகிறது.

ஒருவரின் நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் அல்லது மதம் மாறும் உரிமையின் மீதான ஒரு முழுமையான கட்டுப்பாடாக இச்சட்டத்தை நோக்குகிறார்கள்.

சர்வதேச மதப் பாதுகாப்புகளை மீறுதல்: மதமாற்றத் தடுப்புச் சட்டங்கள் மதமாற்றங்களை குற்றமாக்குகின்றன. மேலும் விருப்பமான மதத்தை ஏற்றுக்கொள்ளும் உரிமையைப் பாதுகாக்கும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் பிரிவு 18 மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு 18 ஆகியவற்றை மீறுகிறது.

அரசியலமைப்பு சட்டம்

[தொகு]

இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவின்படி, "பொது ஒழுங்கு, ஒழுக்கநெறி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டு, அனைத்து நபர்களுக்கும் மனசாட்சியின் சுதந்திரத்திற்கும், மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்கும் சம உரிமை உண்டு". இருப்பினும் அரசியலமைப்பில் எங்கும் மதமாற்றம் பற்றி குறிப்பிடப்படவில்லை.

வழக்கு

[தொகு]

இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகளின் பேரவை, ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 12 மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மதமாற்றச் சட்டங்கள் தொடர்பான பிற ஒத்த மனுக்களுடன் இணைத்தது. இந்த மனுக்கள் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்படும் என அறிவித்ததுடன், இந்த வழக்கு குறித்து பதில் அனுப்ப 12 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]