மதுரை வாலாட்டிப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை வாலாட்டி பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
யூரோபெல்டிடே
பேரினம்:
பிளாட்டிபிளிக்டுரசு
இனம்:
பி. மதுரென்சிசு
இருசொற் பெயரீடு
பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு
பெடோமி, 1877

மதுரை வாலாட்டிப்பாம்பு (அறிவியற் பெயர்: பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு Platyplectrurus madurensis) இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் தென்பகுதியில் சில இடங்களில் மட்டுமே காணப்படும் வாலாட்டிப் பாம்பு ஆகும்.[1] இலங்கையின் சில பகுதிகளில் இவ்வினம் பதிவாகியிருந்தாலும்[2] அது வேறு தனியினமாக இருக்க வாய்ப்புள்ளது. அவ்வகையில் இதுவோர் அகணிய உயிரியாகும். இப்பாம்பை பழநி கரும்பழுப்பு முள்ளிவாலிப் பாம்பு என்றும் திருவிதாங்கூர் மலை முள்ளிவாலிப்பாம்பு என்றும் அழைப்பர். இவை நஞ்சற்றவை.

உடலமைப்பு[தொகு]

மதுரை வாலாட்டிப்பாம்புகளின் முதுகுப்புறம் கரும்பழுப்பு நிறத்தில் மினுமினுக்கும். அடிப்பகுதியும் பக்கவாட்டிலுள்ள செதில்களும் நடுவில் வெண்ணிறமாகவும் கரும்பழுப்புக் கரையுடனும் இருக்கும். இவ்வினத்துக்கான பாம்பியலறிஞர் பெத்தோமின் முறையான பதிவுப்பாடங்களுள் மிகநீளமான பாம்பு தலைமுதல் வாலின் நுனிவரை 35 cm (13+34 அங்)இருந்தது.

இவற்றின் முதுகுப்புறச் செதில்கள் நடுவுடம்பில் 15 வரிசைகளிலுள்ளன. கழுத்துப்பகுதியையும் சேர்த்தால் 17 வரிசைகள். அடிப்புறம் 158 முதல் 175 வரையிருக்கும். கழிவாய்க்குக் கீழேயான வால் பகுதியில் 10 முதல் 15 வரிசைகள் இருக்கும்.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகள் சிற்சில மாற்றங்களுடன் வெவ்வேறு இனங்களாகக் கிளைத்து அருகருகே அமைந்துள்ள ஆனால் சற்றே மாறுபட்ட சூழலுடைய புவியியற் பகுதிகளில் காணப்படும். அதனால் இவற்றை படிவளர்ச்சியைக்காட்டும் தார்வினின் சலசலக்கும் பறவைகளைப் போன்றதொரு குடும்பமாகக் கருதுவர். அவ்வகையில் மதுரை வாலாட்டிப்பாம்புகள் ஆனைமலையிலும் பழநி மலைத்தொடரின் பிற பகுதிகளிலும் காணப்படும் முவ்வரி வாலாட்டிப்பாம்புகளைப் போலவே தோன்றும். இவற்றின் தலைக்கவசம் முவ்வரி வாலாட்டிப்பாம்புகளைக் காட்டிலும் சற்று சிறியதாக இருப்பதும், முவ்வரி வாலாட்டிப்பாம்புகளைப்போல கண்ணுக்கு மேலேயுள்ள செதில் முகப்புச்செதிலைவிட பெரிதாக இல்லாமலிருப்பதும் இவற்றை வேறுபடுத்த உதவுகின்றன.[3]

உணவு[தொகு]

மதுரை வாலாட்டிப்பாம்புகள் சிறு முதுகெலும்பிலா விலங்குகளையும் மண்புழுக்களையும் தின்கின்றன.[4] இவை மண்ணின் மேற்பரப்பில் குழிபறித்துச் செல்லுகின்றன.

இனப்பெருக்கம்[தொகு]

பொதுவாக பாம்புகள் முட்டையிடுகின்றன. அவற்றிலிருந்து பார்ப்புகள் வெளிவரும். ஆனால் சில பாம்பினங்களில் மட்டும் தாயுள் முட்டை வளர்ச்சி நிகழும். ஒரு கட்டத்தில் தாயின் உடலுக்குள்ளேயே முட்டைகள் பொரிந்து தாய்ப்பாம்பு பார்ப்புகளை ஈனும். மதுரை வாலாட்டிப் பாம்புகளில் இவ்வகை இனப்பெருக்கம் நிகழ்கிறது.[2]

சூழியல்[தொகு]

மதுரை வாலாட்டிப்பாம்புகள் சோலைக்காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அத்தகைய காடுகளுக்கு அருகிலுள்ள தோட்டங்களிலும் காணலாம். பாறைகளுக்கு அடியிலும், இலைச்சருகுகளுக்கு இடையேயும், குவிந்து கிடக்கும் காய்ந்த இலைகள், மரக்கிளைகள் போன்றவற்றுக்கு இடையேயும் இவற்றைக் காணலாம். காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும் சாலைகளில் வண்டிகளில் அடிபட்டு இறப்பதாலும் இவ்வினம் அருகிவருகிறது. அதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மதுரை வாலாட்டிப்பாம்புகளை அருகிய இனமாக அறிவித்துள்ளது.

பரம்பல்[தொகு]

மதுரை வாலாட்டிப்பாம்புகள் இந்திய மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. குறிப்பாக இதன் முதல் முறைப்படியான பதிவு "பழநி மலைத்தொடரில் குறிப்பாக 6000 அடி உயரத்தில் கொடைக்கானலுக்கருகே (மதுரை மாவட்டம்)" காணப்பட்டதாகத் தெரிவிக்கிறது. மற்றொரு செருமன் பதிவு "தென்னிந்தியா (பழநி மலைகள், மதுரா)" என்கிறது. இவ்வினத்தின் உள்ளினமாகச் சிலர் கருதும் P. ruhanae எனும் இனத்துக்கான பதிவு காலி, தென் மாகாணம், இலங்கை என்றுள்ளது.[2]

துணைச்சிற்றினங்கள்[தொகு]

இவ்வினத்தின் முதற்பதிவான வகையையும் சேர்த்து இரு உள்ளினங்கள் அறியப்பட்டுள்ளன.

 • பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு மதுரென்சிசு பெடோமி, 1877
 • பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு உருகானே தெரானியாகலா, 1954[2][5]

உள்ளினப்பெயர் ruhanae இலங்கையின் உருகுணை இராச்சியத்தைக் குறிக்கிறது.[6] இது மதுரை வாலாட்டிப்பாம்பினத்தின் உள்ளினமாக இல்லாமல் தனியோர் இனமாகுமென்று சில ஆய்வர்கள் கருதுகின்றனர்.[1] அதைப்பொருத்து இதை இந்திய மேற்குத்தொடர்ச்சி மலைகளின் உள்ளக இனமாகக் கொள்ள முடியும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Srinivasulu, C.; Srinivasulu, B.; Ganesan, S.R. (2013). "Platyplectrurus madurensis". IUCN Red List of Threatened Species 2013: e.T178420A1533817. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T178420A1533817.en. 
 2. 2.0 2.1 2.2 2.3 Platyplectrurus madurensis at the Reptarium.cz Reptile Database. Accessed 16 November 2016.
 3. Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families ... Uropeltidæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I-XXVIII. (Platyplectrurus madurensis, p. 166 + Plate XI, figures 2, 2a).
 4. Indiansnakes.org: Madurai Shieldtail | Indiansnakes.org, அணுகியது: அக்டோபர் 18, 2019
 5. "Platyplectrurus madurensis ". Dahms Tierleben. www.dahmstierleben.de.
 6. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Platyplectrurus madurensis ruhanae, p. 228).

உசாத்துணை[தொகு]

 • Beddome RH (1877). "Descriptions of three new Snakes of the Family Uropeltidae from Southern India". Proc. Zool. Soc. London 1877: 167-168. (Platyplectrurus madurensis, new species, p. 167).
 • Beddome RH (1886). "An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon". Ann. Mag. Nat. Hist., Fifth Series 17: 3-33.
 • Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Platyplectrurus madurensis, p. 274).
 • Das I (2002). A Photographic Guide to Snakes and other Reptiles of India. Sanibel Island, Florida: Ralph Curtis Books. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-056-5. (Platyplectrurus madurensis, p. 59).
 • Deraniyagala PEP (1954). "Two new snakes from Ceylon". Proc. 10th Congress Ceylon. Assoc. Advancement Sci. 1: 24.
 • Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Platyplectrurus madurensis, p. 69).
 • Werner F (1925). "Neue oder wenig bekannte Schlangen aus dem Naturhistorischen Staatsmuseum in Wien. II ". Teil. Sitz. Ber. Akad. Wiss., Wien, Abt. I, 134: 45-66.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_வாலாட்டிப்பாம்பு&oldid=3875770" இலிருந்து மீள்விக்கப்பட்டது