கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் தென் தமிழகத்தில் உள்ள மதுரை, நன்கு வளர்ந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. மதுரையின் போக்குவரத்து முறைகளில் சாலை, தொடருந்து, வானூர்தி ஆகியவை அடங்கும். மதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து சிக்கல்கள் அதிகரித்து வருவதால், நகர போக்குவரத்திலும், புறநகர் பகுதிகளிலும் ஏற்படும் போக்குவரத்து சிக்கல்களைக் குறைக்க பெருந்திட்டங்கள் உருவாக்கபட்டுள்ளன. [உதாரணம் தேவை]
மதுரை தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேலும் தென் மாவட்டங்களை தமிழ்நாட்டின் வட மாவட்டங்களுடன் இணைக்கிறது. மேலும் இது தமிழ்நாட்டின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. நகரத்தில் புழங்கும் மக்கள் தொகை மிகவும் அதிகமாகும். தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு பெரும்பாலான மக்கள் மருத்துவம், கல்வி, சந்தைப்படுத்தல், சரக்கு, கொள்முதல் செய்ய, சுற்றுலா அல்லது அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக வருகை தருகின்றனர். தமிழ்நாட்டின் முக்கியமான போக்குவரத்து வட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
எம். ஜி. ஆர் பேருந்து நிலையம்
ஆட்டோ ரிக்சாக்கள் எனப்படும் தானிகள் 30,126 என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட மூச்சக்கர வாகனங்கள் உள்ளன. அவை வணிக ரீதியாக நகரத்திற்குள் வாடகைக்கு கிடைக்கின்றன.[1] பொது போக்குவரத்துக்காக அரசால் இயக்கப்படும் நகர பேருந்துகள் மட்டுமல்லாமல், உள்ளூர் போக்குவரத்துக்கு வசதியாக பதிவு செய்யப்பட்ட 236 தனியார் சிற்றுந்துகளும் உள்ளன.[1] மதுரை பின்வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைகிறது;
மதுரை நகரம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலைகளான மா.நெ-32, மா.நெ-33, மா.நெ-72 ஆகியவை, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை நகரத்துடன் இணைக்கின்றன.[2] தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வலையமைப்பின் ஏழு வட்டங்களில் மதுரையும் ஒன்று.[2] மேலும் இந்த நகரம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (மதுரை) தலைமையகமாக உள்ளது. இந்தப் போக்குவரத்துக் கழகமானது மதுரை திண்டுக்கல், தேனி, விருதுநகர், ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்தை வழங்குகிறது.[3]
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகரம் சிறந்த நகரப் பேருந்து வசதியைக் கொண்டுள்ளது. தநாஅபோக (மதுரை) மூலம் இயக்கப்படும் மதுரை நகரப் பேருந்துகளால் நகரின் முக்கியப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அசோக் லேலேண்ட், டாடா மார்கோபோலோ போன்ற பெரும்பாலான பேருந்துகளில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. நகர பேருந்துகள் பகல் நேரத்தில் கிடைக்கின்றன. ஆனால் சில முக்கியமான பகுதிகளில் இரவு பகல் என நாள் முழுவதும் நகர பேருந்து சேவைகள் உள்ளன.
மதுரை மாநகரில் பொது போக்குவரத்தில் மதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பேருந்துகள் விரைவாக செல்வதுடன், பயண நேரத்தை குறைக்கின்றன.
மதுரை மாநகரில் முக்கிய நகர பேருந்து நிலையங்கள் பின்வருமாறு;
பெரியார் பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையம் மதுரை மத்தி
அண்ணா நகர் பேருந்து நிலையம் மதுரை கிழக்கு
அனுப்பானடி பேருந்து நிலையம் மதுரை கிழக்கு
கே. புதூர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
பழங்காநத்தம் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
திருநகர் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
திருமங்கலம் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
மேலூர் பேருந்து நிலையம் மதுரை வடகிழக்கு
பூங்கா நகர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
வாடிப்பட்டி பேருந்து நிலையம் மதுரை மேற்கு
ம. கா. ரோடு பேருந்து நிலையம் மதுரை வடக்கு
ஆனையூர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
வண்டியூர் பேருந்து நிலையம் மதுரை தெற்கு
பேரையூர் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
டி. கல்லுபட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர்
உசிலம்பட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர்
ஏழுமலை பேருந்து நிலையம் மதுரை புறநகர்
திருப்பாலை பேருந்து நிலையம் மதுரை வடக்கு
அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
பாலமேடு பேருந்து நிலையம் மதுரை புறநகர்
அழகர் கோவில் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
சோழவந்தான் பேருந்து நிலையம் மதுரை புறநகர்
கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் மதுரை புறநகர்
எம். ஜி. ஆர் பேருந்து நிலையம்(மாட்டுத்தாவணி) மதுரை வடக்கு
ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
எல்லிஸ் நகர் பேருந்து நிலையம் மதுரை வடக்கு
மதுரை சர்வதேச விமான நிலைய பேருந்து நிலையம் மதுரை தெற்கு
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகளை கையாள 10 தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன
இந்தப் பேருந்து நிலையம் நகரத்தின் உள்ளே அமைந்திருப்பதாலும், அதன் அளவாலும், பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் எப்போதும் நெரிசலாகத் தெரிகிறது. எனவே அடுத்து எய்ம்ஸ் அருகே ஒரு பேருந்து நிலையத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் நகரின் போக்குவரத்தை குறைக்க நகரத்திற்கு வெளியே மாற்றப்படும்.
மதுரை சந்திப்பு ரயில் நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய ரயில்வே சந்திப்புகளில் ஒன்றாகும். மேலும் மதுரை தொடருந்து கோட்டத்தின் தலைமாயகமாக மதுரை உள்ளது. இது இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தென்னக இரயில்வேயில் வருவாய் அடிப்படையில் மதுரை கோட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தென்னக இரயில்வேயின் ஏ1 தரநிலையங்களில் ஒன்றாகும் (ரூ. 50 கோடி வருமானம் ஈட்டும் தொடருந்து நிலையங்கள் ஏ1 தரம் பெறும்). மதுரையில் இரண்டு முனையங்கள் உள்ளன.:
மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (பயணிகள் கையாளுதல்)
கூடல்நகர் தொடருந்து நிலையம் (சரக்குகளைக் கையாளுதல்)
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: IXM, ICAO: VOMD) என்பது தமிழ்நாட்டின்மதுரைக்கு சேவை செய்யும் வானூர்தி நிலையமாகும். இந்த வானூர்தி நிலையமானது மதுரை தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 கி. மீ (7.5 mi) தொலைவில் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வானூர்தி நிலையம் தமிழ்நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. மேலும் இலங்கையின்கொழும்புக்கு சர்வதேச விமானப் போக்குவரத்தை 20 செப்டம்பர் 2012 அன்று தொடங்கியது.[7] இப்போது, இது துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சேவைகளை வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகிய வானூர்தி நிறுவனங்கள் இந்த நிலையத்தில் தங்கள் வானூர்திகளை இயக்குகின்றன.[8] இந்த வானூர்தி நிலையம் 2011 ஏப்ரல் முதல் 2012 மார்ச் வரை 520,000 பயணிகளைக் கையாண்டது.[9][10][11]
இந்த விமான நிலையமானது அருகிலுள்ள அடுத்தடுத்து இரண்டு முனையங்களைக் கொண்டுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த முனையமானது சர்வதேச மற்றும் உள்நாட்டு போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையத்தை சரக்கு வளாகமாக மாற்ற இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பெருநகரங்களில் இல்லாத 35 வானூர்தி நிலையங்களை நவீனமயமாக்குவதன் ஒரு பகுதியாக, இவாஆ பழைய முனையத்திற்கு அருகில் ஒரு அதிநவீன புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தை உருவாக்கியது. ₹1.29 பில்லியன் (US$15 மில்லியன்) செலவில் புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையக் கட்டடம் 12 செப்டம்பர் 2010 அன்று திறக்கப்பட்டது. பெரிய ஜெட் விமானங்களுக்கு வந்திறங்க ஏதுவாக ஓடுபாதைகளை 12,500 அடி (3,800 மீ) நீளத்திற்கு விரிவுபடுத்துவதற்காக மொத்தம் 610 ஏக்கர் (250 ஹெக்டேர்) நிலத்தை கையகப்படுத்தப்படுகிறது. 17,560 m2 (189,000 sq ft) பரப்பளவைக் கொண்ட இந்த முனையம், வருகை மற்றும் புறப்படுகையில் ஒவ்வொன்றிலும் 250 பயணிகளைக் கையாள முடியும்.[12] விமான நிலைய வாகன தரிப்பிடப் பகுதியில் 375 மகிழுந்துகளையும் 10 பேருந்துகளையும் நிறுத்தும் திறன் உள்ளது.[13] புதிய முனையத்தின் சில அம்சங்கள் பின்வருமாறு:[14]
புதிய முனையத்தில் இரண்டு ஓய்வறைகள் இருக்கும், இந்திய வானூர்தி ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு விஐபி லவுஞ்ச் மற்றும் மதுரை டிஎன்சிசி-யால் நிர்வகிக்கப்படும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் (CIP) ஓய்வறை ஆகியவை ஆகும்.[15]
மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வளர்ந்து வரும் சரக்கு திறனைக் கருத்தில் கொண்டு, பழைய முனையத்தை முழு அளவிலான சரக்கு வளாகமாக மாற்ற இந்திய வானூர்தி ஆணையம் முடிவு செய்துள்ளது.. மதுரை சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாள்வது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் 28 மே 2013 தேதியிட்ட சுங்க அறிவிப்புகளை வெளியிட்டது.