மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Mathura Refinery), இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான இந்த பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரத்தில் அமைந்துள்ளது. நைஜீரியா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த அளவு கந்தகம் கலந்த பாறை எண்ணெய்யை இவ்வாலை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, வானூர்திகளுக்கான எரிபொருள், எரிநெய், அசுபால்ட்டு, கந்தகம், செயற்கை உரங்கள் மற்றும் நெகிழி தயாரிக்க தேவையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[1]
இவ்வாலை 19 சனவரி 1982 அன்று துவங்கும் போது ஆண்டிற்கு 6 மில்லியன் டன் பாறை எண்ணெய்யை சுத்திகரிக்கும் ஆற்றலுடன் நிறுவப்பட்டது. 1989ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி அளவு 7.5 மில்லியன் டன்னாக உயர்ந்தது. தற்போது இதன் உற்பத்தி ஆண்டிற்கு 8 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.