உள்ளடக்கத்துக்குச் செல்

மதுமிதா (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுமிதா
பிறப்புமதுமிதா
தென்காசி, தமிழ்நாடு,  இந்தியா
தொழில்எழுத்தாளர்
வகைசிறுகதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு

மதுமிதா என்ற "மஞ்சு ரெங்கநாதன்" ஒரு தமிழக எழுத்தாளர். கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர். சமசுக்கிருதத்திலிருந்து மொழிபெயர்ப்பு நூலொன்றையும் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

தமிழ்நாடு, தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின் பேத்தி. தந்தை ரகுபதிராஜா. தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரங்கநாதராஜா. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்.

எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளோமா இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்கிருதத்தில் பட்டப் படிப்பும் படித்துள்ளார்.

மகாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், அன்புடன், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ்தமிழ், தமிழ்நெஞ்சம், முத்துக்கமலம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் [1] என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.

இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கியகாரணியாய் இருந்தவர்.

எழுதிய நூல்கள்

[தொகு]
 • மஹாகவி பர்த்ருஹரி சுபாஷிதம்:நீதிசதகம் (2000) - (மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகளை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.)
 • மௌனமாய் உன்முன்னே (2003) - (கவிதை)
 • பர்த்ருஹரி சுபாஷிதம் (செப்டம்பர் 2005) - (சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல்)
 • நான்காவது தூண் (2006)(பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பு)
 • தைவான் நாடோடிக் கதைகள் (2007)
 • பாயுமொளி நீ எனக்கு (2007) - (கவிதை, மின்னூல்)
 • வசீகரிக்கும் தூசி  (2010) - ஒரிய கவிஞர்பிரதிபா சத்பதியின் கவிதைத்தொகுப்பு நூல்.ஆங்கில வழி தமிழாக்கம்.
 • அக்கமகாதேவி வசனங்கள் (2010) -  டாக்டர் தமிழ்ச்செல்வியுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம்.
 • காலம் (2010) - ' புதியபார்வை' இதழில் எழுதிய பத்திகளின் தொகுப்பு.
 • இரவு (2010)  - படைப்பாளிகளின் இரவுகள் குறித்த தொகுப்பு நூல்.
 • மரங்கள் (2011)  - படைப்பாளிகள் தங்களுடைய மரங்களுடன் இணைந்த சிந்தனைகளைகளைப் பகிர்ந்து கொண்டகட்டுரைகளின் தொகுப்பு நூல்.
 • மேகதூதம் (2013) - மகாகவி காளிதாசரின்மேகதூதம், ருது சம்ஹாரம்,சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம்.
 • பருவம்  (2014)  - படைப்பாளிகள் தங்களுடைய பருவங்களைக் குறித்து பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
 • தசாவதாரம் (2014) மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரக் கதைகள் (சிறுவர் கதைகள்)
 • நிஜ இளவரசி (2014) ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்செனின் தேவதைக் கதைகள் (சிறுவர்கதைகள்) தமிழாக்கம்.
 • கவிஞர் சித்தலிங்கய்யா 40 கன்னடக் கவிதைகள் (2014) பேராசிரியை கே.மலர்விழி அவர்களுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம்.
 • வேமன மாலை (2016) வேமனரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்கள் தெலுங்கிலிருந்து தமிழாக்கம்.
 • பூக்களை விற்ற ஊர் (2016) தெலுங்கு கவிஞர் பெருகு ராமகிருஷ்ணாவின் கவிதைகள் தமிழாக்கம்.
 • பெத்தி பொட்ல சுப்பராமய்யா கதைகள் (2018), தெலுங்கிலிருந்து தமிழாக்கம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுமிதா_(எழுத்தாளர்)&oldid=3815625" இலிருந்து மீள்விக்கப்பட்டது