மதுமாலா சட்டோபாத்யாயா
மதுமாலா சட்டோபாத்தியாயா | |
---|---|
பிறப்பு | 16 மார்ச்சு 1961[1] சிப்பூர், கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
பணியகம் | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு |
அறியப்படுவது | மானுடவியலாளர் |
மதுமாலா சட்டோபாத்யாயா (Madhumala Chattopadhyay) (பிறப்பு: 16 மார்ச் 1961) ஒரு இந்திய மானுடவியலாளர் ஆவார். இவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பழங்குடி மக்களின் மானுடவியலை ஆய்ந்து நிபுணத்துவம் பெற்றவர்.[2][3]1991ல், மதுமாலா சட்டோபாத்யாயும் அவரது குழுவினரும் செண்டினல் மக்களுடன் அமைதியான தொடர்பை ஏற்படுத்திய முதல் வெளிநபர் ஆவார்.[4]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]மதுமாலா சட்டோபாத்யாய் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான ஷிப்பூரில் வளர்ந்தார். இவரது தந்தை தென்கிழக்கு இரயில்வேயில் கணக்கு அதிகாரியாக இருந்தார். இவரது தாயார் ப்ரோனோட்டி சட்டோபாத்யாயா ஆவார். இவர் தனது பன்னிரண்டு வயதில் அந்தமான் தீவுகளின் பழங்குடியின மக்கள் மீது முதலில் ஆர்வம் காட்டினார்.[5]
அவர் ஷிப்பூரில் உள்ள பபானி பாலிகா வித்யாலயாவில் பட்டம் பெற்றார். பின்னர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அந்தமானின் ஆதிவாசிகளிடையே மரபணு ஆய்வு என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார். அந்தமான் தீவுகளின் பழங்குடியினர் குறித்து கள ஆய்வு செய்வதற்காக, இந்திய மானுடவியல் துறையில் முனைவர் ஆய்வுப் படிப்பிற்கு விண்ணப்பித்தார். சட்டோபாத்யாயா அந்தமான் பழங்குடியினர் பற்றிய தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[6]
களப்பணி
[தொகு]மதுமாலா சட்டோபாத்யாய் அந்தமான் தீவுகளில் களப்பணி செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன், இந்திய மானிடவியல் ஆய்வகம், அவரையும் அவரது பெற்றோரையும் தொடர்பு கொள்ளாத மக்களுடன் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்துகளை அவர்கள் அறிந்திருப்பதாகவும், சட்டோபாத்யாயா காயமடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டாலோ அரசாங்கம் பொறுப்பேற்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு கோரியது. ஆராய்ச்சி செய்யும் போது. அவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பல்வேறு பழங்குடியினரைப் பற்றி ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்தார். அவர் கடைசியாக 1999 இல் அந்தமானுக்குச் சென்றார்.[6]
சென்டினல் மக்களுடன் தொடர்பு
[தொகு]4 சனவரி 1991 அன்று, அந்தமானின் சென்டினல் பழங்குடியினருடன் அமைதியான தொடர்பை ஏற்படுத்திய முதல் குழுவில் மதுமாலா சட்டோபாத்யாயா இருந்தார். சென்டினல் மக்களைத் தொடர்பு கொண்ட முதல் பெண் வெளிநாட்டவரும் இவரே. மதுமாலா சட்டோபாத்யாயா அந்த நேரத்தில் இந்திய மானுடவியல் ஆய்வில் ஒரு ஆராய்ச்சி கூட்டாளியாக இருந்தார். உள்ளூர் நிர்வாகத்தின் கப்பலான எம்வி தர்முகிலியின் ஆதரவுடன் அவர் வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்றார். அவர் 13 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகித்தார்.
இக்குழு ஒரு சிறிய கப்பலில் வடக்கு சென்டினல் தீவை நோக்கிச் சென்று, தேங்காய்களை பரிசாக தண்ணீரில் இறக்கி சென்டினல் மக்களுடன் தொடர்பைத் துவக்கினார். வில், அம்புகள் ஏந்திய சென்டினல் மக்கள் சிலர் தேங்காய் சேகரிக்க தண்ணீருக்குள் வந்தனர். அணியில் தேங்காய் தீர்ந்து போகும் வரை இது மீண்டும் தொடர்ந்தது. அந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் வழங்குவதற்காக பிரதான கப்பலுக்குத் திரும்பினர். இரண்டாவது முறையாக சென்டினல் தீவை நோக்கி செல்கையில் ஒரு சென்டினல் பழங்குடி இளைஞன் மதுமாலா சட்டோபாத்யாயாவை நோக்கி அம்பு வீசினான். அப்போது ஒரு சென்டினல் பழங்குடிப் பெண் அவனது வில் மற்றும் அம்பை கீழே இறக்கினாள். இந்தத் தாக்குதலில் இருந்து சட்டோபாத்யாயா குழு பின்வாங்கியது. குழு மூன்றாவது முறையாக சென்டினல் தீவிற்கு திரும்பியபோது, மதுமாலா சட்டோபாத்யாயும் சக ஊழியர்களும் படகின் அருகே உள்ள தண்ணீரில் குதித்து, தீவுவாசிகளிடம் தேங்காய்களை நேரில் கொடுத்தனர். படக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தேங்காய்களை தீவுவாசிகளுக்கு வழங்குவதை புகைப்படம் எடுத்தார். அவை செய்தித்தாட்களில் பரவலாக பரப்பப்பட்டன.
அதே ஆண்டு பிப்ரவரி 21 அன்று, ஒரு பெரிய குழு பழங்குடியினருடன் மற்றொரு வெற்றிகரமான தொடர்புக்கு வந்தது. சில சென்டினல் மக்கள் அவர்கள் நெருங்கி வருவதைக் கண்டு, வில், அம்புகள் ஏதும் இன்றி நிராயுதபாணியாக, அணியைச் சந்திக்கச் சென்றனர். சென்டினல் மக்களில் சிலர் இந்திய மானுடவியல் துறையின் கப்பலில் ஏறி தேங்காய்களை எடுத்துச் சென்றனர்.
வடக்கு சென்டினல் தீவுக்கு வெளியாட்கள் அடிக்கடி வருகை தருவதால், பழங்குடியினர் நோய் தாக்கும் வாய்ப்பைக் காரணம் காட்டி, இந்திய அரசு பின்னர் எந்த ஒரு பயணத்தையும் தடை செய்தது.
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நேஷனல் ஜியோகிராஃபிக் உடனான நேர்காணலில், மதுமாலா சட்டோபாத்யாயா, சென்டினல் மக்களுடன் தொடர்புகொள்ளும் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார். "பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாக தீவுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்கிறார்கள், அவர்கள் வெளியாட்களுடன் தொடர்பு கொண்ட பிறகு அவர்களின் பிரச்சனைகள் தொடங்கியது ... தீவுகளின் பழங்குடியினர் அவர்களை பாதுகாக்க வெளியாட்கள் தேவையில்லை. அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களே அறிவர். [7]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது அந்தமான் தீவுகளின் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றும், அதே தவறை இந்தியர்கள் செய்யக்கூடாது என்றும், சென்டினல் மக்களை பெரிய உலகத்தில் இணைத்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.
1991 இல், மதுமாலா சட்டோபாத்யாயா அந்தமானின் ஓன்கே பழங்குடியினரைத் தொடர்பு கொண்ட குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.[8]இந்திய அரசாங்கம் ஓன்கே பழங்குடியினருடன் நட்புறவை ஏற்படுத்தியது.
பிற்கால வாழ்க்கை
[தொகு]2015ஆம் ஆண்டு முதல் மதுமால சட்டோபாத்தியாயா இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் பணிபுரிந்து வருகிறார்.[9]
இந்திய அரசின் ஆணையை மீறி, சட்டவிரோதமாக சென்டினல் மக்களுக்கு கிறித்துவம் பற்றிய நற்செய்தி வழங்க வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்க கிறித்துவ மிசனரியைச் சேர்ந்த வெளிநாட்டவரான ஜான் சௌலான் என்பவரை சென்டினல் மக்கள் அம்பு, விற்களால் தாக்கிக் கொன்றனர். கிறித்துவ மிஷனரிகளின் இத்தகைய வேலைகளை மதுமாலா சட்டோபாத்தியாயா கடுமையாகக் கண்டித்தார்.[9]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Debayan Tewari (December 4, 2018). "When the Sentinelese shun bows and arrows to welcome outsiders". The Economic Times. Gale OneFile: Bennett, Coleman & Co. Ltd..
- ↑ "Meet Madhumala Chattopadhyay, First Indian Anthropologist Woman Who Had a Friendly Encounter With Sentinelese Tribe of Andaman". பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.
- ↑ Sudipto Sengupta (2018). "Madhumala Chattopadhyay, the woman who made the Sentinelese put their arrows down". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.
- ↑ "The woman who made 'friendly contact' with Andaman's Sentinelese". News Point. Gale OneFile. December 4, 2018.
- ↑ Boishakhi Dutt (January 3, 2019). "Friends with tribe, a childhood wish". The Telegraph [Kolkata]. Gale OneFile.
- ↑ Dhamini Ratnam (December 4, 2018). "The woman who made friendly contact with Andaman's Sentinelese". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-04.
- ↑ Likhitha Chintareddy (December 2, 2018). "Death of American missionary sparks controversy". UWIRE Text. Gale OneFile: ULOOP Inc.
- ↑ Fehmida Zakeer (December 7, 2018). "Meet the first woman to contact one of the world's most isolated tribes". National Geographic. Archived from the original on ஏப்ரல் 10, 2020. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 31, 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ 9.0 9.1 Madhumala Chattopadhyay (2018). "What's Christianity to those who pray to sky & sea, says first woman to contact Sentinelese". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 30 November 2018.