உள்ளடக்கத்துக்குச் செல்

மண் பானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருக்கியில் ஒருவர் பானை செய்யும் காட்சி.
இந்தியா ஒருவர் பானை செய்யும் காட்சி.

மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர் என்று அழைப்பர்.

பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஓர் அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.

மண்வாசம் வீசும் மண்சட்டி

பானை செய்முறை :

[தொகு]

இதில் பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி, உப்பு, கடுக்காய், வண்ண பவுடர்கள் (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள வண்டிச்சக்கரத்தின் நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்வார்கள் .

பானை வகைகள்

[தொகு]

நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.

 1. அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
 2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
 3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
 4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
 5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
 6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
 7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
 8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
 9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
 10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
 11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
 12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
 13. ஓதப் பானை - ஈரப் பானை
 14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
 15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
 16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
 17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
 18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
 19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
 20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
 21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
 22. கரிப்பானை - கரி பிடித்த பானை
 23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
 24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
 25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
 26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
 27. காடிப் பானை - கழுநீர்ப் பானை
 28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
 29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
 30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
 31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
 32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
 33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை
 34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
 35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
 36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
 37. சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
 38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
 39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
 40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
 41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
 42. சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
 43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
 44. சின்ன பானை - சிறிய பானை
 45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
 46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
 47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
 48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
 49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
 50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
 51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
 52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
 53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
 54. படரப்பானை - அகற்ற - பெரிய பானை
 55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
 56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
 57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
 58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
 59. மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
 60. மிண்டப் பானை - பெரிய பானை
 61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
 62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]
 63. முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
 64. முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
 65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
 66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
 67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
 68. வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
 69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை[2]
 • தமிழ் விக்சனரியின் இப்பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட பானைகளைக் கண்டறியலாம்.

பானைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 3406 - 4
 2. பேராசிரியர் ப. அருளி, நம் மண் கலங்கள், நற்றமிழ் இதழ் - நளி 2039
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_பானை&oldid=3932860" இலிருந்து மீள்விக்கப்பட்டது