மணியம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈ. வெ. இரா. மணியம்மை
220px
வேறு பெயர்(கள்): காந்திமதி
அரசியல்மணி
பிறப்பு: மார்ச்சு 10, 1920(1920-03-10)

[1]

பிறந்த இடம்: வேலூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: மார்ச்சு 16, 1978(1978-03-16) (அகவை 61)
இறந்த இடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இயக்கம்: சுயமரியாதை இயக்கம்
முக்கிய அமைப்புகள்: திராவிடர் கழகம்
மதம்: இறை மறுப்பாளர்
Influences ஈ. வெ. இராமசாமி

மணியம்மை (Maniammai, 10 மார்ச் 1920[2] - 16 மார்ச் 1978) என அறியப்பட்ட அரசியல்மணி, திராவிடர் கழகத்தின் தலைவராக பதவி வகித்தவர்களுள் ஒருவராவார். இவர் ஈ. வெ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தவர்.

இளமைக் காலம்[தொகு]

மணியம்மை, வேலூரில் வாழ்ந்த சுயமரியாதை இயக்கத் தொண்டரான கனகசபை என்பவருக்கும் பத்மாவதி என்பவருக்கும் 1917ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10 ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி என்பதாகும்.[3] அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணல்தங்கோ, இவருக்கு அரசியல்மணி எனப் பெயர்சூட்டினார்.[4] அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.

ஈ. வெ. இரா.வின் தொண்டர்[தொகு]

ஈ. வெ. இரா, “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என வேலூர் கனகசபைக்கு 1943 ஆம் ஆண்டில் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த கனகசபை தனக்கு மகளான அரசியல்மணியை அழைத்துவந்து, “இந்தப் பெண் உங்கள்கூட இருந்து, உங்களைப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறி விட்டுச்சென்றார்.[5] அதன் பின்னர், பெரியார்தம் அணுக்கத் தொண்டராக இருந்து அவருக்குத் தேவையான உதவிகளை அரசியல்மணி செய்து வந்தார். அப்பொழுதிலிருந்து திராவிடர் கழகத்தினர் அவரை மணியம்மை என அழைக்கத் தொடங்கினார்.

அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது. ஆனால் அவர், ஈ. வெ. இரா.வின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார். ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார். ஈ. வெ. இரா. உடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த ஈ. வெ. இரா. தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது.[6] இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று 1949செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர். இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.

சொற்பொழிவாளர்[தொகு]

படிமம்:Maniammai book2.jpg
மணியம்மையார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு

1944ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தன்னுடைய முதற் சொற்பொழிவை நிகழ்த்தினார்.[7] அதன் பின்னர் தன்னுடைய இறுதிக்காலம் வரை சுயமரியாதை மாநாடு, திராவிடர் கழக மாநாடு, திராவிட மகளிர் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சொற்பொழிவுகளில் சில, அம்மா பேசுகிறார் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.

எழுத்தாளர்[தொகு]

படிமம்:Maniammai book1.jpg
மணியம்மையார் எழுதிய நூல்

தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்ற மணியம்மையார் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். 1944 ஆம் ஆண்டில் குடியரசு இதழில் இரண்டும் ஒன்றே என்னும் தலைப்பில் கந்தபுராணத்தையும் இராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்து கட்டுரை எழுதினார்.[7] இது தவிர திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதினார். அவை குடியரசு, விடுதலை, உண்மை ஆகிய இதழ்களில் வெளிவந்தன.

மேலும் ஈ. வெ. இரா.வின் மேடைப்பேச்சுகளைக் குறிப்பெடுத்து கட்டுரைகளாக ஆக்கித் திராவிடர் கழக இதழ்களில் வெளியிட்டார். நூல்களாக அச்சிட்டுப் பரப்பினார்.[6]

களப்பணியும் சிறைவாழ்வும்[தொகு]

ஈ. வெ. இரா.வின் அணுக்கத் தொண்டராகவும் மனைவியாகவும் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் சென்ற மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொள்வதோடு களப்பணியிலும் ஈடுபட்டார்.

1948ஆம் ஆண்டில் குடந்தையில் அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டு மூன்று திங்கள் சிறையில் இருந்தார்.[7]

1949ஆம் ஆண்டில் நடந்த இராண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார்.[7]

“இளந்தமிழா புறப்படு போருக்கு” என்னும் கட்டுரை 1958- சனவரி 19ஆம் நாள் விடுதலை இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையை வெளியிட்டதற்காக, அவ்விதழின் பதிப்பாளரான மணியம்மையார் கைது செய்யப்பட்டு ஒரு திங்கள் காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.[8]

1974ஏப்ரல் 4ஆம் நாள் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த கிளர்ச்சிக்கு மணியம்மையார் தலைமை தாங்கினார்.[9]

தில்லியில் இராமலீலை நடத்தி இராவணன் உருவத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தியும் கலந்துகொள்ளக் கூடாதென 1974அக்டோபர் 26ஆம் நாள் மணியம்மையார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனைக் கண்டிக்கும் வகையில் 1974 – திசம்பர் – 25ஆம் நாள் சென்னையில் இராவணன் லீலை திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. மணியம்மையார் அக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தார். இராமன், சீதை, இலக்குவன் உருவங்களை அவர் தீயிட்டுக் கொளுத்தினார்.[10]

1976சனவரி – 31ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் பொழுது மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[11]

1977அக்டோபர் 30ஆம் நாள் சென்னைக்கு வருகை தந்த அன்றைய இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[12]

படிமம்:Maniammai and periyar.jpg
பெரியாரும் மணியம்மையாரும் காப்பகக் குழந்தைகளுடன்

நிர்வாகி[தொகு]

ஈ. வெ. இரா வாழ்ந்த காலத்தில் அவர் திருச்சி நகரில் உருவாக்கிய கல்வி நிறுவனங்களையும் குழந்தைகள் காப்பகத்தையும் மணியம்மையார் திறம்பட நிர்வகித்தார்.[13]

ஈ. வெ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கட்டுக்கோப்பு சிதைந்துவிடாமல் அதனைக் காத்தார். மேலும் அவ்வியக்கத்தின் துணை அமைப்புகளையும் திறம்பட நிர்வகித்தார்.

மறைவு[தொகு]

1974 ஆம் ஆண்டிலிருந்த உடல்நலம் குன்றியிருந்த மணியம்மையார், 1978மார்ச் 3 ஆம் நாள் மரணமடைந்தார்.[12]

சான்றடைவு[தொகு]

 1. "விடுதலை (மணியம்மையார் -தலைநிமிர்ந்த தமிழச்சிகள்)".
 2. "விடுதலை (மணியம்மையார் -தலைநிமிர்ந்த தமிழச்சிகள்)".
 3. "மணியம்மையின் இயற்பெயர்".
 4. இறையன், அ, பக். 152
 5. இறையன், அ, பக். 6
 6. 6.0 6.1 இறையன், அ, பக். 7
 7. 7.0 7.1 7.2 7.3 இறையன், அ, பக். 8
 8. இறையன், அ, பக். 9-10
 9. இறையன், அ, பக். 11
 10. இறையன், அ, பக். 11-12
 11. இறையன், அ, பக். 12
 12. 12.0 12.1 இறையன், அ, பக். 13
 13. இறையன், அ, பக். 10

வெளி இணைப்புகள்[தொகு]

மணிம்மையார் : ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - முழுமதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணியம்மை&oldid=3037928" இருந்து மீள்விக்கப்பட்டது