மணவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணவூர் (Manavur) என்பது சென்னையிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் மத்திய-அரக்கோணம் இரயில் பாதையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுக் கிராமமாகும். இந்த கிராமம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது. பழைமையான தொண்டை மண்டலத்தை 24 பிரிவுகளாகப் பிரித்து குரும்பர்கள் என்பவர்கள் ஆட்சி செய்தனர் என்பதை வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. அவற்றில் மணவூர் 4 வது பிரிவாகும்.

1200 ஆண்டுகள் பழமையான திருநந்தீசுவரர், கர்கடகேசுவரர், கந்தசாமி மற்றும் விநாயகர் போன்ற இந்துக்கடவுள்களின் கோயில்கள் இந்த சிறிய கிராமத்தில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களின் கருவறைகளில் காணப்படும் பல கல்வெட்டுகளும், சிற்பங்களும் மற்றும் கட்டடக்கலை வடிவமைப்பும் வழக்கமான சோழர் கால கட்டுமானத்தை சித்தரிக்கின்றன.

சிறீ ஆனந்தவள்ளி சமேதா திருநந்தீசுவரர் கோயில்[தொகு]

இந்த கோவில் திருநந்தீசுவரரை மூலவராகக் கொண்டுள்ளது. இதன் வடக்குப் பகுதியில், ஆனந்தவள்ளி தாயார் கோயில் உள்ளது. வெளிப்புற பிரகாரத்தில் பிள்ளையார், முருகன் மற்றும் பைரவர் ஆகிய தெய்வங்கள் சேத்திரபாலகராக அமர்ந்துள்ள்னர். கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்), இலிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

திருவாலங்காட்டில் சிவன் தனது நடனத்திற்குப் பின்னர் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு தனது துணைவியார் ஆனந்தவள்ளியுடன் தரிசனம் அளித்ததாகக் கூறப்படுகிறது. எனவே இந்த கிராமம் மணவூர் என்று அறியப்பட்டது. நந்தி பகவான் மற்றும் முனிவர் அகத்தியர் ஆகியோர் இங்கு வழிபட்டு வந்துள்ளனர். கூவம் மற்றும் தக்கோலம் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் இந்த கோயிலின் மகிமையைப் பற்றி பேசுகின்றன. மணவூரில் உள்ள கோயில்கள் ஆகம சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சரியான சீரமைப்புடன் கட்டப்பட்டுள்ளன.

கோயிலின் தற்போதைய நிலை[தொகு]

திருநந்தீசுவரர் கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. தற்போது அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அசல் மகிமையை மீட்டெடுப்பதற்கும் வீழ்ச்சியடைந்த கம்பீரத்தை நிலைநிறுத்துவதற்கும் ஒரு முயற்சியாக உள்ளூர் கிராமவாசிகள் ஊதியமின்றி உழைத்து இந்த வரலாற்று கோயிலின் ஒரு பகுதியை மீட்டெடுத்தனர். இருப்பினும், குறிப்பிட்ட நிபுணத்துவம் தேவைப்படும் பிற பணிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணவூர்&oldid=3885796" இலிருந்து மீள்விக்கப்பட்டது