மணலூர் மணியம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணலூர் மணியம்மை என்பவர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சாதித் தீண்டாமை எதிர்ப்பாளர், பெண்ணியலாளர், வர்க்கப் போராட்டக்காரர் எனப் பன்முகம் கொண்டவர்.

வாழ்க்கை[தொகு]

மணலூர் மணியம்மை ஒரு பிராமணக் குடும்பத்திலே பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வாளாம்பாள். இவர் தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். குடும்பச் சூழலால் தன்னை விடவும் 20 வயது மூத்த, ஒரு நாகப்பட்டிணம் வழக்கறிஞருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். திருமணமான 10 ஆண்டுகளிலேயே கணவனை இழந்து தாய்வீடு வந்து சேர்ந்தார்.

பொதுவாழ்வில்[தொகு]

இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை காந்தி தஞ்சைக்கு வந்த போது அவரைச் சந்தித்து காங்கிரசில் இணைந்தார். மாகாணக் கமிட்டி உறுப்பினர் பதவிவரை உயர்ந்த அவர், பண்ணை அடிமை முறையை எதிர்த்து தனது சொந்தப் பகுதியில் போராட்டம் நடத்தினார். தனது சொந்தப் பண்ணையிலேயே சாதி அடிமைத் தனத்தை எதிர்த்துப் போரட்டம் நடத்தியதால் அவர் பண்ணையில் இருந்த சொந்தக் குடும்பத்தினரால் தள்ளி வைக்கப் பட்டார். காலவோட்டத்தில் அல்லது காந்திக்கு பிறகு பண்ணையார்களுக்கே காங்கிரசில் பெரு மதிப்பு என்று உணர்ந்து கொண்டார். ஜனசக்தி இதழ் மூலம் பொதுவுடைமை கொள்கைகளின் பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை, காங்கிரசில் இருந்து விலகி முழுநேர கம்யூனிஸ்ட் ஆனார். சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற முன்னோடி கம்யூனிஸ்டுகள் மூலம் தனது அரசியல் அறிவை வளர்த்துக் கொண்ட இவர், செல்வாக்கு மிகுந்த தலைவராக உயர்ந்தார். இவரின் பண்ணை அடிமைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணி திரட்டலாலும் பாதிக்கப்பட்டர்கள் ஆத்திரமடைந்து இவரைக் கொல்ல முயன்று, கொடும் தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பினார். பெண்மையின் உடை, கூந்தல் போன்ற பல்வேறு குறியீட்டு அம்சங்களைத் துறந்து தனது கூந்தலை வெட்டிக் கொண்டு, ஆண்களைப் போல் வேட்டி சிப்பா அணிந்து கொண்டார்.[1] மேலும் தற்பாதுகாப்புக்கென சிலம்பமும் கற்றுத் தேர்ந்தார். வேட்டி சட்டையோடு துணிச்சலாகத் தனி ஒருவராகவே தஞ்சைப் பகுதியெங்கும் சென்று விவசாய இயக்கங்களைக் கட்டி வளர்த்து, எண்ணிலடங்கா விவசாயப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1953 ஆம் ஆண்டு மான் முட்டி இறந்தார்.[2]

பரவலர் பண்பாட்டில்[தொகு]

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மணியம்மையின் வரலாறு தொடர்பாக "பாதையில் பதிந்த அடிகளில்" என்ற பெயரில் புதினமாக எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மணலூர் மணியம்மாள்". தினமணி (2014 ஆகத்து 3). பார்த்த நாள் 3 சூன் 2016.
  2. பாவெல் இன்பன் (2016 மே 27). "மணலூர் மணியம்மாள்". கீற்று. பார்த்த நாள் 3 சூன் 2016.
  3. கே. பாரதி (2014 அக்டோபர் 26). "லட்சிய வாழ்வின் முகம்". தி இந்து (தமிழ் ). பார்த்த நாள் 3 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலூர்_மணியம்மாள்&oldid=2734869" இருந்து மீள்விக்கப்பட்டது