மட்டக்களப்பு மறைமாவட்டம்
மட்டக்களப்பு மறைமாவட்டம் Dioecesis Batticaloaensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இலங்கை |
மாநிலம் | கொழும்பு |
பெருநகரம் | கொழும்பு |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 7,269 km2 (2,807 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | 1,199,966 55,225 (4.6%) |
பங்குதளங்கள் | 24 |
விவரம் | |
திருச்சபை | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் வழிபாட்டு முறை |
உருவாக்கம் | 23 செப்டம்பர் 2012 |
கதீட்ரல் | புளியந்தீவு புனித மரியாள் தேவாலயம், மட்டக்களப்பு |
பாதுகாவலர் | அன்னை மரியா |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் | யோசப் பொன்னையா |
பேராயர் † | கர்தினால் மால்கம் ரஞ்சித், கொழும்பு பேராயர் |
மட்டக்களப்பு மறைமாவட்டம் (Diocese of Batticaloa, இலத்தீன்: Dioecesis Batticaloaensis) என்பது இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இம்மறைமாவட்டத்தின் ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி யோசப்பு பொன்னையா ஆவார்.
வரலாறு
[தொகு]மட்டக்களப்பு மறைமாவட்டம் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களினால் 2012 சூலை 3 ஆம் நாள் இலங்கையின் புதிய மறைமாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. முன்னர் இம்மாவட்டம் திருகோணமலை மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. திருகோணமலை மறைமாவட்டம் 1893 ஆகத்து 25 இல் உருவாக்கப்பட்டது.[1]
ஆயர் இக்னேசியசு கிளெனி திருகோணமலை மறைமாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இதன்படி, 1967 அக்டோபர் 23 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் என இது பெயரிடப்பட்டது.[1] அத்துடன் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயம் இணைப்பேராலயமாகவும் தரமுயர்த்தப்பட்டது. 1975 திசம்பர் 19 இல் திருகோணமாலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட அநுராதபுரம் மறைமாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.[1]
2005 ஆம் ஆண்டில் இம்மறைமாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் படி, 2012 சூலை 3 ஆம் திகதி வத்திக்கான் நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணி) திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு பிரித்தெடுக்கப்பட்டு தனியான மறைமாவட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. மட்டக்களப்பு புனித மரியாள் ஆலயம் பேராலயமாகும் தகுதியினையும் பெற்றது.[2] மட்டக்களப்பு-திருகோணமலை மறைமாவட்ட துணை ஆயராகப் பதவியில் இருந்த யோசப் பொன்னையா மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக 2012 செப்டம்பர் 23 ஆம் நாள் பதவியேற்றார்.
மட்டக்களப்பு புதிய மறைமாவட்டமாக உருவானதால், திருகோணமலை தனி மறைமாவட்டமாக இயங்கத் தொடங்கியுள்ளது. இதுவரை திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை புதிய திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆயராக நீடிக்கின்றார்.
புள்ளி விவரங்கள்
[தொகு]புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மறைமாவட்டம் இரு மாவட்டங்களை உள்ளடக்கும். அவை மட்டக்களப்பு, அம்பாறை ஆகும். இம்மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருக்கள் 35 பேரும், துறவற குருக்கள் 13 பேரும் ஆக, மொத்தம் 48 குருக்கள் பணியாற்றுகின்றனர்.
ஆயர்கள்
[தொகு]# | ஆயர் | தொடக்கம் | முடிவு |
---|---|---|---|
1வது | யோசப் பொன்னையா | 3 சூலை 2012 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Diocese of Trincomalee-Batticaloa". GCatholic.
- ↑ இன்று புதிய மறைமாவட்டமாகும் மட்டக்களப்பு[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 23, 2012.
தொடர்பான செய்திகள் உள்ளது.