மட்சுவோ பாஷோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்சுவோ பாசோ
18 ஆம் நூற்றாண்டில் ஒக்குசாயால் வரையப்பட்ட பாசோ உருவப்படம்.
18 ஆம் நூற்றாண்டில் ஒக்குசாயால் வரையப்பட்ட பாசோ உருவப்படம்.
பிறப்புமட்சுவோ கின்சாகு
1644
Near Ueno, Iga Province
இறப்புநவம்பர் 28, 1694 (வயது 50)
ஒசாகா[1]
புனைபெயர்சோபோ (宗房)
டோசு (桃青)
பாசோ (芭蕉)
தொழில்கவிஞர்
தேசியம்சப்பானியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒக்கு நோ ஒசொமிச்சி

மட்சுவோ பாசோ (Matsuo Basho) 1644 முதல் 1694 வரையிலான ஆண்டுகளில் சப்பானிய எடோ காலப்பகுதியில் வாழ்ந்த மிக பிரபலமான கவிஞர் ஆவார். பின்னர் இவர் மட்சுவோ சுய்மான் முனிபியூசா என்ற பெயராலும் அழைக்கப்பட்டார். அவரது வாழ்நாளில் ரெங்கு அல்லது ஐகை நோ ரெங்கா என்ற பிரபலமான கூட்டு முயற்சி வகைப் பாடல்கள் படைத்ததற்காக பாசோ அங்கீகாரம் பெற்றார். தற்போது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாசோ ஐக்கூ கவிதைகளின் மிகப்பெரிய ஆசான் என அங்கீகரிக்கப்படுகிறார். ஐக்கூ கவிதைகள் ஒக்கூ என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. மட்சுவோ பாசோவின் கவிதைகள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கவிதைகளாகும். சப்பானில், அவரது பல கவிதைகள் நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய தளங்களில் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. பாசோ தனது ஐக்கூ கவிதகளுக்காக மேற்குலகப் பகுதிகளில் பிரபலமடைந்தார் என்றாலும், ரெங்கு வடிவில் கூட்டுமுயற்சிக் கவிதைகள் எழுதுவதில் பங்கேற்றதும், அதில் முன்னணி வகித்ததுமே தனது சிறந்த பணியாக இருக்குமென்று பாசோ நம்பினார். என்னைப் பின்பற்றுபவர்கள் எல்லோரும் என்னால் எழுதமுடிவது போலவே அவர்களாலும் ஐக்கூவை எழுத முடியும். ஆனால் ரெங்கு வகை கூட்டுமுயற்சியில் கவிதைகளை இணைப்பதில்தான் உண்மையாக நான் யார் என்பதைக் காட்டுகிறேன் என்று பாசோ தன்னுடைய ரெங்கு கவிதைகளின் சிறப்பை மேற்கோள் காட்டுகிறார் [2].

பாசோவிற்கு இளம் வயதிலேயே கவிதைத் துறையுடன் அறிமுகம் ஏற்பட்டது. எடோவின் அறிவுசார் சமூகத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட பாசோ விரைவிலேயே சப்பான் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட ஒருவரானார். இவர் ஒரு ஆசிரியராகத் தொழில் புரிந்தார். எனினும், இலக்கியத் துறையினரின் சமூக, நகர்சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளினார். ஐக்கூ கவிதைகளை எழுதுவதற்கான ஒரு அகத்தூண்டலை எதிர்நோக்கி மேற்கு, கிழக்கு, வடக்கு என நாட்டின் பலபகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அவர் பெற்ற நேரடி அனுபவங்கள் யாவும் அவரது கவிதைகளில் செல்வாக்குச் செலுத்தின. தான் கண்ட காட்சிகளின் உணர்வுகளைக் கவிதைகளில் எளிமையான கூறுகளாக அடக்கினார்.

இளமைப்பருவம்[தொகு]

ஈக்கா மாகாணத்தில் பாசோவின் பிறப்பிடம்

பாசோ 1644 ஆம் ஆண்டில் ஈக்கா மாகாணத்தில் உள்ள யுவேனோ என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ள ஓரிடத்தில் பிறந்தார்[3]. பாசோவின் தந்தையார் இராணுவத்தில் ஒரு கீழ் மட்ட படைவீரராக பணிபுரிந்தார். இதனால் பாசோவிற்கு படைத்துறையில் ஒரு வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. எனினும் இவ்வேலையில் அவருடைய தனித்துவத்தை சிறப்பிப்பதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு ஏதுமில்லை. இவர் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதியவர்கள் பாசோ சமையல்கூடத்தில் பணி புரிந்ததாகக் கூறுகின்றனர் [4]. எனினும், சிறுவனாக இருந்தபோது பாசோ டோடோ யோசித்தாடா என்பவருக்கு வேலையாளாகப் பணிபுரிந்தார். யோசித்தாடாவும் பாசோவைப் போலவே கூட்டு முயற்சியில் எழுதப்படும் ஒருவகைக் கவிதையான ஐகை நோ ரெங்கா வடிவக் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் [5]. 5-7-5 அசைகள் கொண்ட வடிவத்தில் வசனத் தொடர்களை எழுதக்கூடிய ஒரு புதிய மூன்று வரிக் கவிதை வடிவத்தின் வாசல் திறக்கப்பட்டது. இவ்வடிவத்திற்கு முதலில் ஒக்கூ எனப் பெயரிட்டனர். பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் இதை ஒரு தனித்தப் படைப்பாகக் கருதி ஐக்கூ எனப் புதியதாக ஒரு பெயரை இட்டனர். குறைந்த பட்சம் 7-7 அசைகளால் ஆன மோரா வடிவத்தில் வேறொரு கவிஞர் ஐக்கூவைத் தொடர்ந்து மேலும் அக்கவிதையை வளர்க்க முடியும். பாசோவும் யோசித்தாடாவும் தங்களுக்கு புனைபெயர்களை வைத்துக் கொண்டனர். பாசோ சோபோ என்றும் முனிபியுசா என்றும் புனைப் பெயர்கள் வைத்துக் கொண்டார். 1662 ஆம் ஆண்டில் பாசோவின் முதல் கவிதை வெளியிடப்பட்டது. 1664 இல் இவரது ஒக்கூ கவிதைகள் இரண்டு ஒரு கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றன.

1665 ஆம் ஆண்டில், பாசொவும் யோசித்தாடாவும் வேறு சில நண்பர்களுடன் இணைந்து 100 பாடல்களைக் கொண்ட ரெங்கு கவிதை நூலை உருவாக்கினர். 1666- ஆம் ஆண்டு யோசித்தாடாவின் திடீர் மரணம் பாசோவின் நிம்மதியான வேலைக்கார பணியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த காலகட்டத்தைப் பற்றிய எந்த பதிவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் பாசோ எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு படைவீரர் என்ற தகுதியை விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பவில்லை [6]. பாசோவிற்கும் சிண்டோ மைகோவிற்கும் இடையே தொடர்பு இருந்தது என்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்பது உட்பட பல காரணங்களையும் இடங்களையும் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர், இது உண்மையாக இருக்க முடியாது [7]. இந்த காலகட்டத்தைக் குறித்த பாசோவின் சொந்த குறிப்புகள் தெளிவற்றவையாக உள்ளன. ஓரிரு நாட்கள் ஓர் அதிகாரியிடம் நான் ஒரு நிலப்பகுதியில் பனியாற்றினேன் என்றும், ஓரினச்சேர்க்கை வழிகள் எனக்கு ஆச்சரியமாக இருந்தன என்றும் அவர் நினைவு கூர்கிறார். இவர் உண்மையான கவலையைக் குறிப்பிடுகிறாரா அல்லது கற்பனையானவற்றைக் கூறுகிறாரா என்பதை உறுதிபடுத்தமுடியவில்லை [8]. ஒரு முழுநேர கவிஞனாக ஆக முடியுமா என்பது தெரியவில்லை; மாற்று எண்ணங்கள் என் மனதில் சண்டையிட்டு என் வாழ்க்கையை அமைதியற்றதாக ஆக்கிவிட்டன என்று அவரே தன் வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார் [9]. தீவிரமான கலை முயற்சிகளைக் காட்டிலும் அதிகமான சமூக நடவடிக்கைகள் ரெங்கா வடிவக் கவிதைகளில் இருந்ததால், இவர் உள்ளத்தில் ரெங்காவிற்கு தகுதிக் குறைவான நிலைப்பாடு தோன்றுவதற்கும் தீவிரமான ஈடுபாடு இல்லாமைக்கும் காரணமாக இருந்திருக்கலாம் [10]. இருப்பினும் 1667, 1669 மற்றும் 1671 ஆம் ஆண்டுகளில் அவரது கவிதைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. 1672 இல் மேலும் அவர் தன்னுடைய முயற்சியில் ஒரு தொகுப்பை வெளியிட்டார் [3]. இதேபோல தியோட்டோ பள்ளி, தி சீசெல் கேம் போன்ற பள்ளிகளின் படைப்பாளிகளின் கவிதைகளையும் தொகுத்து வெளியிட்டார். அந்த ஆண்டின் வசந்தகாலத்தில் மேலும் கவிதைகளை பற்றி ஆய்வு செய்வதற்காக அவர் எடோவுக்கு சென்றார் [11].

புகழ்[தொகு]

ஓர் இலையுதிர்கால நிலவுத் திருவிழாவில் பாசோ இரண்டு விவசாயிகளைச் சந்திக்கிறார்-படம்:யோசிட்டோசி

நிகோன்பாசியின் நாகரீக இலக்கிய வட்டாரங்களில், பாசோவின் கவிதைகள் அவற்றின் எளிமை மற்றும் இயல்பான பாணி முதலிய சிறப்புகளால் விரைவாக அங்கீகரிக்கப்பட்டது. 1674 ஆம் ஆண்டில் அவர் தொழில்முறை ஐகய் கவிஞர்களின் உள் வட்டத்தில் இணைந்தார், கிடாமுரா கிகினிடம் (1624-1705) ஐகய் குறித்த இரகசிய போதனைகளைப் பெற்றார். இராணுவ தளபதி சோகனுக்காக போலி பக்தியுடன் ஐக்கூ எழுதினார் [12].

டச்சுக்காரர்களும் கூட
அவரது ஆட்சியின் முன் மண்டியிடுகிறார்கள்
அவரது ஆட்சியின் கீழ் வசந்தகாலம் [1678]

டானிரின் ஐகை பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவரான நிசியாமா சோயின்1675 ஆம் ஆண்டில் ஒசாகாவிலிருந்து எடோவிற்கு வந்தபோது அவருடன் இணைவதற்காக அழைக்கப்பட்ட கவிஞர்களில் ஒருவராக பாசோவும் இருந்தார் [13]. 1680 ஆம் ஆண்டில் பாசோ இருபது சீடர்களுக்குப் போதிக்கும் முழுநேர பணியைப் பெற்றார். இவர் டோசியின் இருபது சீடர்களின் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். டோசியின் திறமைக்கு அவர்களை தொடர்புபடுத்தி விளம்பரம் செய்தார். அந்த குளிர்காலத்தில் பியுகாகாவா ஆற்றைக் கடந்து, பொதுமக்களிடமிருந்து வெளியேறவும், தனிமையான வாழ்க்கையை நோக்கி நகந்திடவும், ஆச்சரியப்படத்தக்க நடவடிக்கையை எடுத்தார் [14]. பாசோவின் சீடர்கள் அவருக்காக பழங்கால குடிசை ஒன்றை கட்டி அதன் முற்றத்தில் ஒரு வாழை மரத்தையும் நட்டனர். இதுவே அவருடைய முதல் நிரந்தர இல்லமாகவும் ஐகோ பள்ளியாகவும் திகழ்ந்தது. அவர் வாழைமரத்தை மிகவும் போற்றி வளர்த்தார். பாராட்டினார், ஆனால் பியுகாகாவா ஆற்றுப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட மிசுகாந்தசு வகை புற்கள் அதனுடன் இணைந்து வளர்ந்தது அவருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.

என் புதிய வாழை
என் அருவருப்பின் முதல் அறிகுறி
ஒரு மிசுகாந்தசு மொட்டு [1680]

ஒருபுறம் அவரது வெற்றிகள் வளர்ந்து கொண்டிருந்தாலும் பாசோ தனிமையில் இருப்பது போன்றும் அதிருப்தி அடைந்தவராகவும் உணர்ந்தார். இதனால் சென் தியானத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார், ஆனால் அத்தியானமும் அவரது மனதை அமைதிப்படுத்தியதாகத் தெரியவில்லை [15]. 1682 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் அவரது குடிசை தீக்கிரையானது, பின்னர் விரைவிலேயே 1683 ஆம் ஆண்டில் அவரது தாயாரும் இறந்தார். பாசோ யமுராவுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு ஒரு நண்பருடன் தங்கினார். 1683 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் அவருடைய சீடர்கள் ஏடோவில் இரண்டாவது குடிசையைக் கட்டிக் கொடுத்தார்கள். ஆனால் அவரது துன்பங்கள் மேம்படவில்லை. 1684 ஆம் ஆண்டில் அவருடைய சீடரான தாகராயி கிக்காகு பாசோவின் மற்றும் பிற கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டார் [16]. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் எடோவை விட்டு நீங்கினார் [17].

பாசோ தனியாகவே எங்கும் பயணம் செய்தார், இடைக்கால சப்பானில் எடோவுக்கு இருந்த ஐந்து பாதைகளில் அதிகப் பயன்பாட்டில் இல்லாத மிகவும் ஆபத்தானதாக கருதப்பட்ட பாதையில் அவருடைய பயணம் இருந்தது. முதலாவதாக, பாசோ வெறுமனே நடுவழியில் இறந்துவிடுவார் அல்லது கொள்ளைக்காரர்களால் கொல்லப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவரது பயணம் முன்னேற்றத்துடன் தொடர்ந்தது. மனநிலையும் சிறிது சிறிதாக மேம்பாடு அடைந்தது. அபாயமான அச்சாலையே அவருக்கு வசதியான சாலையாக மாறியது. பாசோ பல நண்பர்களை சந்தித்தார். மாறிவரும் இயற்கைக்காட்சிகளையும் பருவங்களையும் மகிழ்ந்து அனுபவித்தார் [18]. அவரது கவிதைகள் குறைந்த அளவிலான உள்நோக்கும், சுற்றியுள்ள உலகத்தைக் கவனிக்கும் தொனி அதிகரித்தும் கருத்தைக் கவர்ந்தன.

பாசோவின் அந்த பயணமானது எடோவில் தொடங்கி பியூசி, யுனௌ மற்றும் கியோட்டோ வரை நீண்டு சென்றது [19]. எங்களுக்கு பாசோவின் அறிவுரைகள் தேவை, நாங்கள் பாசோவின் சீடர்கள் என்று அழைத்துக் கொள்கின்ற பல கவிஞர்களை அவர் சந்தித்தார். சமகாலத்திய எடோ பாணியையும் தன்னுடைய சொந்த சிரிவெல்டு செசுட்நட்சு வகை கவிதைகளையும் புறக்கணித்துவிடுங்கள், அவற்றில் விவாதத்திற்கு ஏற்கவியலாத பல பாடல்கள் கலந்துள்ளன என்று அவர்களிடம் கூறினார் [20]. பாசோ 1685 ஆம் ஆண்டின் கோடையில் எடோவுக்குத் திரும்பினார், மேலும் தனது சொந்த வாழ்க்கையில் அதிகமான ஒக்கூவையும் அதற்கான விளக்கவுரையை எழுதுவதற்கும் நேரத்தை செலவழித்தார்:

மற்றோர் ஆண்டு கழிந்தது
என் தலையில் பயணியின் நிழல்
என் காலடியில் வைக்கோல் செருப்புகள் [1685]

பாசோ மீண்டும் எடோவுக்குத் திரும்பினார். தனது பாசோ குடிசையில் கவிதை ஆசிரியராக மகிழ்ச்சியுடன் தனது வேலையை மீண்டும் தொடர்ந்தார், எனினும் தனிப்பட்ட முறையில் அவர் ஏற்கனவே மற்றொரு பயணத்திற்குத் திட்டமிட்டிருந்தார் [21]. வயல்வெளிகளில் மேற்கொள்ளப்பட்ட அவரது பயணத்தில் தோன்றிய கவிதைகளைத் தொகுத்து தனியாக வெளியிட்டார். 1686 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நினைவில் நிற்கும் மிகச்சிறந்த ஐக்கூவை எழுதினார்.

பழைய குளம்
தவளை குதித்தது
தண்ணீரில் பிளக்

பாசோவின் இந்த கவிதை [22] உடனடியாக உலகப் புகழ்பெற்றதாக வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். ஏப்ரல் மாதத்தில், எடோவின் கவிஞர்கள் பாசோ குடிசையில் திரண்டு வந்து தவளையை மையமாகக் கொண்ட ஐகை நோ ரெங்கா கவிதைப் போட்டியை நடத்தினர். பாசோவின் தவளைக் கவிதையை உச்சியில் முதல் கவிதையாக வைத்து அத்தொகுப்பைத் தொகுத்தனர் [23].

பாசோ தொடர்ந்து எடொவில் தங்கியிருந்து கவிதைகளைக் கற்பித்தார். கவிதைப் போட்டிகளை நடத்தினார். நிலவை இரசிப்பதற்காக கிராமங்களை நோக்கி 1687 இல் ஒரு பயணம் மேற்கொண்டார். சந்திர ஆண்டைக் கொண்டாடுவதற்காக யுனோவிற்கு ஒரு நீண்ட பயணத்தையும் மேற்கொண்டார். எடோ வீட்டில் இருந்தபோது பாசோ சிலசமயங்களில் இயல்பற்று இருந்தார். பார்வையாளர்களை நிராகரித்தார். அவர்களைப் பாராட்டினார். அதே சமயத்தில் அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். நகைச்சுவை உணர்வு அவருடைய ஐக்கூக்களில் பிரதிபலித்தது [24]:

மேற்கோள்கள்[தொகு]

 1. Louis Frédéric, Japan Encyclopedia, Harvard University Press, 2002, p. 71.
 2. Drake, Chris. 'Bashō’s “Cricket Sequence” as English Literature', in Journal of Renga & Renku, Issue 2, 2012. p7
 3. 3.0 3.1 Kokusai 1948, p. 246
 4. Carter 1997, p. 62
 5. Ueda 1982, p.20
 6. Ueda 1982, p. 21.
 7. Okamura 1956
 8. Ueda 1982, p. 22.
 9. Ueda 1982, p. 23.
 10. Ueda 1982, p. 9.
 11. Ueda 1992, p. 29
 12. Carter 1997, p. 62.
 13. Yuasa 1966, p. 23
 14. Carter 1997, p. 57
 15. Ueda 1982, p. 25.
 16. Kokusai 1948, p. 247
 17. Ueda 1992, p. 95.
 18. Ueda 1982, p. 26.
 19. Examples of Basho's haiku written on the Tokaido, together with a collection of portraits of the poet and woodblock prints from Utagawa Hiroshige, are included in: Forbes and Henley, 2014.
 20. Ueda 1992, p. 122
 21. Ueda 1982, p. 29
 22. Higginson, William J. The Haiku Handbook, Kodansha International, 1985, ISBN 4-7700-1430-9, p.9
 23. Ueda 1992, p. 138
 24. Ueda 1992, p. 145

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்சுவோ_பாஷோ&oldid=3448479" இருந்து மீள்விக்கப்பட்டது