மஞ்சு பன்சால்
மஞ்சு பன்சால் Manju Bansal | |
---|---|
பிறப்பு | 1 திசம்பர் 1950 தேராதூன் |
தேசியம் | இந்தியர் |
பணியிடங்கள் | உயிர்த்தகவல்நுட்பவியல் மற்றும் பயன்பாட்டு உயிர்தொழில்நுட்பவியல் நிறுவனம், பெங்களூர் |
கல்வி கற்ற இடங்கள் | உசுமானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்து |
அறியப்படுவது | மூலக்கூறு உயிர்இயற்பியல், அமைப்பு & கணிப்பு உயிரியல் |
மஞ்சு பன்சால் (பிறப்பு. திசம்பர் 1, 1950) மூலக்கூறு உயிரியல் இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவுக்கான தத்துவார்த்த உயிரியல் இயற்பியல் குழுவில் பேராசிரியராக உள்ளார். இவர் பெங்களூரில் உள்ள உயிர்த்தகவலியல் மற்றும் பயன்பாட்டு உயிரித்தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநராக உள்ளார்.[1][2]
கல்வி
[தொகு]பன்சால் ஐதராபாத் மற்றும் தேராதூனில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் அறிவியலில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பின்னர் ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களைப் பெற்றார். 1972-ல் பன்சால் முனைவர் பட்டத்திற்காகப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரியல் இயற்பியல் பிரிவில் சேர்ந்தார். உயிரியல் இயற்பியலாளர் கோ. நா. இராமச்சந்திரனின் வழிகாட்டுதலின் கீழ், நார்புரத கொலாஜனின் முச்சுழல் கட்டமைப்பின் தத்துவார்த்த மாதிரியில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். 1977-ல் முனைவர் பட்டம் பெற்றார். இதன்பிறகு, இவர் 1981 வரை இடது சுழல் மற்றும் பிற அசாதாரண டி. என். ஏ. அமைப்புகளில் முனைவர் பட்ட பிந்திய ஆய்வாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் இவர் ஐடெபெர்க்கில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் சகாவாக ஆய்வினை மேற்கொள்ள ஜெர்மனிக்குச் சென்று ஓராண்டு பாக்டீரியாவினைத் தாக்கும் இழை தீநுண்மிகளின் கட்டமைப்பில் பணியாற்றினார்.[2]
ஆய்வு நிதி
[தொகு]பன்சாலுக்கு ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் வருகைதரும் ஆய்வாளர் நிதி மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் நிதியுதவி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், முதுநிலை ஆராய்ச்சி நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவர் அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும், தேசிய சுகாதார நிறுவனம், பெதஸ்தாவின் வருகை தரும் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[2][3]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]பன்சால் 1979-ல் இளம் அறிவியலாளர் பதக்கத்தினை இந்திய தேசிய அறிவியல் கழகத்திடமிருந்து பெற்றார். இவர் 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் கழகம், பெங்களூர் மற்றும் இந்திய தேசிய அறிவியல் கழகம், அலகாபாத் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார் [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biography - Manju Bansal". Retrieved 15 March 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "INSA - Manju Bansal". Archived from the original on 15 March 2014. Retrieved 15 March 2014.
- ↑ "Women in Science" (PDF). ias.ac.in.