மஞ்சள் பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் பை அல்லது மஞ்சப்பை என்பது 1980களின் இறுதிவரை பிரபலமாக இருந்த ஒரு வகை துணிப் பை ஆகும். இப் பைகள் ஆழ்மஞ்சள் வண்ணம் கொண்டவையாக இருந்த காரணத்தால் இந்தப் பெயரைப் பெற்றன. இப் பைகள் பெரும்பாலும் துணிக்கடை, மளிகைக்கடை போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டவையாக இருந்தன. மேலும் திருமண தாம்பூலப் பையாக மஞ்சள் பைகளில் மணமக்கள் பெயர் அச்சிட்டு வழங்கி வந்தனர். இதை மளிகைப் பையாகவும் பள்ளிக்கூடப் பையாகவும் பயணப் பையாகவும் பணப் பையாகவும் பலரும் பலவாறு பயன்படுத்தி வந்தனர்.[1]

இது இரு பக்கங்களிலும் பட்டைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் எளிய பையாகவும் எடையற்றதாகவும் வெறும்பையை கால்சட்டைப் பையில் மடித்து வைத்துக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு இலேசானதாதாகவும் இருக்கும். எண்பதுகளின் இறுதியில் துணிப் பைகளுக்கு மாற்றாக நெகிழிப் பைகள் (polythene bags) பயன்பாட்டுக்கு நுழைந்த பின்னர் இதன் பயன்பாடு நகரப் பகுதிகளில் பெருமளவு குறைந்து, பின்னர் இதைப் பயன்படுத்துவது என்பது நாகரீகமற்றதாக சிலரால் கருதப்படும் நிலை ஏற்பட்டது.

கிராமங்களில் மட்டும் இப்போதும் ஓரளவு பயன்பாட்டில் இந்தப் பைகள் உள்ளன. கிராமத்து மனிதர்களின் குறியீடாக இந்தப் பையை குறிப்பிடும் விதத்தில் மஞ்சப்பை என்ற பெயரில் ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியானது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் நெகிழிப் பயன்பாட்டை (plastic) குறைக்கும் விதத்தில் மக்கள் இந்த 'மஞ்சப்பை'யை மீண்டும் பயன்படுத்த வேண்டுமென விழிப்புணர்வுப் பரப்புரை செய்துவருகின்றனர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஸ்.ராஜகுமாரன் (7 சூலை 2018). "மஞ்சள் பை காலங்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2018.
  2. "'பொருள் தேவை அதிகரிக்கும் போது வாழ்வது கடினமாகிறது': பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக மலர்கிறது மஞ்சள் பை". கட்டுரை. தினமலர். 28 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "மீண்டும் மஞ்சள் பை!". செய்திக் கட்டுரை. தினமணி. 21 பெப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_பை&oldid=3577959" இலிருந்து மீள்விக்கப்பட்டது