மஞ்சள் நீர் விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தக் கட்டுரை மஞ்சள் நீர் விளையாட்டு பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும்.

மஞ்சள் நீர் விளையாட்டு அல்லது மஞ்சள் நீராட்டு என்பது நாட்டுப்புறங்களில் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். மஞ்சள் நீராட்டு அன்று முறைமாமன் மேல் முறைப்பெண்ணும், முறைப்பெண் மேல் முறைமாமனும், திருமணம் ஆனவர்கள் நாத்துணைப் பெண்கள் [1] மீதும், அரைத்த மஞ்சள் கலந்த நீரை ஊற்றி மகிழ்வர். இக்கொண்டாட்டம் மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ் மக்களின் பண்டையகால விழாக்களில் இதுவும் ஒன்று. தமிழ்நாட்டில் பருவப் பெண்களும் ஆண்களும் தன் உரிமையைக் காட்டும் வகையில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவர்.

கொண்டாட்ட விதிமுறைகள்[தொகு]

மஞ்சள் நீர் விளையாட்டில் பெண்கள் ஆண்களின் மீது மஞ்சள் நீர் ஊற்றலாம். ஆனால், ஆண்கள் பெண்கள் மீது ஊற்றுவது கிடையாது. ஆண்கள் பிற ஆண்களின் மீது ஊற்றலாம். பெண்கள் பிற பெண்கள் மீதும் ஊற்றுவது கிடையாது. இவ்விழாவின் போது இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் மீது மட்டும் மஞ்சள் நீர் ஊற்றப்பட மாட்டாது; ஏனைய அனைத்து ஆடவரின் மீதும் மஞ்சள் நீர் ஊற்றப்படும்.

பெரும்பாலும் அண்ணன், தம்பிமார் மீது பெண்கள் ஊற்ற மாட்டார்கள். மச்சான்கள் அல்லது முறை மாமன்கள் மீதே இம்மஞ்சள் நீரை ஊற்றுவர். ஆண்கள் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் மீது இம்மஞ்சள் நீரை ஊற்றி விளையாடுவர். மஞ்சள், தண்ணீர், வேப்பிலை உள்ளிட்டவை இக்கலவையில் இருக்கும். பிற வண்ணங்களைக் கலப்பதும் தற்போது நடைமுறையில் உள்ளது. சில இடங்களில் பிற வண்ணங்கள் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

விழாக் காலம்[தொகு]

வளத்தூர் திருவிழா - மஞ்சள் நீர் விளையாட்டு

மஞ்சள் நீர் விளையாட்டு பல்வேறு நாட்களில், பல்வேறு இடங்களில் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டாலும் கோவில் விழாக்களின் போது மட்டுமே அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஊர்த்திருவிழா முடிந்த பின்னர் சாமியைக் குடிவிடும் நாளில் இது நடைபெறும். சில ஊர்களில் தைம்மாதம் மூன்றாம் நாள், காணும் பொங்கல்[2] சில இடங்களில் அம்மன் திருவிழாக்களிலும்[3] திருநாளைக் குடி விடுவதாக எண்ணி மஞ்சள்நீர் ஊற்றுவதும் உண்டு. ஈரோடு மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாரியம்மன் கோவில் விழாவின் போது, கம்பம் எடுக்கும் விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.[4] பிற உள்ளூர் திருவிழாக்காலங்களிலும்[5] மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. இவ்விழா தனி விழாவாக இல்லாமல்[4][2][3] கடவுளின் உருவச்சிலை அல்லது கடவுள் சார்ந்த பொருட்களின் ஊர்வலத்தின் போது இவ்விழா கொண்டாடப்படுகிறது.[4][2][3]

வண்ணங்கள்[தொகு]

தற்போது இவ்விழாவில் மஞ்சள் மட்டுமல்லாது பிற வண்ணங்கள் தரக்கூடிய பொடிகளையும் தண்ணீரில் கலந்து ஊற்றுகின்றனர். வட மாநிலங்களில் நடைபெறக்கூடிய ஹோலி பண்டிகை இதனை ஒத்தவகையில் உள்ளது. மஞ்சள்நீரைப் பீச்சனாங்குழாய் மூலம் பீச்சி விசிறுவதும் உண்டு. சிலர் மஞ்சள் நீரில் பாக்குச் சாயம் கலந்தும் விசிறுவர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. நாவால் பேசிக்கொண்டிருக்க உதவும் துணைப் பெண்கள்
  2. 2.0 2.1 2.2 "கிணத்துக்கடவில் சலங்கை மாட்டுக்கு மஞ்சள் நீராட்டு விழா". பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  3. 3.0 3.1 3.2 "உடன்குடி அம்மன் கோயிலில்: இன்று மஞ்சள் நீராட்டு விழா". பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  4. 4.0 4.1 4.2 "மாரியம்மன் கோவில்களில் கம்பங்கள் ஆற்றில் விட்டு மஞ்சள் நீராட்டு கோலாகலம்!". பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  5. "அலகுமலை முருகன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா". பார்த்த நாள் நவம்பர் 17, 2012.