மச்சாசனம்
Appearance
மச்சாசனம் என்ற யோகாசனம் செய்பவர் மீன் நீந்துவது போன்ற நிலையில் இருப்பார். மச்சம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மீன் என்ற பொருளும் உண்டு. இந்த மீன் நிலையில் நீரில் நாம் இருந்தால் கை கால் உதவியின்றி அப்படியே மிதக்க முடியும். அதனால்தான் இது மச்சாசனம் என்று பெயர் பெற்றுள்ளது.[1][2][3]
செய்முறை
[தொகு]- பத்மாசனத்தில் உட்காருவதுபோல் உட்காரவேண்டும். உங்கள் முழங்கால்கள் தரையில் படுமாறு இருக்கவேண்டும்.
- முழங்கைகளைக் கொண்டு மெதுவாக பின்னால் சாயவேண்டும். பிறகு அப்படியே முதுகு கீழே பட படுக்கவேண்டும். இந்த நிலையை மேற்கொள்ளும்போது உங்கள் கைகள் மற்றும் முழங்கைகளை ஆதரவிற்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
- கைகளை பின் பக்கமாக தலையை நோக்கி கொண்டு வரவேண்டும். இப்போது உள்ளங்கைகளை அப்படியே தரையில் படுமாறு வைக்கவும். உங்களின் அந்தந்தந்த தோள்களுக்கு இணையாக கைகள் எதிர் முகமாக இருக்கவேண்டும்.
- உள்ளங்கைகளையும் முழங்கால் முட்டிகளையும் கீழ் நோக்கி அழுத்தவும். உங்கள் வயிறு மற்றும் மார்பையும் முன்னோக்கி இருத்தவும்.
- இடுப்பு, முதுகு, தோள்களை தரையிலிருந்து உயர்த்தவும். உங்கள் உடலை கைகள் தாங்கவேண்டும்.
- முதுகுத் தண்டை வளைக்கவும். இதே நேரத்தில் உங்கள் கழுத்து, தலையை பின்புறமாக நன்றாக வளைக்கவும்.
- தரையில் உங்கள் தலை செங்குத்தாக வைக்கப்பட வேண்டும். உங்கள் கைகளை முன்னால் கொண்டு வரவும். உங்கள் பின் தொடைகளை கைகளால் பற்றவும்.
- முழங்கைகளை ஒரு நெம்புகோலாக பயன்படுத்தி வயிற்றையும் மார்பையும் தூக்கவேண்டும். இது முதுகுத் தண்டை வளைக்க உதவுவதுடன் தலையை தரையில் முறையாக வைக்கவும் உதவுகிறது.
- கட்டைவிரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஒரு முடிச்சு போல் ஆக்கப்பட்டு எதிரெதிர் முன்னங்கால்களை மெதுவாக இழுக்க வேண்டும். இதே நிலையில் வசதியாக ஒரு 10 வினாடிகளுக்கு நீடிக்கவும்.
- மூச்சை சாதரணமாகவும் சீராகவும் விட வேண்டும். பின்பு மீண்டும் மெதுவாக முதலில் கூறிய பத்மாசன நிலைக்கு திரும்பவும்.
பயன்கள்
[தொகு]- மார்பு விரிவடையும்.
- நுரையீரல் சிறப்பாக செயல்பட்டு புதிய பிராண வாயுவை தக்கவைக்கும்.
- முதுகுத் தண்டு செயல் திறன் உத்வேகம் பெறும்.
- தண்டுவட எலும்புகள், கழுத்துப் பகுதிகள் வளைந்து கொடுக்கும் தன்மை அதிகரிக்கும். மேலும் அது விரிவாகும்.
- தினசரி உட்காரும் தவறான முறையினால் ஏற்படும் முதுகுத் தண்டு வளைவுகளை சரி செய்யும்.
எச்சரிக்கை
[தொகு]- நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வலி இருந்தால் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yoga Journal - Fish Pose". Retrieved 2011-04-09.
- ↑ Maehle, Gregor (2007). Ashtanga Yoga: Practice and Philosophy. New World Library. p. 120. ISBN 978-1-57731-606-0.
- ↑ Joshi, K. S. (2005). Yoga In Daily Life. Orient Paperbacks. p. 70. ISBN 978-81-222-0049-2.