மசுதா காத்துன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மசுதா காத்துன் (Masuda Khatun) ஒரு முன்னோடி வங்காள பெண்ணியவாதி மற்றும் மதச்சார்பற்றவராவர்களுள் ஒருவராவார். காசி மகமுதுர் ரகுமானை திருமணம் செய்த பிறகு முசம்மத் மசுதா காத்துன் என்று அறியப்பட்ட இவரது பெயர் திருமதி எம் ரகுமான் என்ற புனைப்பெயராக மாறியது.[1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

காத்துன் 1885 ஆம் ஆண்டு ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரித்தானிய இந்தியப் பேரரசின் வங்காள மாகாணம் ஊக்லி மாவட்டத்தை தளமாகக் கொண்ட ஒரு வழக்கறிஞராவார். இவரது காலத்தில் இருந்த மற்ற முசுலீம் பெண்களைப் போலவே காத்துனும் வீட்டில்தான் பாடம் படித்தார். 11 வயதில் இவருக்கு கல்கத்தாவை தளமாகக் கொண்டு பதிவாளராக இருந்த மகமுதுர் ரகுமானுடன் திருமணம் நடந்தது. இவரது சமகால பெண்ணியவாதி மற்றும் அடிக்கடி தொடர்பு கொள்ளும் பேனா நண்பர் பேகம் ரோகேயா சகாவத் ஒசைன் ஆவார். [3] இவர் தெற்கு ஆசியாவில் பெண்களின் விட்டுதலைக்காக குரல் கொடுத்தவர் ஆவார். பெண்ணியவாதியாகவும், எழுத்தாளராகவும்,கல்வியாளராகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த ரோக்கியாவையும் அவருடைய படைப்புகளையும் மசுதா காத்துன் வெகுவாகப் பாராட்டினார். இருவரும் அடிக்கடி கடிதங்களை எழுதி பரிமாறிக் கொண்டார்கள்.

தொழில்[தொகு]

மசுதா காத்துன் பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்ணியம் பற்றி ஏராளமாக எழுதினார். பழமைவாத முசுலிம்களை சமரசமின்றி விமர்சித்தார். இசுலாமியர்களை விமர்சிக்க தன் எழுத்துக்களில் புத்திசாலித்தனத்தையும் முரண்பாட்டையும் நுட்பமாகப் பயன்படுத்தினார். இவரது பணி முற்போக்கு முசுலீம்களால் பாராட்டப்பட்டது.

காசி நசுருல் இசுலாத்தால் வெளியிடப்பட்ட தும்கேது என்ற பத்திரிகைக்கு மசுதா தொடர்ந்து பங்களிப்பவராக இருந்தார். வங்காளதேசத்தின் எதிர்கால தேசிய கவியாகவும் புரட்சியாளராகவும் கருதப்பட்ட காசி நசுருல் இசுலாம் தனது கவிதையான பிசர் பாங்க்சியை இவருக்கு அர்ப்பணித்தார். அவர் மசுதாவின் எழுத்துகளை ரசித்தார். மசுதாவின் பணி மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். ஓர் உத்வேகத்தின் ஆதாரமாகக் கருதினார். மா என்று இவரை அன்போடும் அழைத்தார்.

முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஒற்றுமைக்காக உழைத்த ஓர் உறுதியான மதச்சார்பற்றவாதியாக மசுதா காத்துன் திகழ்ந்தார். திருமதி எம் ரகுமானின் பெண்களைப் பற்றிய பிரச்சினைகளை அலசுதலும்,பெண்களின் கூலி வேலைகளை ஆதரிப்பதும் இவருடைய குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

பர்தா அணியாமல் திரைப்படங்களுக்கும் பிற கூட்டங்களுக்கும் சென்று வந்தார். பொதுவெளியில் பர்தா அணியாமல் இசுலாமியப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற விதிக்கு இவரது செயல்பாடு மாறாக இருந்தது. ஒரு விபச்சார மறுவாழ்வு மையத்தை உருவாக்கவும் உதவினார். [3] இவர் பர்தாவுக்கு எதிராக எழுதினார். இது இசுலாத்தில் பெண்கள் முக்காடு மூலம் ஒதுக்கி வைக்கப்பட்ட விதத்தை விமர்சித்தது.

திருமதி எம் ரகுமான் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் இந்திய ஆண்களின் காலனித்துவ அவலநிலை பற்றி குரல் எழுப்பினார். பெண்கள் பொருளாதார சார்பற்ற தன்மையைக் கொடுக்காவிட்டால் சுதந்திரம் அர்த்தமற்றது என்று இவர் எழுதினார். இவருடை எழுத்துகளின் அம்சங்கள் மிகவும் தைரியமானவையாக இருந்தன

இறப்பு[தொகு]

மசுதா காத்துன் 1926 ஆம் ஆண்டு இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு காசி நசுருல் இசுலாம் இவருக்கு ஒரு புத்தகத்தை அர்ப்பணித்தார். அப்புத்தகத்தில் மசுதாவிற்கு அக்னி நாகினி (தீ சர்ப்பம்) என்ற பட்டத்தை வழங்கினார். இவரது கணவர் 1927 ஆம் ஆண்டு சாணச்சூர் என்ற தலைப்பில் மசுதாவின் சேகரிக்கப்பட்ட படைப்புகளை வெளியிட்டார். [3]

குறிப்புகள்[தொகு]

  1. Sarkar, Mahua (2010) (in en). Visible Histories, Disappearing Women: Producing Muslim Womanhood in Late Colonial Bengal. Duke University Press. பக். 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0822389033. https://books.google.com/books?id=SR6uC5CTYaMC&pg=PA261. 
  2. Hossain, Anowar (2003) (in en). Muslim women's struggle for freedom in colonial Bengal: (1873-1940). Progressive Publishers. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180640308. https://books.google.com/books?id=84JuAAAAMAAJ&q=Mrs+M+Rahman. 
  3. 3.0 3.1 3.2 Amin, Sonia. "Khatun, Masuda". Banglapedia (in ஆங்கிலம்). Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசுதா_காத்துன்&oldid=3273906" இலிருந்து மீள்விக்கப்பட்டது